-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

கடும்விரதம் பல இருந் தாய்
கருவறையில் எனைச் சுமந் தாய்
கருணைமழை தனைப் பொழிந் தாய்
காதலுடன் எனை வளர்த் தாய்!                             momchild

அரும்பொருளாய் எனை நினைத் தாய்
அமுதெனப் பால் தனைக்கொடுத் தாய்
பெரும்பிணிகள் தனைத் தடுத் தாய்
பித்தாகி எனை வளர்த் தாய்!

கரும்பெனவே எனை நினைத் தாய்
விரும்பியெனை தினம் அணைத் தாய்
துரும்புவிழா எனைக் காத் தாய்
தூமணியாய் நீஇருந் தாய்!

தொட்டிலிலே தூங்கிட வைத் தாய்
துளிஅழுதால் நீதுடித் தாய்
கட்டிலிலே போட மறுத் தாய்
கைகளில் தாங்கியே இருந் தாய்!

பொட்டிட்டு அழகு பார்த் தாய்
பூவாக எனை நினைத் தாய்
வட்டநிலா என நினைத் தாய்
வாஞ்சையுடன் எனைப் பார்த் தாய்!

முகம்பார்த்து முறுவல் தந் தாய்
முத்தெனவே எனை நினைத் தாய்
நகம்குத்தும் என நினைத் தாய்
நயமுடனே அதைக் கடித் தாய்!

கண்பட்டுவிடும் என நினைத் தாய்
கன்னமதில் பொட்டும் வைத் தாய்
புண்பட்டுவிடும் என நினைத் தாய்
புழுதிபடா எனைக் காத் தாய்!

பதமாக உணவு தந் தாய்
பார்வைக்குள் எனை வைத் தாய்
நிலைகுலையா எனைப் பார்த் தாய்
நிம்மதி நான் என நினைத் தாய்!

சொத்தாக எனை நினைத் தாய்
சுவையாகப் பல கொடுத் தாய்
முத்தாக எனை நினைத் தாய்
முழுநிலவாய் எனை வளர்த் தாய்!

அருள்தந்தாய் பொருள்தந்தாய்
ஆசியும் கூடத் தந் தாய்
பெருகிடவே அன்பு தந் தாய்
பேரளும் எனக் கீந் தாய்!

மாங்கனியாய் எனை நினைத் தாய்
மாமருந்தாய் எனை நினைத் தாய்
தாங்கிநின்று எனைப் பார்த் தாய்
தயவானே நீயே தாய்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தயவான நீயே தாய் !

 1. உனதாய் எனதாய் இவ்வுலகில் 
  ஒன்றுமில்லை என் தோழா..
  ஒவ்வொரு உயிரும் தோன்றுமிடம் 
  அதுதான் அறிவோம் அன்புத் தாய்!

  கவிதை நடையில்  பா விரித்தாய் 
  கனிந்த மொழியில் தரு வித்தாய்..
  கருவாய் உருவாய் நமைச் சுமந்து 
  காலம் முழுதும் வாழ்வளித்தாள்!!

  அருமை பெருமை சொன்னாலும் 
  அன்னையின் உயரம் இன்னும் வரும்!
  பெருகும் புனலாய்  நீ வடித்த 
  இனிய கவிதை இதயம் தொடும்!!

  அன்புடன்….
  காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published.