சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.

இந்த இனிய மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கை என்பது மிகவும் விசித்திரமானது. ஒரே சூழலில் ஒரே வகை வசதிகளுடன் ஒரே வாழ்க்கை முறையில் வாழும் இருவரின் வாழ்க்கை முன்னுக்குப் பின்னாக அமைந்து விடுவதும், வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வசதிகளுடன் வந்தவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக அமைந்து விடுவதும் நான் இயற்கையாக… கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்.

மிகவும் அழகான திட்டத்துடன் தாம் போகும் பாதையைத் தீர்க்கமாக தீர்மானித்துக் கொண்டு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவோர் எத்தனையோ பேர் தாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு வாழ்க்கையை அடைந்து விடுவதை நான் பல இடங்களில் கண்டுள்ளேன்.

அதேசமயம் எந்த வித இலக்குகளும், திட்டமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்போரைப் பார்த்து இவர்களது வாழ்க்கை இப்படித்தான் இருக்கப் போகிறது என்று எண்ணி விட்டு பல வருடங்களின் பின்னால் அவர்களைச் சந்திக்கும் போது நாம் முற்றிலும் எண்ணியிராத ஒருவகை வாழ்க்கையில் அவர்களைச் சந்திக்கும் நிலமைகளும் உண்டு.

அதற்காக வாழ்வில் எதுவித இலக்குகளுமின்றி, லட்ச்சியங்களுமின்றி வாழ்வதுதான் முறை என்பதல்ல எனது வாதம். வாழ்க்கைச் சக்கரத்தின் சுழலில் சிக்கும் போது எங்கே எப்படி வெளிவருகிறோம் என்பது சிலசமயங்களில் எமது கைகளில் தங்கியிருப்பதில்லை.

இங்கே நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது ஒரு இளம் தாய் நம்பிக்கையோடு தனது வாழ்க்கைப் பயணத்தை தான் திட்டமிட்ட திசையில் செலுத்தி அதி வெற்றி கண்ட ஒரு சம்பவமே !

எதற்காக இது என்கிறீர்களா?

நம்மில் பலர் தாயானதும், முதிய வயதினை அடைந்ததும் நாம் ஏதோ செல்லாக்காசு என எண்ணி நம்மை நாமே ஒதுக்கி வைத்து விடும் மனநிலையை அடைகிறோம்.

உலகில் பிறந்த அனைவருமே இவ்வுலகில் ஏதோ ஒரு வகையில் மிகவும் திறமையுள்ளவர்களாகவே இருக்கிறோம். வாழ்வின் மத்திய பருவத்தை அடைந்து விட்டோம் என்பதற்காக நமது உபயோகமான பருவம் முடிந்து விட்டது என்று எண்ணக் கூடாது.

rclarke2ரிபெக்கா கிளார்க் (Rebecca Clarke) எனும் ஒரு இளம் தாய் தன்னுடைய மகள் பள்ளிக்குச் சேர்ந்ததும், வெறுமனே தன்னுடைய மகளை பள்ளிக்குக் கூட்டிச் செல்வதும், பள்ளியிலிருந்து திரும்பக் கூட்டி வருவதும் தான் தன்னுடைய பணி என்று இருந்து விடவில்லை.

தன்னுடைய மகள் படிக்கும் அந்தப் பள்ளியிலே தானும் ஏதாவது வகையில் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அதே பள்ளியில் சம்பளம் வாங்காமல், மதிய இடைவேளையின் போது சிறு குழந்தைகள் தமது உணவை உண்ணும் போது மேற்பார்வை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

திருமணம் ஆகி குழந்தை பெறும் முன்னர் ஒரு கணணி நிறுவனத்தில் பணிபுரிந்த அவர் குழந்தை பிறந்ததும் அந்தப் பணியை விட்டிருந்தார்.

குழந்தைகளோடு பழகும் போதும், அவர்கள் புத்தகங்களை வாசிக்கும் போது அதனால் அவர்கள் அடையும் திருப்தியைக் கண்ட அவர் தான் தனது எதிர்காலத்தை இக்குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக செலவு செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

விளைவு !

rclarkeசும்மா இருக்கவில்லை குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் பயிற்சியை பிரத்தியேகமாகப் பயின்றார்.

நாளைய தலைமுறைக்கு சிறந்த முறையில் அடிப்படை அமைத்துக் கொடுக்கும் பணியில் தன்னை அமர்த்திக் கொள்ள வேண்டும் என்று இலட்சியத்தை வகுத்துக் கொண்டார்.

என்னே ஆச்சரியம் அடுத்த வருடத்தில் அதே பாடசாலையில் 5 அல்லது 6 வயதுக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் பணியிலமர்ந்தார்.

வெறுமனே ஊதியத்திற்காக மட்டும் உழைக்கும் ஒரு வாத்தியாரம்மாவாக இருக்காமல் தனது மனத்திருப்திக்காக குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை சீராக கொடுக்க முனைந்ததால் அவரது முன்னேற்றம் துரித வேகத்தில் இருந்தது.

சாதாரண ஆரம்பக்கல்வி ஆசிரியராக பணியிலமர்ந்த ரிபெக்கா கிளார்க் அற்புதமான ஆசிரியராக நிர்வாகத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.

rclarke1விளைவாக, மதிய உணவுவேளை மேற்பார்வையாளராக தனது லட்சியப்பயணத்தை ஆரம்பித்தவர் அப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

உண்மை. உன்னத உயர்ந்த லட்ச்சியம், அயராத உழைப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை இவைகளை தமது அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டவர்கள் தமது இலட்சியப் பயணத்தில் நிச்சயம் வெற்றி அடைவார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமா ?

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

 

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.