— கலைவாணன். 

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று கேள்வி எழுப்பி அதற்கு விடை சொன்ன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., என்னுடைய மனத்தில் மட்டும் நின்றவர் அல்ல… கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் இன்றும் கொலுவீற்றிருப்பவர் அந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஏனென்று காரணங்களை யோசிக்க வேண்டுமா என்ன…? காரணங்களை விஞ்சிய பூரணணாயிற்றே அவர்! முழு நிலவு போன்ற முகம், கவர்ந்திழுக்கும் விழிகள், கனிவான சிரிப்பு, எந்த நிறத்தில் ஆடை அணிந்தாலும் பொருந்துகிற செக்கச் சிவந்த உடல்… இப்படி பார்த்ததுமே பிடித்துப் போகிற உருவம் படைத்தவரல்லவோ நமது பொன்மனச் செம்மல்.

‘மாதா வயிறெரிய வாழா ஒருநாளும்’ என்றொரு பழைய மொழி சொல்வார்கள். அன்னையின் அன்பைப் பெறாத வாழ்வு வாழ்வாகவே இராது. ‘பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப்பட வேண்டும்… உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்’ என்று சிறுவனுக்கு அறிவுரை கூறிய வாத்யார் தன் அன்னையைத் தெய்வமாக வணங்கி வந்தவராயிற்றே! தாய்க்காக தன் இல்லத்தில் தனிக் கோயிலே கட்டி வணங்கியவராயிற்றே… ‘தாயில்லாமல் நானில்லை’ பாடலில் மட்டுமா அன்னையின் பெருமையைப் போற்றினார்…? தன் அனைத்துப் படங்களிலும் அம்மாவின் வார்த்தையை எந்தச் சூழ்நிலையிலும் தட்டிடாத தனயனாக அல்லவோ வாழ்ந்து காட்டினார். இது ஒன்றே போதாதா மக்கள் மனத்தில் அவர் நிற்பதற்கு…?

mgr2பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தரும் திரைப்படங்களாக அவருடைய படங்கள் அமைந்தாலும் அதிலும் கண்ணியம் காத்தவர் வாத்யாரையன்றி வேறு எவர் உளர்…? கதாநாயகன் ஒரு அடி அடித்தால் வாயிலும் மூக்கிலும் ரத்தம் கக்கி, இருபத்தைந்து அடி தூரம் வில்லன்கள் பறந்து விழுகிற இன்றைய சண்டைக்காட்சிகளைக் கண்டு துன்புற்ற கண்களுக்கு, ஒரு துளி ரத்தம் சிந்தினாலே பெரிதெனக் கருதும், கலைநயம் மிக்க வாத்யாரின் சண்டைக் காட்சிகள் ஒப்பற்ற விருந்தன்றோ..!

இதைத் தவிரவும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.. வில்லன் இவர் குடும்பத்தையே அழித்திருந்தாலும், எத்தனை கொடுமைகள் செய்திருந்தாலும்கூட தன் எந்தப் படத்திலும் வாத்யார் வில்லனைக் கொல்வதாகக் காட்சிகள் இருக்காது. கிளைமாக்ஸில் ஒன்று வில்லனை மனம் திருந்தியவனாக்கி மன்னிப்பார் அல்லது சட்டத்தின் பிடியில் ஒப்படைப்பார். அவரை வாத்யார் என்று அன்போடு கூப்பிட்டு மக்கள் மனதில் இருத்திக் கொள்ள இதைவிடப் பெருங்காரணம் எதும் தேவையா என்ன…?

ராமகிருஷ்ணப் பரமஹம்சரிடம் ஒரு அன்னை வந்து இனிப்பு தின்னும் தன் மகனுக்கு அறிவுரை கூறும்படி கேட்க, அடுத்த வாரம் வந்து பாருங்கள் என்றார் ராமகிருஷ்ணர். அடுத்த வாரம் வந்ததும் அந்தச் சிறுவனுக்கு அன்பாக அறிவுரைத்தார். ஏன் இதற்கு ஒரு வாரம் என அந்தத் தாய் வினவ, சென்ற வாரம் வரை நானே அதிகம் இனிப்பு உண்பவனாக இருந்தேன். அப்பழக்கத்தை கைவிட்டால்தானே அறிவுரை கூறும் தகுதி எனக்குக் கிட்டும்..? என்றாராம் ராமகிருஷ்ணர். தன் படங்களில் குடித்தலும் புகைத்தலும் தவறு என்று அழுத்தந்திருத்தமாய் போதித்த வாத்யார் நிஜ வாழ்விலும் முன்னுதாரணமாக இருந்து காட்டியவரல்லவா…?

mgr3இரண்டு உதாரணங்களை இங்கு சொல்லுதல் அவசியம். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ஒரு எம்.ஜி.ஆர். வில்லன். அவர் புகை பிடிக்கும் காட்சி ஒன்று படத்தில் வந்தாக வேண்டும். அதில் நடிக்கவோ வாத்யாருக்கு உடன்பாடில்லை. ஆனாலும் சமாளித்தார். எப்படி..? முதல் பாதியில் ராம்தாஸ் புகைக்க முயலும்போது, ‘இந்த ரஞ்சித்துக்கு முன்னால எவனும் சிகரெட் பிடிக்கக் கூடாது’ என்று தட்டிவிடுவார். பின்னொரு காட்சியில் வில்லன் எம்.ஜி.ஆர். சிகரெட்டை வாயில் வைக்க முற்படுகையில் கதாநாயக எம்.ஜி.ஆர். அதே வசனத்தைச் சொல்லி, அவர் வாயிலிருந்து தட்டி விடுவார். காட்சியிலும் நிறைவு… கொள்கைக்கு முரணாக நடிக்கவில்லை என்று வாத்யாரிடமும் நிறைவு.

இதேபோன்று மற்றொரு பெரும் தர்மசங்கடம் அவரது 100வது படமான ஒளிவிளக்கு படத்தில் வந்தது. கதையின்படி நாயகன் குடித்து நிதானமிழந்திருக்கும் வேளையில் கொள்ளைப் பழி அவன் மீது சுமத்தப்படுகிறது. ஹிந்தியில் தர்மேந்திரா குடிப்பவராக நடித்திருந்தார். இந்திப்பட கதாநாயகர்கள் குடிகாரர்களாக நடிப்பது சகஜமான ஒன்று. தமிழிலும் இந்தக் காட்சியில் வாத்யார் குடிப்பதாக நடித்தேயாக வேண்டும். நடிப்புக்காகக் கூட அதைச் செய்ய விரும்பவில்லை வாத்யார். கதையை மாற்றுவதில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசனுக்கும் உடன்பாடில்லை. கடைசியில் வாத்யார் ஒரு சின்ன மாறுதல் செய்தார். மதுவை அவர் அறியாமல் குடிக்க வைத்து விடுகிறார்கள். மதுவின் மயக்கம் தெளிந்தபின் அவரது மனச்சாட்சி அவரை ‘தைரியமாகச் சொல்.. நீ மனிதன் தானா?’ என்று குத்திக் காட்டி மதுவின் கொடுமைகளை எடுத்துக் கூறும். குடித்ததை நினைத்து அவர் துடிப்பார், வருந்துவார். இப்படி எந்த விதத்திலும் மற்றவர்களைப் பாதிக்கும் விஷயங்களைச் சொல்லக் கூடாது என்று பிடிவாதக்காரராக அவர் இருந்ததைவிடவா மக்கள் மனத்தில் குடியிருப்பதற்கு பிறிதொரு காரணம் வேண்டும்…?

தன்னைச் சந்திப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை முதலில் சாப்பிடச் சொல்லி உண்டி கொடுத்து உபசரிப்பது மக்கள் திலகத்தின் வழக்கம் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் அதற்கொரு காரணமும் சொல்வார்கள் சிலர். சிறு வயதிலிருந்தே பசியையும் பட்டினியையும் அனுபவித்து வாழ்ந்தவர் மக்கள் திலகம். அதனால் பிறர் பசிப்பதைப் பொறுக்காதவர். இந்தக் காரணத்தினால் தன்னைச் சந்திக்கும் எவரையும் வயிறார உண்ண வைத்துக் கண்டு மகிழ்பவராக இருந்தார் என்பதே அந்தக் காரணம். அதில் உண்மை இருந்தாலும் இயல்பிலேயே அவருக்கு அமைந்திருந்த ஈரமுள்ள இதயம்தான் அவரை அப்படிச் செயல்படச் செய்தது என்பதே நிஜமான நிஜம்.

ஒரு மழைநாளில் அவர் காரில் செல்கையில் வெளியே ஒரு காட்சி கண்ணில் படுகிறது. கொட்டுகிற மழையில் உள்ளே உட்கார்ந்திருப்பவர் நனையாமல் கூரை அமைத்திருக்க தான் மட்டும் சொட்டச் சொட்ட நனைந்தபடி வயிற்றுப் பிழைப்புக்காக ரிகக்ஷா ஓட்டிக் கொண்டிருந்தனர் பல ரிக்க்ஷாக்காரர்கள். அவர்களைக் கண்டதும், வள்ளலின் மனம் கசிந்தது. தன் அலுவலகம் வந்த உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, ”நகரிலுள்ள ரிக்க்ஷாத் தொழிலாளிகள் அனைவருக்கும் மழைக்கோட்டுகள் தர வேண்டும், வாங்கி வாருங்கள்” என்று ஆணையிட்டாரே.. அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் – மற்றவர் துன்பம் கண்டு பொறாத இளகிய நெஞ்சம் ஒன்றைத் தவிர..! அடித்தட்டு மக்கள் அனைவரிடமும் கல்லில் செதுக்கிய சிற்பமாய் அவர் மனங்களில் பதிந்து போனதற்கு இதைவிடச் சிறந்த காரணம் ஏதேனும் உண்டா என்ன…?

mgr4கலைவாணர் என்.எஸ்.கே. உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த சமயம் அது. அவர் நினைவுக்குத் திரும்பியதும் அவரைப் பார்க்க வந்து சென்றவர்கள் பற்றி அவரிடம் சொல்லப்பட்டது. “ராமச்சந்திரன் வரலையா..? உடனே வரச்சொல்லி ஆளனுப்புங்க” என்றிருக்கிறார். அதன்படி வந்த மக்கள் திலகம் அவரிடம் என்ன உதவி கேட்டாலும் தான் செய்வதாகக் சொன்னார். கலைவாணர், “நிறையப் பேருக்கு உதவின எனக்கு நீ நிறைய உதவிகள் இப்ப வரை பண்ணிட்டிருக்கேங்கறது ஊருக்குத் தெரியாது. ஆனா நீ வரலைங்கறதை மட்டும்தான் எல்லாரும பாப்பாங்க… அதனாலதான் உன்னை வந்துட்டுப் போகச் சொன்னேன். வேற ஒண்ணும் இப்ப தேவையில்ல” என்றாராம். வள்ளலுக்கு வள்ளல் இந்த வாத்யார் என்பது அவரை அனைவரின் மனத்திலும் சிம்மாசனமிட்டு உட்கார வைக்கச் சிறந்த காரணம்தானே…

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் கலைஞர் கருணாநிதியிடம் அளவற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் மக்கள் திலகம். ஒருமுறை அவரெதிரில் ‘கருணாநிதி சொல்றாரு’ என்று பேசிய ஒருவரை, ‘கலைஞர்னு சொல்லுங்க. நானே அவரை கருணாநிதின்னு பேர் சொல்லிக் கூப்பிடறதில்ல’ என்று திட்டியிருக்கிறார். திருச்செந்தூர் ஆலய மரணத்திற்கு நீதிகேட்டு கலைஞர் தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டபோது தினம் அவரின் உடல்நலம் பற்றி போனில் விசாரித்ததுடன், தானே பேசி அதை கைவிடக் கோரியவர் மக்கள் திலகம். அந்தப் பண்பாடும் நாகரீகமும் அவரையன்றி வேறு எவருக்கு வரும்?

இப்படிப் எண்ணற்ற காரணங்களால் மக்கள் மனத்தில் பதிந்துவிட்ட மக்கள்திலகம், என் மனத்தில் பதிந்ததற்கு இவை தவிர்த்த வேறுசில காரணங்களும் உண்டு. தான் சார்ந்த துறையான திரைப்படத் துறையில் அவருக்கிருந்த அபாரமான அறிவு பிரமிக்கத் தக்கது. சிறந்த இசை ரசிகராகவும், எடிட்டராகவும், நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்… இப்படிப் பல அவதாரங்களைத் தன்னுள் பொதித்து வைத்திருந்தவர் வாத்யார். அவரது புகழ்பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பற்றி அவரது எழுத்துக்களில் இப்படிச் சொல்கிறார் : mgr5
“அவரிடம் (ப.நீலகண்டன்) ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையின் ஆரம்பத்தைச் சொல்லி இருந்தேன். அதாவது விஞ்ஞானி ஒருவன் தான் கண்டுபிடித்திருந்த புதிய விஞ்ஞான யுக்தியை தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் மத்தியில் செயல்படுத்திக் காண்பிக்கிறான். தன் உழைப்பின் விளைவாக உருவான புதிய சாதனை உலகை அழிக்கும் அழிவு சக்தியாக மலர்ந்திருப்பதை மற்றவர்கட்குச் செயல்படுத்திக் காண்பிக்கிறான். அந்த ஆராய்ச்சிக் குறிப்புகளையெல்லாம் அந்த விஞ்ஞானிகளின் எதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான். ஆனால் ஒரு விஞ்ஞானி இந்தக் கூற்றை நம்புவதில்லை. அதன் நகல் எங்காவரு இருந்தே தீரும் என்ற எண்ணத்தில் முன்னவனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிட்டு அவன் செத்துவிட்டதாக உலகத்தை நம்பச் செய்து விடுகிறான். இளம் விஞ்ஞானியின் தம்பி இதை நம்பாமல் அண்ணனைத் தேடிப் புறப்படுகிறான்.

இவ்வளவுதான் நான் அவருக்குச் சொல்லியிருந்தேன். அதுவும் குறிப்பாகத்தான். இவ்வளவு விளக்கமாகக் கூட அல்ல. நான் என்ன எடுக்கப் போகிறேன், எப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்க இவ்விதப் பெரிய பயணத்தைத் துவங்கி இருக்கிறேன்… இந்த விவரம் எல்லாம் அப்போது அவரிடம் இல்லை. ஆகவே அவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததற்குக் காரணம் ‘இத்தனை பேருடன் புறப்பட்டுச் செல்கிறோமே, பிறர் நம்மைக் கேலி செய்யாத அளவுக்காவது ஏதாவது காரியம் ஆற்றிவிட்டு வரவேண்டும் என்ற அச்சம்தான் என்பது உண்மையாகத் தானிருக்கும்!”

இப்படி வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காகப் பணயப்படும் நிலையில் கூட திரைக்கதை, வசனத்தை முடிவு செய்து கொள்ளாமல் புறப்பட்டுச் சென்று வெளிநாடுகளின் அழகையெல்லாம் சீரான காட்சிகளாலும் ரசனையான வசனங்களாலும் இன்றும் கைதட்ட வைக்கும் பாடல்களாலும் அள்ளிவந்து, எத்தனையோ தடைகளை வென்று அதை சாதனைப் படமாக்க முடிகிறது என்றால் அது வாத்யாரால் மட்டுமே சாத்தியம். அவரை மிஞ்ச இனியொருவன் பிறந்துவரப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.