குறளின் கதிர்களாய்…(55)
-செண்பக ஜெகதீசன்
உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சொரிந் தற்று. (திருக்குறள்:718 – அவையறிதல்)
புதுக் கவிதையில்…
கற்றறிந்தவர்
அவையறிந்து அவர்முன்
கருத்துச் சொல்…
அது,
பயிர்வளரும் பாத்தியில்
நீர் பாய்ச்சுதல் போன்றதே…!
குறும்பாவில்…
பயிர் வளரும் பாத்திக்கு
நீர் பாய்ச்சுதல் போன்றது,
அறிவுடையோர் அவையிலுன் சொல்…!
மரபுக் கவிதையில்…
வெற்று நிலத்தில் நீர்பாய்ச்சி
வேலை செய்வதில் பலனில்லை,
சுற்றியே வரப்பது அரணாகிச்
செழிப்பாய்ப் பயிர்வளர் பாத்தியதில்
வற்றா வகையில் நீர்பாய்ச்ச,
விளையும் பயிரது நிறைவுடனே,
கற்றே உணர்ந்தோர் அவைதனிலே
களறும் சொல்லிந் நீரொப்பதே…!
லிமரைக்கூ…
பயிர்வளர் பாத்தியில் பாய்ச்சிடணும் நீர்,
பாசனம் இதனைப் போன்றதே
சொல்லதை அவையறிந்து சொல்வது பார்…!
கிராமிய பாணியில்…
பாச்சணும்பாச்சணும் தண்ணிபாச்சணும்
பயிருவளர தண்ணிபாச்சணும்,
பாத்தியில தண்ணிபாச்சணும்
பாழாவாம தண்ணிபாச்சணும்
பயிரப்பாத்து தண்ணிபாச்சணும்..
அதுபோல,
பேச்சிபேசணும் பேச்சிபேசணும்
பெழயில்லாம பேச்சிபேசணும்,
படிச்சறிஞ்சவன் சபயப்பாத்து
பேச்சிபேசணும் பேச்சிபேசணும்…!
சபை அறிந்து பேசச்சொல்லும் கருத்து இன்று அனைத்துவகையிலும் நனறாக வந்துள்ளது.
குறளின் கதிர்களுக்குக் கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
அன்பு நண்பர் அமீர் அவர்களுக்கு, மிக்க நன்றி…!