-செண்பக ஜெகதீசன்

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.   (திருக்குறள்-1008: நன்றியில் செல்வம்)

புதுக் கவிதையில்…

செல்வம் சென்றுசேரவேண்டும்
இல்லாதவர்க்கு…
எளியவர்க்குக் கொடுக்காத
எவரும் விரும்பாத
ஈரமில்லாதவன் செல்வம்,
நடு ஊரில்
நஞ்சுமரம் பழுத்ததுபோல்
பயனில்லாதது, ஆபத்தானது…!

குறும்பாவில்…

ஊர்நடுவே பழுத்த நஞ்சுமரம் போன்றதுதான்,
வறியவர்க்கு உதவாத, யாரும்
விரும்பாதவன் கைப்பணமும்…!

மரபுக் கவிதையில்…

ஊரின் நடுவே மரமதிலே
உயர்ந்த கிளையெலாம் பழமிருந்தும்,
யாரும் அதனை நெருங்காமல்
எட்டியே செல்வர் நஞ்சென்றால்,
பாரில் இதுதான் கதையாகும்
பயனபெற ஏழைக் குதவாமல்
சேரும் செல்வமும் பயனிலையே
சந்தியில் நஞ்சு மரமெனவே…!

லிமரைக்கூ…

செல்வமது இருக்கவேண்டும் உதவிடும் கரமாய்,
ஏழையர்க்கு உதவாதவன் செல்வமும்
உதவாததாகும் ஊர்நடுவே பழுத்தநஞ்சு மரமாய்…!

கிராமிய பாணியில்…

நஞ்சிமரம் நஞ்சிமரம்
ஊருக்குள்ள நஞ்சிமரம்,
ஒதவாத நஞ்சிமரம்
ஒதுக்கிவச்ச நஞ்சிமரம்..

ஒதவாத பணக்காரன்
பணத்துக்கும் கதயிதுதான்,
ஏழக்கி ஒதவல்லண்ணா
அவுன
எட்டிப்பாக்க ஆருமில்ல…

அவம்பணமும்
நஞ்சிமரம் நஞ்சிமரம்
ஊருக்குள்ள நஞ்சிமரம்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.