மீ. விசுவநாதன்

vallamai111-300x150111

கவிதையே என்னுயிர் ; காலக் குழந்தை
செவிகளுக் குள்ளே சிரித்துச் சுவைத்து
மகிழும் கருவை மழையாய்ப் பொழிய
உமிழும் கவியே உயிர். (71) 11.03.2015

கூலிக்காய் வந்தோம் குறைநிறை யோடேநாம்
ஜாலியாய் என்றும் ஜகத்திலே நாலில்
ஒருவராய் அன்புடனே ஒற்றுமையாய் வாழ்ந்தால்
விரும்பி வரவேற்கும் வீடு. (72) 12.03.2015

அவரைப்பூ , ஆகாயம் , ஆழ்கட லெல்லாம்
கவலை யிலாத கனிந்த சிவனே !
நவநீதக் கண்ணனும் ஞானமாம் நீலி
அவளும் அதுதா(ன்) அறி. (73) 13.03.2015

சித்தனுக்கும் அந்த சிவனுக்கும் போக்கேது !
உத்தம னாத்ம உயிராக நித்தனாய்
தேருடலில் வாழ்கின்றான் ! தேடாதே வீணாக
ஊரூராய் ஊர்க்குருவி போல். (74) 14.03.2015

சீட்டுக்குள் ராஜாவின் சித்திரம் பேசாது ;
வாட்டமும் கொள்ளாது ; வாஞ்சையாய் கூட்டத்தில்
கொண்டாட்டம் போட்டு குஷியாய் இருந்திட
வண்டாட்டம் சுற்றியே வா.. (75) 15.03.2015

வண்டியில் ஊர்சுற்றி வந்து தமிழ்ச்சுவடி
கண்டு பிடித்துத்தன் கண்விழ்த்துத் தொண்டினைச்
செய்த தமிழ்முனி சீர்சாமி நாதனை
கைதொழுதால் வாழும் கலை. (76) 16.03.2015

குருவிபோல் சேர்த்துக் குடும்பமாய் வாழும்
அருமையே ஆனந்தம் ; ஆசை பெருகி
அருவிபோல் ஓடினால் அங்கதைத் தாங்க
இருக்குமே பாறை இறை. (77) 17.03.2015

வெளியில் அமைதியும் வேதனை உள்ளும்
ஒளித்திருக்கும் வாழ்வி(ல்) உனக்கு ஒளியில்லை !
உள்ளே அடங்கியும் ஊரில் திரிவதும்
கள்ள மிலாத கலை. (78) 18.03.2015

வாய்திறந்து பாடுவதும் , வந்தோர்முன் புன்னகைத்து
நோய்மறந்து பேசுவதும் , நோகாது தாய்மடியில்
தூங்குவதும் துள்ளிக் குதித்து வறியோரைத்
தாங்குவதும் தங்கமனந் தான். (79) 19.03.2015

கொஞ்சம் சிரிக்கலாம் ; கொஞ்சம் அழுதாலும்
பஞ்சுபோல் மெல்லப் பறக்கலாம் – நஞ்சு
கலக்காத நெஞ்சுள் கவலை வராதே ;
உலகமே உல்லாச ஊற்று. (80) 20.03.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *