(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

“தியாகி கோமதி சங்கர தீக்ஷிதர்”

agsஅவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வருடத்தில் (15.08.1966) சுதந்திர தினக் கொண்டாட்டம் அவனுடைய பள்ளியிலும் காலை எட்டு மணிக்கு நடைபெற்றது. பள்ளியின் நூலகத்திற்கு முன்பாக இருக்கிற பெரிய மைதானத்தில் மாணவ, மாணவிகள் அழகிய முறையில் வரிசையாகக் கூடி இருந்தனர். முக்கிய விருந்தினர் பெரிய கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி, முடிச்சை அவிழ்த்ததும் அதிலிருந்து வண்ண வண்ண ரோஜாப் பூக்கள் கொத்தாக பூமியை நோக்கிப் பறந்து வந்து கொண்டிருக்க “தாயின் மணிக்கொடி பாரீர்..அதைத் தாழ்ந்து பண்ணிந்து வணங்கிட வாரீர்” என்ற மஹாகவி பாரதியாரின் பாடலை மாணவ மாணவிகள் “சல்யூட்” வைத்தபடி பாடினார்கள். தலைமை ஆசிரியர் “அரங்கநாத ராவ்” சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றியும், முக்கிய மாக செங்கோட்டை “வீர வாஞ்சிநாதன்” பற்றியும் கூறிய செய்திகள் அவன் மனதில் இன்றும் பசுமையாகப் பதிந்திருக்கிறது. முக்கிய விருந்தினரின் உரையைவிட அவனது தலைமை ஆசிரியரின் உரையே அவனுக்குப் பிடித்திருந்தது. தேசிய கீதம் பாடி விழா நிறைவு பெற்றதும் அனைவருக்கும் ஒரு இனிப்பு வழங்கப்பட்டது. அவன் அதை வாங்கிக்கொண்டு அவனது வீட்டிற்கு ஓடியே வந்து கொண்டிருக்கும் பொழுது “சர்மாஜி சாலை”யில் உள்ள “பஞ்சாயத் யூனியன்” அலுவலக வாசலில் சுதந்திர தினவிழாக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். சிறிது நேரம் அங்கு நிற்க அவன் விரும்பினான். அந்த வேளையில் ஒரு வயதானவர் கதர் வேஷ்டியும், கதர் சட்டையும் அணிந்து மேடையில் கம்பீரமான குரலில் உரையாற்றிக் கொண்டிருந்தார். பேசும் பொழுதே அவர் தனது வேஷ்டியை இறுக்கிக் கட்டியபடி பேசினார். அவரது பேச்சு அவனைக் கவர்ந்தது. அவர் ஒன்றும் கவர்ச்சியான வார்த்தைகளைச் சொல்லிக் கேட்பவரைத் தன் பக்கம் இழுக்கும் பேச்சாளர் அல்ல. உள்ளத்தில் உள்ள உண்மையை அவர் உரத்த குரலில் கூறினார். அவர், இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகள் எல்லோரும் கட்டாயம் பாரதியாரின் கவிதைகளைப் படிக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறித்தினார். “வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்றும், “சாதிகள் இல்லையடிப் பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம்” என்று கரகரத்த குரலில் ரசித்துப் பாடியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் தனது உரையை முடிக்கும் பொழுது “வந்தே மாதரம்..வந்தே மாதரம்…பாரத மாதாக்கீ ஜே” என்று மூன்று முறை உரக்கச் சொல்லி தனது உரையை முடித்துக் கொண்டார். கூட்டத்தில் எல்லோரும் அவரைத் தொடர்ந்து கோஷமிட்டனர். அவனும் “வந்தே மாதரம்..பாரத மாதாக்கீ ஜே” என்றான். “மாமா இப்ப பேசின தாத்தாவின் பேரென்ன” என்று அவன் பக்கத்தில் நின்றிருந்த பெரியவரைக் கேட்டான்.

“இவர்தான் கோமதி சங்கர தீக்ஷிதர்”. பெரிய தியாகிடா. காங்கிரஸ்காரர். நம்மூர்காரராக்கும்” என்று அவர் சொன்னதில் அவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அவனுக்கு , பாரதியாரின் பாடலை படிக்கத் தூண்டிய மகாத்மாதான் கோமதிசங்கர தீக்ஷிதர். அதன் பிறகு அவன் அந்த ஊரில் பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பாக, தேரடித் தெருவில் நடந்த கூட்டங்களில் அவரின் பேச்சைக் கேட்டிருக்கிறான். ஒரு முறை ,” மாமா உங்களோடு பேச்சு நன்னா இருந்தது” என்று அவன் சொன்ன போது , ” அம்பி நன்னாப் படிக்கணும்…நேரத்த வீணாக்காதே…முன்னுக்கு வா” என்று அவனது முதுகை தட்டி அவர் சொன்னதில் அவனுக்கு விருது கிடைத்த இன்பம் இருந்தது. அதை அவன் அவனுக்கு அம்மாவிடம் கூறி மகிழ்ந்தான்.

ஆசாரக் கட்டுப்பாடு மிகுந்த காலத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக (ஹரிஜனங்களுக்காக) ஒரு விடுதியை ஊருக்கு வெளியில் தன் சொந்த முயற்சியில் துவக்கியவர். கல்லிடைகுறிச்சி லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர், யக்னேஸ்வர சர்மா போன்ற விடுதலைப் போராட்டத் தியாகிகளோடு தானும் இணைந்து போராடியவர். வெள்ளைக்காரக் கலெக்டர் “ஆஷ் துரை ” யைச் சுட்டுக் கொல்வதற்கு யார் யார் தயார் என்ற சீட்டுக் குலுக்கிப் போட்ட பெயர்களில் ஒன்று “கோமதி சங்கர தீக்ஷிதர்” என்று சுதந்திரப் போராட்ட வரலாறு கூறுகிறது. செங்கோட்டை வாஞ்சிநாதன் பெயர் வந்தது அவர் அந்தக் காரியத்தைச் செய்து முடித்து, முடிந்தார்.

தீக்ஷிதர் மீது பெருந்தலைவர் காமராஜருக்கு மிகுந்த மரியாதை உண்டு. எப்பொழுது கல்லிடைகுறிச்சிக்கு காமராஜர் வந்தாலும் “தீக்ஷிதர்” எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பாராம். தேசம்தான் தன் மூச்சு என்று வாழ்ந்தவர் தீக்ஷிதர். அதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து மூன்று முறை அவர்தான் காங்கிரஸ் கட்சி சார்பாக நிறுத்தப் பட்டார். வென்றார். காங்கிரஸ் தோற்று தி.மு.க. ஆட்சிக்கு வந்த பொழுதும் கோமதி சங்கர தீக்ஷிதர் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். அவர் எப்பொழுதும் புகைவண்டியில் சாதாரண வகுப்பில்தான் பயணம் செய்வார். அப்படி இருந்தால்தான் சாதாரண மக்களின் குறைகளை நாம் அறிந்து கொண்டு அதற்கான நிவாரணத்தையும் செய்ய முடியும் என்று சொல்வாராம். “பாரத மாதா பஜனை சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி, மஹாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி தேச பக்தியைத் தூண்டிய தியாகி அவர். திலகர் வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியின் செயலாளராக இருக்கக் கூடிய கே.எஸ். சங்கரசுப்ரமணியன் ஒரு முறை பள்ளியின் வேலை விஷயமாக சென்னையில் சட்டமன்ற அலுவலகத்திற்குச் சென்றிருந்த சமயம், அங்கே கோமதி சங்கர தீக்ஷிதரைச் சந்தித்திருக்கிறார். அப்பொழுது தீக்ஷிதர் சங்கரசுப்ரமணியன் வந்த விபரங்களைக் கேட்டு விட்டு,” அம்பி..இன்னிக்குத்தான் என்னோடு நக்ஷத்திரம் ..எண்பது முடிந்து எண்பத்தி ஒன்று ஆரம்பம்” என்றாராம். உடனே,” மாமா எனக்கு ரொம்ப பாக்கியம்.” என்று அவரை வணக்கிவிட்டு,” இன்னிக்கு நீங்க என்கூடத்தான் சாப்பிடணும்..வாங்கோ மௌவுட் ரோடு கீதா கபேக்குப் போய்ச் சாப்பிடலாம்” என்று அழைத்துக் கொண்டு போனதாகவும் கே.எஸ்.சங்கரசுப்ரமணியன் மாமா அவனிடம் கூறியிருக்கிறார். அதன் பிறகு அப்போதைய முதல் அமைச்சர் மு.கருணாநிதிதான் சட்டசபையிலேயே தீக்ஷிதருக்கு சதாபிஷேக விழாவை நடத்திப் பெருமை கொண்டார் என்பது வரலாறு.

“சங்கமுத்துத் தேவர்”

தியாகி தீக்ஷிதருடனேயே எப்பொழுதும் இருக்கக் கூடிய நெருங்கிய தொண்டர்களில் ஒருவர் “சங்கமுத்துத் தேவர்”. மிகவும் எளிமையானவர். நேர்மையாளர். தீட்சிதரின் மறைவுக்குப் பின்னால் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக வெற்றி பெற்றவர் சங்கமுத்துத் தேவர். வடக்கு மாடத்தேருவில் இருந்த கே.எஸ். வேங்கடராமையர் வீட்டிற்கு சங்கமுத்துத்தேவர் வந்திருந்த சமயத்தில் அவரிடம் அவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேசி இருக்கிறான். சிருங்கேரி சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் கல்லிடைகுறிச்சிக்கு 04.05.2012, 05.05.2012 அன்று விஜயம் செய்திருந்த சமயம் குருவை தரிசிக்க சங்கமுத்துத் தேவர் வந்திருந்தார். அப்பொழுதும் அவன் அவரிடம் பேசிக்கொண்டிருந்தான். அடக்கமும், எளிமையும் உள்ள நல்ல பண்பாளர். நேர்மையாளர். அவரைப் பற்றி இன்று (04.06.2015) ஏதோ அவனுக்கு நினைவு வர, அவரை நன்கு அறிந்த அவனுக்கு நண்பரான கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியனிடம் ,”அம்பி…சங்கமுத்துத் தேவர் எங்க இருக்கார்…இப்ப எப்படி இருக்கார்” என்று கேட்டான். ” அவர் இறந்து நான்கு நாட்கள் ஆகிறது..நான் சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த பொழுது அந்தச் செய்தி எனக்குக் கிடைத்தது” என்று அவனிடம் கீழாம்பூர் சொன்னார். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சங்கமுத்துத் தேவர் பற்றிய நினைவுகளை அவன் நண்பன் கீழாம்பூருடன் பகிர்ந்து கொண்டான். அப்பொழுது கீழாம்பூர், கோமதி சங்கர தீக்ஷிதருக்கும் சங்கமுத்துத் தேவருக்கும் குரு – சிஷ்ய உறவுதான் இருந்தது என்றும் தேவருக்கு தீக்ஷிதரின் மீது அளவிலாத பக்தியே இருந்ததென்றும் சொன்னார். இது போன்ற தியாகிகளைப் பற்றி யாருமே இப்பொழுதெல்லாம் கேட்ககூட மாட்டேன் என்கிறார்களே என்று கீழாம்பூர் மிகவும் வருத்தப் பட்டார்.

கோமதி சங்கர தீக்ஷிதர் 1962ம் வருடப் பொதுத் தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினராக அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டி இட்ட பொழுது தேர்தல் நிதியாக பெட்ரோல் பேங்க் நடேச ஐயர் ரூ.17500/- (ரூபாய் பதினேழாயிரதி ஐநூறு) கொடுத்திருக்கிறார். அதில் செலவு ரூ.12400/- (ரூபாய் பனிரெண்டாயிரதி நானூறு) போக மீதமுள்ள ரூ.5100/-ஐ நிதியளித்த நடேச ஐயர் அவர்களிடமே திருபித்தர காமராஜர் அவர்களிடம் அனுமதி பெற்று, திருப்பிக் கொடுத்து விடுகிறார். இந்தச் செய்தியை தனது நாட்குறிப்பில் (டைரி) தீட்சிதர் குறித்து வைத்திருக்கிறார் என்ற செய்தியையும் சொல்லி, சட்டமன்ற உறுப்பினராக இல்லாத சமயம் தீக்ஷிதர் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்பொழுது தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். ஏ.என்.சிவராமன், தீக்ஷிதரின் சீடர். ஏ.என்.எஸ். தீட்சிதரைப் பார்த்து,” நீங்கள்தான் இப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் இல்லையே…சென்னையில் உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்டிருக்கிறார். “நம்மூரில் மூன்று தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப் படுகிறது. அவர்களுக்கு நல்ல புத்தி இருக்கிறது..மேல் படிப்பு வசதி செய்து கொடுத்தால் நன்றாக முன்னுக்கு வருவார்கள். அதுதான் நான் நேரிலேயே வந்து வேண்டியதைச் செய்து கொடுக்கலாம் என்று வந்திருக்கிறேன் என்று சொன்னாராம். அதற்கு,” நீங்கள்தான் உண்மையாகவே தாழ்த்தப் பட்டவர்களை மேலே கொண்டுவர உழைக்கும் மாமனிதர்” என்று தினமணி ஆசிரியர் சிவராமன்ஜி சொன்னதாக நண்பர் கீழாம்பூர் சொன்னார்.

” ஏ.என்.சிவராமன்ஜி “

ansதினமணி ஆசிரியர் சிவராமன்ஜி அவர்களும் தேசத்திற்காகப் பாடுபட்ட தியாகிதான். கல்லிடைகுறிச்சி “ஜார்ஜ் மிடில் ஸ்கூல்”ல் எட்டு ஆண்டுகள் ஆசிரியராக வேலை பார்த்திருக்கிறார். இதுபற்றி அவரே கைப்பட ஒரு கடிதத்தை திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியின் செயலாளருக்கு எழுதி இருக்கிறார். அதை பள்ளியின் நூற்றாண்டு விழா மலரில் வெளியிடிருக்கிரார்கள். அந்த எட்டு வருடங்களில் அவருக்கு தியாகிகள் லக்ஷ்மி அம்மாள், சங்கர ஐயர். கோமதிசங்கர தீக்ஷிதர், எக்னேஸ்வரசர்மா போன்ற பெரியோர்களிடம் நெருக்கிப் பழகும் பேறு கிடைத்துள்ளது. பாலகங்காதரத் திலகர் மரணமடைந்த பொழுது ஊரில் இருந்து இருநூறு பேர்களை தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துக் கொண்டு சென்று கூட்டுத் தர்ப்பணம் (நீத்தார் கடன் ) செய்திருக்கிறார்.

அந்தப் பெரியவரை அவனுக்கு நேரில் சென்று பார்த்துப் பேசும் பாக்கியத்தை அவனுக்கு நண்பன் கீழாம்பூர்தான் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்பொழுது கீழாம்பூர் சங்கரசுபிரமனியன் “அம்மன் தரிசனம்” ஆன்மிக மாதப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். சிவராமன்ஜி அம்மன் தரிசனத்தில் வேத மந்திரங்கள் என்ற தலைப்பில் அற்புதமாக ஒரு நெடுந்தொடர் எழுதினார். அவன் அந்தக் கட்டுரையை ரசித்துப் படிப்பான். ஒருமுறை அவனும், அவனது மனைவி சீதாலக்ஷ்மியும் அவரை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தனர். அவன் அவனுக்கு மனைவியை, ” இவள் என்னோடு “மிசெஸ்” சீதாலக்ஷ்மி” என்று அறிமுகப் படுத்தினான். உடனே அவர்,” டேய்…அப்படிச் சொல்லக் கூடாது….என்னோடு “ஒய்வ்” (wife)ன்னு சொல்லு” என்று அவனைத் திருத்தி, அவர்கள் இருவரையும் ஆசீர்வாதம் செய்தார். சீதலக்ஷ்மியிடம் அவளது கல்வித் தகுதிகளைக் கேட்டு மகிழ்ந்தார். எனக்கும் கொஞ்சம் “பெங்காலி” தெரியும் என்றார். நிறை குடங்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதன் பிறகு பல முறை அவன் அவரை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறான். எப்பொழுதும் எதையேனும் படித்துக்கொண்டே இருப்பார் அல்லது வேத மந்திரங்க்களைக் கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் மறைந்த செய்தி கேட்டு அவன் அவரது இல்லத்திற்குச் சென்றான். அங்கே அவரது உடலுக்கு வலதுபுறம் வேதமந்திரங்களைச் சொல்லியபடி அந்தணர்களும், மறுபுறம் நான்கைந்து இஸ்லாமிய அன்பர்கள் திருக்குரானையும் ஓதியபடி இருந்த காட்சி அவனுக்குள் மறைபொருளான இறைவனின் இருப்பை உணர்த்தியது. அவர் திருக்குரானை அதன் அரபிக்மூல மொழியிலேயே நன்கு ஓதக் கற்றிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய அன்பர்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டும் இருந்தார் என்று கீழாம்பூர் அவனிடம் சொன்னதில் அவரின் ஆர்வத்தையும், அறிவாற்றலையும் எண்ணி “சிவராமன்ஜி” அவர்களை மனதார வணங்கினான். “இருந்தாலும், இறந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே”.

இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

படங்கள் உதவி   K.V,. அன்னபூர்ணா . நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “” அவன், அது , ஆத்மா” (15)

  1. சிவராமன்ஜி என ஏன் ஜி யை கடைசியில் போடுகிறீர்கள். ஜி பழக்கம் பொதுவாக வட இந்திய மாநிலங்களை சார்ந்தது. அதை தமிழுக்கு கொண்டுவர தேவையில்லை. சிவராமான் என சாதாரண பெயரை குறிப்பிட்டால் போதும்.

  2. அன்புள்ள திரு. விஜயராகவன் அவர்களுக்கு,
    வணக்கம்.
    அவரோடு நெருக்கமாக இருக்கக் கூடியவர்கள் எப்படி அவரை மதிப்புடன் அழைத்தனரோ அப்படியேதான் அந்த தொண்ணூற்றி ஆறு வயது நிறை வாழ்வு வாழ்ந்தவரைக் குறிப்பிடிருக்கிறேன். அவரது காலத்தில் அவரை அப்படிதான் அழைத்தனர். திரு. காமாராஜர் கூட “சிவராமன்ஜி” என்றுதான் அன்போடு அழைப்பார் என அவரது உறவினரான கலைமகள் ஆசிரியரும் எனக்கு நண்பருமான “கீழாம்பூர்” சங்கரசுப்ரமணியன் கூறுவார். இதில் வடக்கு , தெற்கு எதற்கு?. உங்கள் கருத்துக்கு நன்றி.

    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  3. அன்புள்ள மீ.விஸ்வநாதன்

    ஜீ என்ற விகுதி உர்து/ஹிந்தியில் இருந்து வருகிறது. ஏன் ஒருவரை குறிப்பிட உர்து /ஹிந்தி வார்த்தைகளை போட வேண்டும். அது உங்கள் பிரச்சினை மற்றும் அல்ல. பேச்சில் ஒரு மூன்றாமவரை குறிப்பிடும் போது, `சார்` விகுதியும் போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவை தேவையற்றவை. தமிழில்தான் மரியாதையை குறிக்க ர் (வந்தார் , போனார் என) வினைச்சொல்லில் போடுகிறோமே, அது போதாதா.

    விஜயராகவன்

  4. The memorable recollections bring back enthusiyasam and calmness for our mind.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *