ஊர்க் காதல்!
-பத்மநாபபுரம் அரவிந்தன்
தடகளப் போட்டியில் ஓடிவந்தவன்
போல் துடித்ததென் இதயம்
முதலில் உன்னைப் பார்த்ததும்…
உன் கண்களால் என் நெஞ்சுள்
நீண்ட நாட்களெரியும் ஒரு
கற்பூரத்தை ஏற்றினாய்…
விளக்கமுடியாப் புல்லரிப்பும்
புது சுகமும் பரவியது
உனைப் பார்த்தபோது…நீ பார்த்தபோது…
எடுத்த பிறவிக்குப் பயனென்று
உனை நினைத்தேன்…
உன்னிடம் பேசவென்று சேர்த்து
வைத்த வார்த்தைகள் பேசாமலேயே
நெஞ்சையடைத்து நிறைந்தது…
உனக்கும்கூட அப்படியிருந்திருக்கலாம்
எனவேதான், போலி இருமலால்
அவற்றை வெளியேற்றினாய் போல…
எத்தனைக் கூட்டமிடையிருந்தாலும்
நம் கண்கள் சந்திக்கமட்டும்
தவறியதேயில்லை…பேசுவதற்குக்
கிடைத்த சந்தர்ப்பங்களையும், நேரங்களையும்
நாம் பார்வையாலேயே கொன்று போட்டோம்…பேசாமலேயே…
முதன்முதலாய் நீ பேசியபோது
பல முத்துக்கள் உதிர்ந்தன
என்பதாய் நினைவு…
நீ கேட்ட,” சுகமா?” என்ற
கேள்விக்குப்பின் நான் சுகமாகவேயில்லை…
நீ பிடித்திருக்கிறதென்று
சொன்ன பிற்பாடுதான் நான்
மீண்டும் சுகமானேன்…!
எல்லோரையும் தொட்டுச் சென்றிருக்கும்
தென்றல் காற்றைப் போல…
எல்லோருமே அகத்தில் ஒளித்திருப்போம்
இதயத் துடிப்பைப் போல…
எல்லோருமே சொல்லா திருந்திருப்போம்
நீரில் மூழ்கியது போல…