அம்மா!
-ராதா மரியரத்தினம்
எம் பேரு நெனவில்ல
ஊரு நெனவில்ல
தேரடி வீதியில் நின்ற என்னைப் 
யார் பெத்த பிள்ளையோ
தெம்பாக் கைபிடித்துக் கூட்டி வந்து
காப்பகத்தில் சேர்த்து விட்டான்!
அந்தப் பிள்ளை முகம் தேடுகிறேன்
அதுவும் மறந்து போச்சு!
உண்ண உந்துதல் இல்ல
உவப்பா சமைப்பாரும் யாருமில்ல
செத்த நாக்குக்குச்
சுவையென்ன ஒரு கேடா?
பொத்தி வளர்த்தேனே
பொசுங்காம வெய்யிலில
சக்தியெல்லாம் திரட்டி
உழைப்பையும் தந்தேனே!
அப்பன் இல்லாப் பிள்ளையின்னு
அடுத்தவர் சொல்லாம
அடுக்கடுக்காய்ப் படிக்க வைச்சேன்
ஆளாக்கிப் பாத்துப்புட்டேன்
ஒம் முகமும் ஒம் பேரும்
நல்லா நெனவிருக்கு
என் பேரன் முகம் பார்க்க
ஆசை கோடி இருக்கு!
கண்ணை மூடினாலும்
ஒன் நினைப்பு கொல்லுதய்யா நீ
தும்மையிலே என்றாலும்
இந்த ஆத்தா ஞாபகம் வரலையா?
பாத்து நடந்துக்கப்பா!
ஆத்தா கட்டை வேகிறப்போ
கொள்ளிப் போடவேனும் வருவியா?

மீண்டும் என் ஆத்மார்த்தமான நன்றியறிதலை வல்லமை நிர்வாகக் குழுவிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்