கோபாலன் வெங்கட்ராமன்

benito-mussolini1

யார் இந்த முசோலினி? இவர் 1922 தொடங்கி 1943ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இத்தாலி நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவர். காலப்போக்கில் இவருடைய அரசியல் சமூகக் கொள்கைகளுக்குப் “ஃபாசிசம்” என பெயரிட்டு அழைத்தனர். இந்த ஃபாசிசக் கொள்கையை உருவாக்கி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடன் சேர்ந்து ஆற்றிய கொடுமைகளுக்குப் பிறகு இந்த சொல்லே மக்கள் வெறுக்கும் சொல்லாக மாறிவிட்டது. இத்தாலியின் பிரதமராக இருந்த முசோலினி 1943ஆம் ஆண்டில் இத்தாலியின் சோஷலிச குடியரசின் தலைவராக ஆனார். அவர் இந்தப் பதவியில் மக்களால் கொல்லப்பட்ட 1945ஆம் ஆண்டு வரை அதாவது ஏப்ரல் 28, 1945 வரை இருந்து வந்தார்.

பெனிடோ அமில்கேர் ஆண்ட்றியா முசோலினி எனும் நீளமான பெயருடைய இவர் 1883 ஜூலை 29ஆம் தேதி பிறந்தவர். இறந்தது 1945 ஏப்ரல் 28. ஆக இவர் வாழ்ந்த 62 ஆண்டுகளில் இவர் உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுத்தான் இறந்தார். வடக்கு இத்தாலியில் வெரானோ டி கோஸ்டா எனும் ஊருக்கு அருகில் பிரடாப்பியோ எனும் சின்னஞ்சிறு பகுதியில் பிறந்தார். இவருடைய தந்தை அலெஸ்சாண்டிரோ. இவர் ஒரு இரும்பு வேலை செய்யும் கொல்லர். சோஷலிசக் கொள்கையில் பிடிப்புள்ளவராக இருந்தார் இவர். முசோலினியின் தாயார் ரோசா மால்டோனி. இவர் ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியையாக இருந்தார். அமைதியும், அடக்கமும், இறை பக்தியும் உள்ளவராகத் திகழ்ந்தார். முசோலினிக்கு ஒரு தம்பி ஒரு தங்கை, தம்பியின் பெயர் அர்னால்டோ, தங்கை எட்விட்ஜ்.

சிறு வயதில் முசோலினி ஒரு முரடன். யாருக்கும் கட்டுப்படமாட்டார். முன்கோபக்காரர், யாருக்கும் எதற்கும் அஞ்சமாட்டார். எதற்கெடுத்தாலும் சண்டைதான். சும்மா அடுத்தவனை அடித்துக் கொண்டிருந்தால் பள்ளிக்கூடத்தில் விட்டு வைப்பார்களா என்ன? வகுப்புத் தோழன் ஒருவனை கத்தியால் குத்திக் காயப்படுத்திவிட்டார் என்று இவரை பள்ளியைவிட்டு வெளியேற்றி விட்டார்கள். இத்தனை பிரச்சனைகளுக்கும் இடையில் இவர் எப்படியோ, எங்கோ படித்து சிறிது காலம் பள்ளிக்கூட ஆசிரியராகவும் இருந்தார் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

வாத்தியார் வேலை பிடிக்காமல் இவர் வேறு ஒரு நல்ல வேலை தேடி 1902இல் சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் சென்றார். அங்கு இவருக்கு ஏதேதோ சிறு வேலைகளை கிடைக்க, இவர் அதில் இருந்து கொண்டே, சோஷலிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி, அவர்கள் கூட்டங்களுக்கெல்லாம் செல்லத் தொடங்கினார். சோஷலிஸ்ட் என்றால் உடனே ஒரு தொழிற்சங்கமும் இருக்க வேண்டுமல்லவா, அப்படி இவர் ஒரு தொழிற்சங்கத்தில் பிரச்சாரகராக செயல்பட்டார். பையன் சாதாரணமாகவே முரடன், உடன் படிப்பவனையே கத்தியால் குத்தியவன், அப்படிப்பட்டவன் ஒரு தொழிற்சங்கத்தில் முக்கியப் புள்ளி என்றால் என்னவெல்லாம் செய்திருப்பார் யோசித்துப் பாருங்கள். தங்கள் சங்கத்தின் பிரச்சினைகளுக்காக தீவிரமாகப் போராடுவார். முதலாளிகள் இவர்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லையானால் போச்சு, உடனே வன்முறைக்குத் தூண்டுவார். அடிக்கடி தொழிலில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பார். இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தால் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன? இவரை அடிக்கடி பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள். இவர் ஒரு சிறைப் பறவையாக ஆனார்.

இப்படி இவர் நாளுக்கு நாள் தொழிற்சங்கத்தில் மிக வேகமாக முன்னேறத் தொடங்கினார். எப்போதும் கூட்டத்தில் உரையாற்றுவது, தொழிலாளர்கள் மனங்களில் சூடேற்றுவது, முஷ்டியை மடக்கி போராடத் தூண்டுவது, சோஷலிச கொள்கையை இனிக்க இனிக்க அவர்களுக்கு போதிப்பது, இப்படி அவருடைய வளர்ச்சி சோஷலிச வட்டாரத்தில் இவரை ஒரு பெரிய புள்ளியாக ஆக்கிவிட்டது. எழுதவும் செய்தார்; பேசினார், பத்திரிகைகளைத் தொடங்கினார், பொழுதுக்கும் இவர் உழைத்து ஒரு பெரிய சோஷலிஸ்ட் தலைவராக ஆனார்.

1904இல் மீண்டும் இவர் இத்தாலி திரும்பினார். அங்கு இவர் இத்தாலி ராணுவத்தில் சேர்ந்தார். இடையில் 1909இல் இவர் மீண்டும் ஆஸ்திரியா சென்று அங்கு தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். இவருடைய தீவிர சோஷலிச கொள்கைகளை பத்திரிகைகளில் சூடுபறக்க எழுதி வந்ததால் இவரை ஆஸ்திரியாவைவிட்டு வெளியேற்றி விட்டனர்.

இரும்பு பிடித்தவன் கையும், சொரி பிடித்தவன் கையும் சும்மா இருக்காதாம். அப்படி இவர் இத்தாலிக்குத் திரும்பிய பிறகு சும்மா இருப்பாரா. அங்கும் இவரது சோஷலிசம் இவரை ஆட்டிவைத்தது. மேடை தோறும் சோஷலிச கொள்கைகளை உரக்கப் பேசி மக்களைத் தட்டி எழுப்பத் தொடங்கினார். பேசிப் பேசி, பேச்சு இவருக்கு தண்ணீர் பட்ட பாடாக ஆகிவிட்டது. இவர் ஒரு சிறந்த பேச்சாளராக ஆனார். இவர் பேச்சு உரத்த குரலில், ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, அதிகார தோரணையில் தன் கருத்துக்களை முன் வைப்பார். அப்படி சண்டமாருதமாகப் பேசுபவர்கள் பொதுவாகத் தாங்கள் பேசுவதில் உண்மை நிலைமை இருக்கிறதா என்பதைப் பார்க்க மாட்டார்கள். சகட்டு மேனிக்கு புள்ளி விவரங்களை அள்ளி வீசுவார்கள். எதிரிகளை துவம்சம் செய்வது போல அடித்துப் பேசுவார்கள். மக்களும் இதைப் போன்ற பேச்சுக்களைத்தானே காதுகொடுத்துக் கேட்டுவிட்டு, அடடா, என்ன பேச்சு, என்ன வீரம், எத்தனை புள்ளி விவரங்கள் என்று பேச்சில் மயங்கி ஏமாறுவார்கள். தான் சொல்ல வந்த கருத்தை அதுவே உலக மகா உண்மை என்பதுபோல ஆணித்தரமாக அடித்துப் பேசி மக்கள் மனங்களை கலங்கடித்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் அப்படிப் பேசுவதில் பாதிகூட உண்மை இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட பேச்சுக்களுக்குத்தானே காலம். தெளிந்த நீரோடை போல, அமைதியாக, அழகாக, சொல்ல வந்த கருத்தைச் சொன்னால், அவனை ‘போர்’ என்று மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட மாட்டார்களா?

சண்டமாருத பேச்சாளரான முசோலினி சோஷலிச அகிலத்தில் ஒரு பிரபலமான, புகழ்மிக்க பேச்சாளராக மதிக்கப்பட்டார். பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருந்த முசோலினி 1912 டிசம்பர் 1ஆம் தேதி முதல் இத்தாலி சோஷலிஸ்ட் கட்சியின் செய்தித் தாளான ‘அவந்தி’க்கு ஆசிரியராக அமர்ந்தார். 1914இல் இளவரசர் ஃபெர்டினாண்ட் என்பார் ஆஸ்திரியர் ஒருவரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல் உலக யுத்தம் தொடங்கியது அல்லவா? ஐரோப்பாவில் தொடங்கிய அந்த யுத்தம், அனேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளையும் சுற்றி வளைத்துக் கொண்டது, எனினும் இத்தாலி நாடு போரில் ஈடுபடாமல் தங்களை நடுநிலை நாடு என்று அறிவித்துக் கொண்டது. இத்தாலி நாட்டு சோஷலிஸ்ட் கட்சி பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் முசோலினியும் முதலில் தானும் தன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தே எழுதிவந்தார்.

ஆனால் நாளாக ஆக அவருடைய கருத்துக்கள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. ஜெர்மனிக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் போரில் இத்தாலியும் சேர்ந்து கொள்ள வேண்டுமென்கிற கருத்துடையவர்களுடன் இவரும் ஒத்துப் போய் எழுதத் துவங்கினார். இவருடைய பத்திரிகை தலையங்கங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சார்ந்த சோஷலிஸ்ட் கட்சி இவர் கட்சிக்குள் இருந்துகொண்டே இப்படி எதிர் மேளம் கொட்டுவதை விரும்பாமல் இவரை 1914 நவம்பரில் கட்சியை விட்டு வெளியேற்றி விட்டனர்.

1915 மே 23ஆம் தேதி இத்தாலி அரசாங்கம் தனது படைகளை யுத்தத்துக்குத் தயாராகும்படி கட்டளை பிறப்பித்தது. அடுத்த நாளே இத்தாலி ஆஸ்திரியாவின் மீது போர் தொடுத்து விட்டது. ஆஸ்திரியாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இத்தாலியும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து கொண்டது. முன்னாள் படை வீரர்களுக்கு இத்தாலி அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து முசோலினியும் 1915 ஆகஸ்ட் 31 அன்று இத்தாலி ராணுவத்தில் சேர்ந்து, துப்பாக்கிப் படையான 11ஆவது ரெஜிமெண்டில் பணியாற்றத் தொடங்கினார்.

யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. பழையன கழியவும் புதியன புகுவதும் இயற்கையன்றோ. அதன்படி புதிய ஆயுதங்கள் யுத்தத்தில் பயன்படுத்தப் படத் தொடங்கின. முசோலினி பணியாற்றிய படைப் பிரிவில் புகுத்தப்பட்ட ஒரு புதிய பீரங்கி வெடித்து விட்டது. அந்த வெடி விபத்தில் முசோலினிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பீரங்கி வெடித்ததில் பல இரும்புத் துகள்கள் இவரது உடலில் புகுந்துவிட்டன. இவரை ராணுவ மருத்துவ மனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு நீண்ட நாட்கள் சிகிச்சை செய்து கொண்டபின் இவர் உடல்நலம் தேறி வெளியே வந்தார், எனினும் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்.

ராணுவத்திலிருந்து வெளிவந்த முசோலினி மீண்டும் அரசியலில் புகுந்தார். முன்பு தன்னை கட்சியைவிட்டு நீக்கிய சோஷலிஸ்ட் கட்சிக்கு இவர் தீவிர எதிரியாக ஆனார். சோஷலிஸ்ட் கட்சியை எதிர்த்து இவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இத்தாலியில் ஒரு பலம் வாய்ந்த அரசு அமைய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அரசியல் கட்சிகள் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விடுகின்றன என்று சொல்லி நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆளவேண்டுமென்று இவர் பேசத் தொடங்கிவிட்டார்.

முதல் உலக யுத்தம் முடிவுக்கு வந்துவிட்ட பிறகு ஐரோப்பாவில் எல்லா நாடுகளிலுமே மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினார்கள். குறிப்பாக இத்தாலி நாடு யுத்தத்தால் பெரும் அழிவுக்கு ஆளாகி நாடு பொருளாதாரத்திலும் சீர்கேடு அடைந்து நிலை குலைந்து போயிருந்தது. இத்தாலியின் பழம் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென்கிற உணர்வு, ஆர்வம், வெறி மக்கள் உள்ளங்களை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. புதிய இத்தாலியை உருவாக்க மக்கள் உறுதி கொண்டனர். இத்தாலிய தேசிய உணர்வு அனைவர் ரத்தத்திலும் புத்துணர்வை ஏற்படுத்தியிருந்தது. ஆங்காங்கே இத்தாலிய தேசிய குழுக்கள் உருவாகத் தொடங்கின. இந்த நிலைமையை நன்கு பயன்படுத்திக் கொண்டு முசோலினி சிதறிக் கிடந்த தேசியக் குழுக்களையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மத்திய குழுவை 1919 மார்ச் 23ஆம் தேதி தொடங்கினார். அந்த ஒன்றுபட்ட தேசிய சிந்தனை இயக்கத்துக்கு முசோலினியே தலைமையேற்றார்.

முசோலினி தொடங்கிய இந்த தேசிய அமைப்புக்கு இத்தாலிய மொழியில் ஃபாசிஸ்ட் கட்சி எனும் பொருள் படும்படியான Fasci di Combattimento என்று பெயரிட்டார். புராதன கிரேக்க சாம்ராஜ்யத்தில் புழக்கத்தில் இருந்த பெயர் இது. அந்த கட்சிக்கு ஒரு கொடியையும் இவர் அறிமுகம் செய்தார். ஏனைய மக்களிடமிருந்து பிரித்து அடையாளம் காண வசதியாகத் தன் இயக்கத்து உறுப்பினர்கள் கருப்பு நிற சட்டைகளை அணியவேண்டுமென பணித்தார். இவர்கள் கருஞ்சட்டை வீரர்கள் எனப்பட்டனர். முதல் உலகப் போரில் ஈடுபட்டிருந்த இத்தாலியின் முன்னாள் ராணுவத்தினரை இவர் தன் கட்சிக்குக் கொண்டு வந்தார். அப்படி இவர் கொண்டு வந்த முன்னாள் ராணுவத்தினர் அடங்கிய படையே, பின்னாளில் இவரது பாதுகாப்புப் படையாக உருமாறியது. இத்தாலியில் “கருஞ்சட்டையினர்” என்றால் முசோலியின் ஃபாசிஸ்டுகள் என்று புகழ் பெற்றனர்.

1922ஆம் ஆண்டு கோடை காலம். முசோலியின் ஃபாசிஸ்ட் கருஞ்சட்டை படையினர் இத்தாலியின் வடக்கு மாகாணங்களில் ஒரு பெரிய அணிவகுப்பை நடத்தி மக்கள் மனங்களில் ஒருவித அச்சத்தை உருவாக்கினார். இவரது கருஞ்சட்டைப் படையினர் போகுமிடங்களில் எல்லாம் இவரது பரம எதிரிகளான சோஷலிஸ்ட் கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் தாக்கப்பட்டனர். அவர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களுடைய கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

1922 செப்டம் மாதவாக்கில் ஒட்டுமொத்த வடக்கு இத்தாலியும் இந்த கருஞ்சட்டையினர் வசம் வீழ்ந்துவிட்டது. இவருடைய திக்விஜயத்தினாலும், அப்போது எதிரிகளுக்கு இழைக்கப்பட்ட தீங்கினாலும் உத்சாகமடைந்த முசோலினி 1922ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தன்னுடைய “பாசிஸ்ட் கட்சி”யின் மாநாடு ஒன்றை கூட்டினார். அந்த மகாநாட்டில் விவாதித்த விஷயம் இத்தாலியின் தலைநகரான ரோம் நகரத்தை இரகசியமாகத் தாக்கிப் பிடித்துக் கொள்வது என்பதுதான்.

கிளாரெட்டா பெட்டாசி

அதே ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி, கருஞ்சட்டைப் படையினர் பல குழுக்களாகப் பிரிந்து ரோம் நகரை நோக்கி “சலோ ரோம்” என்று புறப்பட்டு விட்டனர். இந்த படையொன்றும் அப்படி ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் கூடிய படைப் பிரிவுகள் அல்ல. ஏதோ கூட்டம் கூட்டமாகப் போய் வன்முறையில் ஈடுபடும் ஒரு கும்பல் போலத்தான் இருந்தது. என்றாலும் இப்படியொரு கூட்டம் தங்களைத் தாக்க வந்து கொண்டிருக்கிறது எனும் செய்தி இத்தாலி அரசர் விக்டர் எம்மானுவல் III என்பார் வயிற்றில் புளியைக் கரைத்தது. பயத்தில் ஜன்னி கண்டுவிட்டது. என்ன செய்வது என்பதில் ஒரே குழப்பம். முசோலினியின் கருஞ்சட்டைப் படைதான் ரோம் நகரை நோக்கிச் சென்றதே தவிர முசோலினி மிலான் நகரில் தங்கியிருந்தார். பயத்தில் அரண்டுபோன மன்னர் விக்டர் எம்மானுவல் முசோலினிக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதன்படி இத்தாலியில் அவருடன் சேர்ந்து ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கலாமா என்று அழைப்பு விடுத்தார். இப்படியொரு அழைப்பு வந்தால் ஆட்சிக்கும், பதவிக்கும் பவிஷுக்கும் ஆலாய் பறக்கும் முசோலினி சும்மா விடுவாரா என்ன? உடனே புறப்பட்டு விட்டார். அவருடன் அவருடைய கஞ்சட்டைப் படையினர் மூன்று லட்சம் பேரும் உடன் சென்றனர்.

‘புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேலே படுத்துக்கொள்ளுங்கள்’ என்றானாம் புலிக்கு பயந்து போன ஒருவன். அப்படி முசோலினி ரோம் நகருக்குச் சென்றவுடன் அரசர் இவரை இத்தாலியின் பிரதமராக 1922 அக்டோபர் 31ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்து விட்டார், அப்பாடா, தொல்லை விட்டது என்று பெருமூச்சு விட்டார். இதை, இதைத்தானே முசோலினி எதிர்பார்த்திருந்தார். அவர் விரும்பியபடி இப்போது அவர் இத்தாலியின் பிரதம மந்திரி, ஆகப்பெரும் பதவி கிடைத்துவிட்டது, இனி என்ன?

நியமன பிரதமராக பதவியேற்ற முசோலினி தன் இடத்தை வலுப்படுத்திக் கொண்ட பிறகு ஒரு தேர்தலை நடத்தினார். மக்களுக்கு என்ன ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, நமக்கெல்லாம் நன்மைகள் வந்து கொட்டப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இந்த முசோலினியின் ஃபாசிஸ்ட் கட்சிக்கு ஏராளமாக வாக்களித்து கருஞ்சட்டையினரை அதிகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டனர் பாராளுமன்றத்துக்கு. 1922 அக்டோபர் 31ஆம் தேதி, முசோலினிக்கு அப்போது வயது 39. சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், அவருடைய சாமர்த்தியத்தாலும் இத்தாலியின் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார்.ஆரம்ப சூரத்தனம் என்பர். தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் நடந்தது. பத்து வருஷங்களில் இத்தாலி நன்கு முன்னேறியது முசோலியின் ஃபாசிஸ்ட் ஆட்சியில். முசோலினி தன்னை சர்வ வல்லமை படைத்த ‘Duce’ என்று சர்வ அதிகாரம் படைத்த தலைவராக அறிவிப்பு செய்துவிட்டார். அதுமட்டும் போதுமா, பார்த்தார் இன்னும் பெரிய பதவியை ஏற்றால் என்ன? 1925 ஜனவரி 3ஆம் தேதி பாராளுமன்றத்தில் இருந்த இவர்களது மிருகபல மெஜாரிடியைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை இத்தாலியின் சர்வாதிகாரி என்று அறிவித்து விட்டார் மகா கனம் பொருந்திய முசோலினி.

ஐரோப்பாவின் மற்ற பல நாடுகளைப் போல இத்தாலிக்கும் உலகின் தூரக் கிழக்கு நாடுகளில் குடியேற்ற நாடுகளை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எந்த நாட்டைத் தங்கள் காலனியாக மாற்றலாம் என்று எண்ணியதில் இவருக்குத் தோன்றியது எத்தியோப்பியா. 1935இல் ஆப்பிரிக்காவின் இந்த மன்னராட்சி நடந்து வந்த எத்தியோப்பியாவின் மீது படையெடுத்துச் சென்றார். மனிதாபிமானமின்றி எத்தியோப்பிய மக்களின் மீது விஷ வாயுவை உபயோகித்துப் போரிட்டத்தை மற்ற ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்தன. யார் எதிர்த்தால் என்ன, முசோலினியின் நாடுபிடிக்கும் ஆசை அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டது. 1936இல் எத்தியோப்பியா இத்தாலியிடம் சரணடைந்து விட்டது. இத்தாலியும் ஒரு பேரரசாக மாறிவிட்டது. அந்த பெருமையெல்லாம் முசோலினிக்கே. இதுதான் இவர் வாழ்வில் கிடைத்த புகழின் உச்ச கட்டம். இனி சரிவுதான்!

ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரும் முசோலினியும்

முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்து விஷவாயுவைப் பயன்படுத்தியதை மற்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கண்டித்த போதும், இத்தாலியை ஆதரித்த ஒரே நாடு ஜெர்மனிதான். ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் முசோலினியைப் பாராட்டினார். இவர் ஜெர்மனியில் முசோலினியைப் போன்றே தன்னுடைய நேஷனல் சோஷலிஸ்ட் ஜெர்மானிய தொழிலாளர் கட்சி எனும் நாஜி கட்சியை உருவாக்கி ஆட்சி புரிந்து வந்தார். ஹிட்லருக்கு முசோலினி ஒரு ஆதர்ச புருஷராகத் தென்பட்டார். ஆனால் தொடக்கத்தில் முசோலினிக்கு ஹிட்லரைப் பிடிக்கவில்லை. இருந்தபோதும் ஹிட்லர் தொடர்ந்து முசோலினியை ஆதரித்தவுடன், அதுவும் அவருடைய எத்தியோப்பிய வெற்றியை யொட்டி ஹிட்லர் முசோலினியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்.

1938இல் இத்தாலியில் வாழ்ந்த யூதர்களுக்கு இத்தாலி குடியுரிமை பறிக்கப்பட்டது. இத்தாலியில் ஆசிரியர்களாகவும், அரசாங்க ஊழியர்களாகவும் பணிபுரிந்த பல்லாயிரம் யூதர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். யூதர்களுடன் மற்ற இனத்தார், குறிப்பாக இத்தாலியர்கள் திருமண பந்தம் செய்துகொள்வதை சட்டம்போட்டுத் தடுத்தார் முசோலினி. ஜெர்மனியில் ஹிட்லர் செய்த யூதர்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளையும், இவரும் செய்து முடித்தார். 1939 மே மாதம் 2ஆம் தேதி முசோலினி அடால்ஃப் ஹிட்லருடன் ஒரு ஒட்டுறவு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஐரோப்பாவில் யுத்தம் வந்தால் இவ்விரு நாடுகளும் ஒருவருக்கொருவர் துணைநிற்க வேண்டுமென்பது ஒப்பந்தத்தின் நோக்கம். ஆம், அப்போது ஐரோப்பாவில் யுத்த மேகம் கவிந்து கொண்டிருந்தது.

இரண்டாம் உலகப் போரும் இத்தாலியும்

1939 செப்டம்பர் 1. ஜெர்மனி போலந்து நாட்டின் மீது படையெடுத்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. 1940 ஜூன் 10; போலந்திலும், பின்னர் பிரான்சுக்கு எதிராகவும் ஜெர்மனி அடைந்த உறுதியான வெற்றிகளை யடுத்து முசோலினி ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அந்த பிரகடனம் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் எதிராக இத்தாலி போரில் ஈடுபடுகிறது என்பதுதான். இப்படி உலக யுத்தகளத்தில் ஐரோப்பாவின் ஜெர்மனியும், இத்தாலியும் இணைந்து போர் புரிந்தாலும் இவ்விரு நாடுகளும் சம அந்தஸ்து உடையதாக ஹிட்லர் கருதவில்லை. ஹிட்லரின் இந்த தற்பெருமைத் தனத்தை முசோலினி விரும்பவில்லை.

போர் மேலும் மேலும் மற்ற நாடுகளுக்கும் பரவியது. ஜெர்மானியர்களின் வெற்றி தொடந்தன. இப்படி ஹிட்லர் வெற்றி மேல் வெற்றி பெருவதை முசோலினி சற்று போறாமையுடந்தான் பார்த்தார். போர் திட்டங்கள் குறித்து ஹிட்லர் முசோலினியிடம் எப்போதும் கலந்து ஆலோசிப்பது கிடையாது. தன்னை ஹிட்லர் நம்பவில்லை என்பதில் முசோலினிக்கு மன வருத்தம் அதிகம். எனினும் ஹிட்லரின் வெற்றி ரகசியம் தான் என்ன என்பதை ஹிட்லருக்குத் தெரியாமல் தெரிந்து கொள்ளவும் முசோலினி முயற்சிகள் மேற்கொள்ளலானார்.

ஹிட்லரைப் போலவே தானும் வேறொரு முனையில் யுத்தத்தைத் தொடங்கி வெற்றிகளைக் குவித்திட முசோலினி எண்ணம் கொண்டார். அவருக்கு ஒரு ஆசை. எகிப்தில் இருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போர் தொடுத்து எகிப்தை பிடித்துக் கொண்டால் என்ன? ஆனால் இந்த யோசனையை அவருடைய படைத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் விடாப்பிடியாக முசோலினி 1940இல் எகிப்து மீது படையெடுத்தார். தொடக்கத்தில் இந்தத் தாக்குதலில் வெற்றிகள் கிடைத்த போதும், நாளடைவில் சோர்வடைந்து போன இத்தாலி படைகளை ஜெர்மானிய படைகள் வந்து காக்க வேண்டியிருந்தது.

எகிப்தில் தனது படைகள் அடி வாங்கியதில் முசோலினிக்கு அவமானம். அதிலும் தோல்வியடையும் தருணத்தில் ஹிட்லரின் தலையீட்டினால் தலை தப்பியதிலும் அவருக்கு வருத்தம் தான் என்ன செய்ய? இந்தத் தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் 1940 அக்டோபரில் இவர் கிரீஸ் நாட்டின் மீது படையெடுத்தார். ஹிட்லர் இதை விரும்பாதபோதும் வீம்புக்கு முசோலினி கிரீஸுக்கு எதிராகப் போர் தொடுத்தார். அந்த போர் முனையிலும் முசோலின்யை தோல்வி எதிர்கொண்ட நிலையில் ஹிட்லரிடம் உதவி கோரினார். 1941 ஏப்ரல் 6இல் ஜெர்மனி யூகோஸ்லேவியா மீதும் கிரீஸ் மீதும் கடும் போரை நடத்தியது. போரின் முடிவில் இவ்விரு நாடுகளும் ஜெர்மானியர் வசம் விழுந்ததோடு, முசோலினிக்கு ஏற்படவேண்டிய தோல்வியும் தடுக்கப்பட்டது.

காதலி கிளாரெட்டா பெட்டாசி

முசோலினிக்கு இத்தாலியில் எதிர்ப்பு

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய சில காலத்துக்கு ஜெர்மானியப் படைகள் அசாத்திய வெற்றிகளைக் குவித்து வந்தது. ஆனால் விரைவில் நிலைமை மாறியது. ஜெர்மனியும் இத்தாலியும் தோல்வியின் சுவையை அறியத் தொடங்கின. 1943 கோடைக் காலம் பிறந்தபின் அதுவரை ரஷ்யாவினுள் புகுந்து வெற்றிகளை ஈட்டிய ஜெர்மனிக்குத் தோல்விகள் தொடர்ந்து வரத் தொடங்கின. ஜெர்மனி, இத்தாலி கூட்டுக்கு எதிரான நேச நாட்டுப் படைகள் குண்டுமாரிப் பொழிந்தன. ரோம் நகரில் குண்டுகள் விழத் தொடங்கின. இத்தாலியில் ஆட்சி புரிந்த ஃபாசிஸ்ட் கவுன்சில் உறுப்பினர்கள் முசோலினிக்கு எதிராகத் திரண்டு எழுந்தனர். அவர்கள் ஒன்றுகூடி மீண்டும் இத்தாலியை பதவி இறக்கம் கண்ட அரசரே ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டுமென வலியுறுத்தினர். முசோலினி கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

1943 செப்டம்பர் 12ஆம் தேதி சிறையில் அடைபட்டிருந்த முசோலினியை ஜெர்மானிய உளவுப் படையொன்று உட்புகுந்து, சிறையில் இருந்த முசோலினியை விடுதலை செய்து அழைத்துச் சென்றது. விமானத்தில் மியூனிச் நகருக்கு முசோலினி கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஹிட்லரை சந்தித்தார். பத்து நாட்கள் சென்றன. அப்போது ஜெர்மானியின் ஆதிக்கத்தில் இருந்த இத்தாலியின் வடக்குப் பிரதேசத்தில் இத்தாலிய சோஷல் ரிபப்ளிக் என்றழைக்கப்பட்ட பகுதிக்கு முசோலினி தலைவராக ஹிட்லரால் நியமிக்கப்பட்டார்.

இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியின் வீழ்ச்சி

1945 ஏப்ரல் 27, இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வரும் சமயம். ஜெர்மனியும் இத்தாலியும் தோல்வியின் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்தன. முசோலினி ஸ்பெயினுக்கு ஓடிப்போய்விடலாம் என திட்டமிட்டார். 1945 ஏப்ரல் 28ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் விமானத்தில் பயணம் செய்யவிருந்த முசோலினியும், அவரது காதலியுமான கிளாரெட்டா பெட்டாசியும் இத்தாலிய தேசிய வாதிகளால் பிடித்துக் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓட நினைத்த முசோலினியும், கிளாரெட்டாவும் மக்கட் கூட்டத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, பிணங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் கட்டி தலைகீழாகத் தொங்க விடப்பட்டன. காலையில் கண்விழித்து வெளியே வந்த மிலான் நகர வாசிகளுக்கு இப்படி சிலர் உடல்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவற்றைக் கீழே இறக்கு தரையில் கிடத்திய போதுதான் அந்த பிணக் குவியலில் முசோலினியின் உடலும் கிளாரெட்டா உடலும் இருப்பது தெரினது. உடனே நகர மாந்தர் கூட்டம் கூட்டமாக வந்து இந்தக் காட்சியைக் காணத் தொடங்கினர். அப்போது இவ்விருவர் இறந்த உடலின் முகத்தில் காறி உமிழ்வதற்காகவும், சிறுநீர் கழிப்பதற்காகவும் இத்தாலியர்கள் பெரும் வரிசையில் நின்று அந்த புனிதமான காரியத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

பின்னர் அரசாங்க படைகள் வந்து அவ்வுடல்களை மீட்டு மிலான் நகரிலுள்ள ஒரு இடுகாட்டில் புதைத்தனர். பின்னர் 1957 ஆகஸ்ட் 31இல் முசோலினியின் உடல் மட்டும் அவருடைய குடும்ப இடுகாட்டில் கொண்டு சென்று புதைக்க ஏற்பாடு செய்தனர். இப்படி ஒரு கொடிய சர்வாதிகாரியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.