இணையமும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்

0

— இரா.நாகராஜன்.

முன்னுரை:
இருபத்தொன்றாம் நூற்றாண்டினை தகவல் தொழில்நுட்ப யுகம் என்று அழைக்கின்றோம். அவ்வுலகத்தில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மனிதனும் மொழியும் தன்னை அவற்றில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழ் மொழியினை இந்நூற்றாண்டுக்கேற்ப வளர்ச்சியடைய செய்வது இன்றைய இளஞர்களின் கடமையாகும். ஓலைச்சுவட்டில் தழைத்த தமிழனாது கணினியோடு இணைந்த இணையத்தில் தளர்நடையிட்ட தமிழ்மொழி இன்று தரணியில் தமிழ் சமூகங்களை இணைத்துள்ளது. இதற்கு இணையப் பக்கங்கள், வலைப்பூக்கள், இணைய நூலகம், இணைய அகராதி, இணைய இதழ்கள் போன்றவை மிக முக்கிய பங்காற்றி வருகின்றது.

இணையைம் வரையறை:
இன்றைய நவீன உலகின் முக்கிய பங்காற்றிவருவது இணையமாகும். இணையத்தை பயன்படுத்ததெரியாதவன் குருடன் என்றே கூறலாம். “இணையம் என்பது வலையமைவுகளின் வலையமைவு ஆகும். சிறியனவாகவும் பெரியனவாகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன”1 (தகவல் தொழில்நுட்பம், ப.புனிதா, ப.53). உலகம் முழுவதிலுமுள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னனு வலையில் சங்கிலிப் பிணைப்பாக இணையச் செய்வதுதான் இணையம் எனப்படும். “International Netwrok” என்பதின் சுருக்கமே இன்டர்நெட் ஆகும். இணையம் என்பது World Wide Web என்பர். இதனை W3 என்றும் அழைக்கலாம்.

ஊடகம்:
ஊடகங்கள் என்னும் சொல் பரவல், செய்தித்தொடர்பு சாதனம் என்கின்ற பொருளைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் உலகிலுள்ள மக்களை ஏதாவது ஒரு வகையில் தொடர்புபடுத்தும் சாதனங்களை ஊடகம் அல்லது மக்கள் தொடர்புச் சாதனம் என்று அழைப்பர். “பெருமளவுக்கு மக்களுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வடிவமைக்கப்பட்ட ஊடகத்தொடர்புச் சாதனங்கள் மக்கள் தொடர்புச் சாதனங்கள் என்று அழைக்கப்படகின்றன”2 (சமூக அறிவியல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், ப.150) ஊடகங்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அதனை, 1. அச்சிடப்படும் ஊடகங்கள் (செய்தித் தாள்கள், பத்திரிக்கை, புத்தகங்கள்) 2.மின்னணு ஊடங்கள் (வானொலி, தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு சாதனங்கள், இணையம்)

http://www.dreamstime.com/-image13169118தகவல் தொடர்பியலும் இணையமும்:
உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணையதளம் உதவுகிறது. இவற்றின் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கக் கூடிய நிகழ்வுகளை அந்தந்த மொழிகளின் மூலமும், பிறமொழிகளின் மூலமும் செய்திகளாக வெளியிடுகின்றனர். இதன் மூலம் அந்தந்த பகுதியில் நடக்கும் நிகழ்வுகளையும் அந்தந்த மொழிகளில் தகவல்களை உடனுக்குடன் மற்றமொழி பேசும் மக்களும் அறிந்துகொள்ள இணையம் உதவுகின்றது. அவ்வாறு தகவல்கள் மூலம் மூலத்தரவுகளை மிகவும் கவனமும் அதன் மையக்கருத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தெளிவாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பதுதான் சிறந்த தகவல் தொடர்பாக அமையும். ஆரம்ப காலத்தில் புலவர்களும், மன்னர்களும் தமிழிலக்கியத்தினை ஓலைச்சுவடி, முரசு, கல்வெட்டு, செப்பேடுகள் போன்றவற்றின் மூலமாக பதிவுசெய்தனர். ஆனால் இன்றைய காலத்தில் புத்தகம், செய்தித்தாள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, தந்தி, இணையதளம், குறுஞ்செய்தி, வலைப்பூக்கள் போன்றவற்றின் மூலம் தகவல்களை பெறலாம்.

இணையமும் பங்களிப்பும்:
ஓலைச்சுவடிகளின் வாயிலாகவும், முன்னோர்களின் குறிப்புகளின் மூலமாகவும் சங்ககால மக்களின் வரலாற்றினை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் இன்றோ உலகெங்குமுள்ள தமிழர்களின் வரலாற்றினை அடுத்த நிமிடமே நாம் அறிந்துகொள்ள இணையத்தின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக அமைகின்றது. அவற்றினால் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவைகள் இணைய இதழ்கள், இணைய வானொலிகள், இணைய தொலைக்காட்சிகள், இணையப்பக்கங்கள், இணையப் பல்கலைக்கழகம், இணைய நூலகம், சமூக வளைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவைகள் ஆகும்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்:
உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைக்கும் பாலமாக 17.02.2001 அன்று தொடங்கப்பட்டது. தமிழுக்காக அன்று தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்கட்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், தமிழர் வரலாறு கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்த கொள்ளவும், வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அவற்றில் தமிழ்க் கல்வியை அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை தமிழ் இணைய பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதன் கல்வித்திட்டம் ஆறுநிலைகளாகச் செயல்படுகிறது. அவை 1. மழலைக்கல்வி, 2. சான்றிதழ்க் கல்வி, 3. பட்டயக் கல்வி, 4. பட்ட மேற்படிப்பு, 5. ஆய்வு இவை தவிர 6. பயணியர் தமிழ், 7. சிறப்புக் கல்வித் திட்டங்கள் ஆகியனவும் உள்ளன.

மின் நூலகம்:
மின் நூலகத்தினை தமிழஞர்களின் ஆர்வம், தமிழ் அமைப்புகளின் முயற்சி, தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் செயல்பாடு இவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சியால் தமிழ் இலக்கணம், இலக்கியம், சமயம், ஆராய்ச்சி, தமிழ்-ஆங்கில அகராதி, நிகண்டுகள் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம், மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம், நூலகம் திட்டம் , சென்னை நூலகம், தமிழ் நூலகம் போன்றவைகள் மூலம் தமிழ் மொழியானது என்றும் பரணியில் தவழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இணைய இதழ்கள்:
தமிழ் மொழியில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருநூறுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு முதன் முதலாக இணையத்தில் மலர்ந்தது திண்ணை வார இதழாகும். இதற்கு அடுத்த நிலையில் தேனீ இதழாகும். தட்சு தமிழ்.காம், பதிவு.காம், தமிழ்சினிமா.காம், தமிழ்ஈ.காம், நிதா்சனம்.காம், வீரகேசாரிஆன்லைன்.காம், யாழிணையம், அறுசுவை, தமிழன் எக்சுபிரசு, தமிழ்நெட், தமிழ்க்கூடல்.காம், சினிமாஎக்ச்பிரசு, தேனி.இலங்கை.காம், தமிழ்மணம், தமிழ்பிலிம்கிளப், புதினம், பதிவுகள் கனடா மாத இதழ், சங்கதி, அதிர்வு, சுடரொளி, தமிழஆர், சுவிசுமுரசம், மட்டுஈழநாதம், பரபரப்பு, முழக்கம், கனடாமுரசு, சுதந்திரம், ஈழமுரசு, ஈரநாதம், தமிழ்நாதம், லங்காசிறீ, தமிழ்தகவல்மையம், சுரதா, தமிழ்நியூசு.டிகே, சற்றுமுன், வணக்கம்மலேசியா, அலைகள், தென்செய்தி, நோர்வேதமிழ், ஈழதமிழ், நெருடல், தமிழ்விண், விருபா, சோதிடபூமி, குவியம் கனடா மாத இதழ், நாதம், தமிழோவியம் இந்தியா மாத இதழ், அப்பால்தமிழ், பிரான்ஸ் இதழ், வார்ப்பு, நெய்தல், கவிமலா் இந்தியா, இளமை, தமிழமுதம், நிலாச்சாரல், தமிழம், எழில்நிலா, வானவில், தமிழ்த்திணை, திசைகள், அம்பலம், ஆறாம்திணை, மரத்தடி, தமிழெழுதி, தமிழ்முரசு, அமுரசுரபி, கலைமகள், தமிழகம்.காம், மஞ்சரி, ஈழவிசன், தமிழ்ஆசுதிரேலியா, எரிமலை, இன்தாம், வரலாறு, மொழி, செம்பருத்தி, தமிழமுதம், தாயகப்பறவைகள், கீற்று, சூரியன், திண்ணை, புதுச்சேரி.காம், உண்மை, புதுவிசை, தமிழரங்கம், தமிழ்வாணன், வல்லமை, தமிழகம்.நெட் போன்ற பல்வேறு இதழ்கள் இணையத்தில் வெளிவந்து தமிழ் மொழிக்கு பெரும்பங்கினை ஆற்றி வருகிறது.

முடிவுரை:
இணையமானது இன்றைய காலகட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சியினை மக்களிடம் தகவல்களை மிகவிரைவாகவும், மிகக்குறைந்த நேரத்திலும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மனிதன் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னுடைய நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்களை புதிய உத்தியை கையாள்கிறானோ அதுபோல கால மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மொழியும் தன்னை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்ல இணையத்தோடு சேர்ந்து தன்னுடைய வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய பங்கு வகிப்பது ஊடகமேயாகும்.

இரா.நாகராஜன்
பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை
அரசு கலைக் கல்லூரி,
திருச்சி – 22

படம் உதவி: http://www.informationweek.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.