மீ. விசுவநாதன்

vallamai111-300x1501

அரியும் சிவனும் அறிவி லொருவர் ;
தெரிந்தும் அடிமனம் தேடும் பிரிவை !
கருணை இருந்தால் கடவுள் உடனே
திருமுகம் காட்டும் தினம். (51) 19.02.2015

கனிவு , பணிவு , கவனச் சிறப்பு ,
பனிபோல் தெளிவாய்ப் பழகு மினிமை ,
உதவும் குணத்தா(ல்) உயர்ந்த பதவி
பதமாய் அமைதல் பலம். (52) 20.02.2015

கருவில் இருந்து கடந்து மலர்ந்து
உருவில் எழிலாய் உலகில் இருக்க
உயிரும் உடலின் உதவி யுடனே
கயிற்றில் நடக்கும் கதை. (53) 21.02.2015

ஆதிமுதற் சொல்லே அமிர்தமாம் “ஓம்”மென
ஆதிமறை கூறும் ! அணுவுக்குள் நாதியாய்
ஆண்டவன் வாழ்வதை ஆத்திகம் நம்புமாம் !
தூண்டிடத் தோன்றும் சுடர்.. (54) 22.02.2015

அணிலை அறிவேன் ! அழகாகத் தாவும் !
துணிவா யிலையின் துளியைக் குனிந்து
கடித்துண்ணும் ! ஓடும் ! கவலை அறியாத்
துடிப்பே அதற்குத் துணை. (55) 23.02.2015

விதையை எடுத்து விதைத்தேன் ; நடந்தேன் ;
அதையே மறந்தேன் ; அதன்பின் எதையோ
நினைத்தே மரநிழல் நின்றேன் ! பலனோ
வினையை விதைத்த விதி. (56) 24.02.2015

உறவின் உயிரே உதவிடும் எண்ணச்
சிறப்பாம் ; உடன்பிறப்பு சேர்தல் அறமாம் ;
தினமும் செடிவேர்குச் சேர்க்கிற தண்ணீர்
மனதை உயர்த்தும் மது. (57) 25.02.2015

காலையும் மாலையும் காணும் கதிரவன்
மூலையில் தூங்காமல் மூளையை வேலைக்குத்
தூண்டுகிறான் ; இன்பத் துடிப்போ டியன்கவே
தீண்டுகிறான் என்னைத் தினம். (58) 26.02.2015

மனைவியும் மக்களும் மாறாத நட்பும்
வினைப்பய னென்பர் ; விதியை நினையா
இனிய உறவும் , எளியதோர் வாழ்வும்
பனியிலும் தூயதே பார். (59) 27.02.2015

மெய்மறக்கும் பாட்டும் , மெதுவாய்ச் சிரிக்கின்ற
பொய்யிலாப் பிள்ளைப் பொலிவான மெய்யைக்கை
தொட்டுத் தடவி துயர்மறக்கும் பேருமே
விட்டு விலகா “திரு”. (60) 28.02.2015
a

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *