அம்மாவை வணங்காது உயர்வில்லையே…!

-ஜெயஸ்ரீ ஷங்கர்

பெற்றவள் நீ எனக்கென்றும்
நேரில் கிடைத்திட்ட தெய்வ தரிசனம்
நினைவு தெரிந்த நாளாய்
என்னுள் உறைந்து உணர்த்தும் பரப்பிரம்மம்!

கோபுரத்துக் கலசம் போலுயர்ந்த
உந்தன் நிலை எனக்கெட்டாத அதிசயம் 
ஆயிரம் ஜென்மங்கள் தொடர்ந்து 
செய்திட்ட மாதவமே உன்னோடு எந்தன் சம்பந்தம்!

பெற்ற குழந்தைகள் அத்தனைக்கும்
சூரியகிரணமாய்ப் பகிர்ந்தளிக்கும் உந்தன் பக்குவம்
அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கெனவே
காட்டி அம்மையப்பனாக மாறும் சாத்தியம்!

பசியையும் துன்பத்தையும் காணவிடாது
உனக்குள் அழுத்திக் கொண்ட தியாகச்சின்னம்
கஷ்டத்திலும் சிரித்த முகம் மாறாமல்
நல்லதையே போதித்த இன்னொரு போதிமரம்!

நாங்கள்  வண்ண ஆடையில் வலம்வர
உந்தன் எண்ணம்  எங்களோடு  உலாவரும்
ஆனந்தமோ ஆர்ப்பரிப்போ ஏதுமின்றிக்
கிடைத்ததை ஏற்று வாழும் நீயே வெற்றியின் வடிவம்!

பருவகாலங்கள் கடந்து செல்ல எங்களின்
நிகழ்கால மாற்றங்களைத் தாங்கும் நீ அன்புமேகம்
பார்த்திருந்தபோதே தலையுயர்ந்து நின்றபோதிலும்
குழந்தையாய் எண்ணி நேசிப்பது நீ மாத்திரம்!

கூட்டைவிட்டு  நாங்கள் ஆனந்தமாய்ப் பறந்திடத்
தனிமையில் அழுமே ஏக்கத்தில் உன்னிதயம்
அன்போடு சோறூட்டியே  பழக்கப்பட்ட நீ 
ஊட்டிவிட எவருமின்றிச் சோர்வாய் பாவம்! 

இன்றாவது  இவள்  வருவாள்  என்று வழிமேல்
வைத்த விழியாய்க் காலம் நோக்கும் கர்மயோகம்
கைபேசி என்றொரு மந்திரப்பாவை
இல்லையேல் நான்  வெறும்  நடமாடும் எந்திரம்!

வாழைபோல் உந்தன்  இயல்பு இனி
யார் பெறுவார் இதுபோல் அருமருந்து?
தாயெனும் சொல்லுக்குள் இத்தரணியே
அடங்கிடும் அதிசய ஆகர்ஷண மந்திரம்!

வளர்ந்த பின்னே பிரிந்திட்டாலும்
எண்ணத்தில் எந்நாளும் வாழவாழ்த்தும் இருதயம்
என்பெயர் அழைத்தே மறந்து போனதுன்  
பெயரை நீயறியாது அழைக்கும்  எனதுள் மண்டபம்!

மூப்பும் திரையும் உன்னை மென்று விழுங்கினாலும்
உந்தன் குரல் சொல்வதெல்லாம் அனுபவ வேதாந்தம்
கற்க வேண்டும் நான் கூடுவிட்டுக் கூடுபாய,
ககன மார்க்கத் தந்திரங்கள் உனக்காக மாத்திரம்!

அம்மா அம்மா எனவே காகமெனக் கரையும்
மனமிங்கு தேடுது வாழ்வின் ஜீவாதாரம்
இமைக்கும் விழிக்குமான தூரம் நமது
இருந்தும் காணத் தடுக்குது இகபரம்!

காலத்தால் நானும் ஓர் தாய் ஆயினும்
உள்ளத்தில் உன் காலடியில் உருகும் மனம்
உருளும் பூமியில் மாறிவரும் பிறவிகளில்
மறுபடி உனக்குள்ளே எடுப்பேன் தேகம்!
தோன்றியதை எழுதியதில் ஆணித்தரம்
சரியென்றால் நீ தருவாய் தலையசைப்பில் சம்மதம்!
 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க