மூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்” கதை
— பிச்சினிக்காடு இளங்கோ.
அண்மையில் என் கைக்கு ஒரு கனமான கதை கிடைத்தது. நான் படித்ததும் என்னை அழவைத்த கதை அது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற ஒளவையின் வாய்மொழியில் கதையின் தலைப்பைக்கொடுத்தது நுண்ணறிவின் எடுத்துக்காட்டு. அப்பொழுதுதான் அதன் கனத்தை, உட்பொருளை உணர உணர வலி அதிகமானது.
சாதி என்னும் பேய் இன்னும் நம்மை விடுதலைசெய்யவில்லை. நாமும் விடுதலைபெறவில்லை. ஆனால் அன்றைக்கு அதற்கு விடுதலை தேடிய காலகட்டத்தில் ஒரு கருவியாக இந்தக்கதை அமைந்திருக்கிறது. மனதைப்பரிமாறிப் பழகும் நெஞ்சங்கள் சாதியைப்பார்ப்பதில்லை. இதைத்தான் கண்ணதாசன் மிக எளிதாக “காதலுக்கு சாதியில்லை மதமுமில்லையே” என்று பாடல்வழி சொன்னார்.
ஆனால் எல்லாம் எழுத்தாகவே இருக்கிறது. ஹரிசன இளஞன் அர்த்தநாரி சேலம் ஜில்லா கோக்கலையைச்சேர்ந்தவன். அகில இந்திய ஹரிசன சேவா சங்கத்தின் காரியதரிசி தென்னாட்டுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது அர்த்தநாரியைக்கண்டு சந்தோசப்பட்டு தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே தன்வீட்டில் தங்கவைத்துப் படிக்கவைத்து வேலையும் வாங்கிக்கொடுக்கிறார். பின்பு அர்த்தநாரி பெங்களூரில் அதே கம்பெனியைச்சேர்ந்த பெரிய நெசவுமில்லில் வேலைக்குவருகிறார். மாதம் இருநூறு ரூபாய் சம்பளத்தில் இரண்டு வருடம் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
அவருக்குமேல் பணியில் இருந்தவர் கோவிந்தராவ். இங்கிலாந்து சென்று மான்செஸ்டரில் பயிற்சிபெற்றுவந்தவர். இருவரும் நண்பர்களானார்கள். அர்த்தநாரி கோவிந்தராவ் வீட்டுக்குவரும்போது அவரின் தங்கை பங்கஜமும் நன்றாகப் பழகினார்கள். பங்கஜம் தாய் தந்தையைப் பத்து வயதிலேயே இழந்தவர். எல்லாமே கோவிந்தராவ்தான். இருவரும் பழகுவதைக்கண்டு மகிழ்ந்த கோவிந்தராவ் தங்கையிடம் சம்மதம் கேட்கிறார். “சாதியைப்பற்றி என்ன இருக்கிறது? அனால், அவர் மனம் எப்படியோ?” என்கிறார் பங்கஜம்.
இதை அர்த்தநாரியிடம் சொன்னபோது அவரடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. திடீரென்று அர்த்தநாரியின் முகம் மாறிவிட்டது. “நான் என்ன சாதி? நீங்கள் எந்தச் சாதி? என்றார் அர்த்தநாரி. “சாதியைப்பற்றி என்ன பேச்சு?” முதலியார் என்ன? பிராமணனென்ன? என்கிறார் கோவிந்தராவ். இதையெல்லாம் தள்ளிவைத்து ரொம்ப நாளாயிற்று என்கிறார். அர்த்தநாரியும் பங்கஜமும் மனம்விட்டுப்பேசி சம்மதம் தெரிந்துகொள்கிறார்கள். ஆனால் அர்த்தநாரி தொடக்கத்தில் தன்னை முதலியார் என்று சொல்லிவைத்துவிட்டார். இப்போது மனம் குடைகிறது. சொல்லிவிடலாம் என்றால் திருமணம் தடைபடுமோ என்ற அச்சம் ஒருபக்கம். ஆசை ஒருபக்கம்.
பங்கஜம் எதார்த்தமாக உங்கள் பெற்றோரைப்பார்க்க நாம் போகலாம் என்கிறார். கோக்கலை கிராமத்தில் காலரா நோய் வந்துவிட்டது. இப்பொழுது போகமுடியாது என்று பொய்சொல்கிறார் அர்த்தநாரி. மிக இயல்பாக பங்கஜம் பயந்து உங்கள் பெற்றோரை வேறு இடத்திற்கு அனுப்பி வையுங்கள் அல்லது இங்கே அழைத்துவிடுங்கள் என்கிறார். அர்த்தநாரி தன்சாதியை பங்கஜம் தெரிந்துகொள்ளாமலிருப்பதற்கு ஒரேவழி திருமணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்வதுதான் என முடிவெடுத்திருந்தார். சொன்னதுபோலவே அப்போது அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. ஊரில் விஷபேதி பரவியிருப்பதாக. முப்பது ரூபாய் அனுப்பினால் சேலத்திற்குப்போய்விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அர்த்தநாரியின் அப்பா முனியப்பன் குடிகாரர். தாய் குப்பாயி. அண்ணன் ரெங்கன் ஆசிரியர். அப்பாவின்மேல் வெறுப்பிலிருந்தார் அர்த்தநாரி. பணம் அனுப்பச்சொல்லியும் அர்த்தநாரி அனுப்பவில்லை. அடுத்து ஒரு மடல். அதில் அம்மாவுக்கும் பேதி நோய் கண்டிருப்பதாக எழுதியிருந்தார். அன்றிரவே சேலம் போனார். உடனே ஊருக்குப்போகாமல் சேலத்தில் நான்குநாளை கழித்துவிட்டு கோக்கலை கிராமத்திற்குச்செல்கிறார். அப்போது தாயும் அண்ணனும் இறந்துவிட்டார்கள். தந்தை தன்னைப் பெங்களூருக்கு அழைத்துச்செல்லுமாறு அர்த்தநாரியிடம் கெஞ்சி அழுகிறார்.
தந்தையின் கையில் ஒரு பத்து ரூபாய் நோட்டைக்கொடுத்துவிட்டு சேலம் வந்துவிட்டார். தாயையும் அண்ணனையும் கொன்ற குற்ற உணர்வு அர்த்தநாரியைப் பிடிங்கித் தின்கிறது. பெங்களூர் வருகிறார். யாருக்கும் சொல்லாமல் மீண்டும் ஊருக்குச்செல்கிறார். சேலம் போனதும் கோக்கலையில் ஓர் ஆதித்திராவிடர் கிணற்றில் விழுந்து இறந்தாகச்சொல்கிறார்கள். கோக்கலைசென்று இறந்தது தன் தந்தைதான் என்பதை உறுதிசெய்துகொண்டு சேலத்திலிருந்து பெங்களூருக்கு வந்து பங்கஜத்திடம் நடந்த்தைச்சொல்லி தன்னை மறந்துட வேண்டிக்கொண்டார். ஜுரத்தில்சிக்கிவிடுகிறார் .
பங்கஜமும் கோவிந்தராவும் நன்குகவனித்துக்கொள்கிறார்கள். குணமானபின்பு “நான் பறையன், பாதகன், உண்மையில் தீண்டத்தகாதவன், பொய்யன், எனக்கு விவாகம் வேண்டாம். என்னை நீங்கள் மறந்துவிடவேண்டும்” என்கிறார் அர்த்தநாரி. பங்கஜம் “நீர் எந்தசாதியாய் இருந்தால் என்ன?” எனச் சமாதானப்படுத்தினார். காதல் உள்ளத்தைக்காட்டினார். கடுகளவும் வேற்றுமையில்லை என்பதை வெளிப்படுத்தினார்.
“நான் கொலைப்பாதகன், தகப்பனாரையும் தாயையும் கொன்றவன்” என்று நடந்தையெல்லாம் சொல்லிவிட்டு, வேலையை இராஜினாமா செய்துவிட்டு கோக்கலைக்குப்போய்வுடுகிறார் அர்த்தநாரி. கோக்கலைச்சேரியில் மாரியம்மன் கோயிலில் பள்ளிக்கூடம் வைத்திருக்கும் சாமியார் அர்த்தநாரிதான் எனக் கதை முடிகிறது.
சிறுகதைக்கேயுரிய யுத்திகள், மொழிநடை, திருப்பம் அனைத்தும் கையாளப்பட்டு எழுதப்பட்ட கதைதான் “அன்னையும் பிதாவும்”. கதையின் தொடக்கத்தில் பங்கஜத்தின் அண்ணன் கோவிந்தராவ் “நீங்கள் இருவரும் பிரியமாயிருக்கிறிர்களே. நாம்தான், சாதி குலம் கவனிப்பதை விட்டுவிட்டோமே. ஏன் அர்த்தநாரியை நீ விவாகம் செய்துகொள்ளக்கூடாது? என்றார். “சாதியைப்பற்றி என்ன இருக்கிறது? ஆனால், அவர் மனம் எப்படியோ?” என்றாள் பங்கஜம். இங்கே அடிப்படையில் சாதி முக்கியமல்ல திருமணத்திற்கு மனஒப்புதல் மிக முக்கியம் என்பதை பெண்ணின் குரலாக பதிவுசெய்கிறார்.
சாதியைச்சொல்லிவிடவேண்டும் என்று முடிவெடுத்த அர்த்தநாரி “நாம் இருவரும் பிரியப்பட்டிருக்கும்போது இந்தச்சாதிப்பிரச்னைக்கு என்ன இடம்? இந்த அநியாயத்தை நாம் ஏன் இடம்கொடுத்து வளர்க்கவேண்டும்? இந்தச்சாதியை யார் நிர்மாணித்தார்கள்? அது சுத்தப்பொய்யல்லவா? அவளிடம் நான் ஏன் அதை பொருளாகக்கருதிச் சொல்லவேண்டும்? அதைச்சொல்லிக் காரியம் முழுதும் கெட்டுவிடவா செய்வது! அவர்களும் சாதியைப்பற்றிக் கவலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குமேல் நான் ஏன் அதைப்பற்றிப் பேச வேண்டும்? “ என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு உண்மையை மறைக்கத்தீர்மானித்தார்.
“பங்கஜம், உண்மையில் உனக்கு இஷ்டமா? நாமிருவரும் கூடிவாழலாமா?” என்றுமட்டும் கேட்டார். “உங்களுக்கு இஷ்டமா?” என்றாள் பங்கஜம். பங்கஜத்தை விரும்பிய அர்த்தநாரி சாதியை மறைத்துவிடுகிறார். அர்த்தநாரியை விரும்பிய பங்கஜம் சாதியை மறந்துவிடுகிறாள். அர்த்தநாரியின் மனவிருப்பத்தைமட்டுமே அவள் எதிர்பார்க்கிறாள். அவரும் அதைத்தான் எதிர்பார்த்தார். அப்படிப்பட்டவள்முன் சாதியை மறைத்து வாழநினைத்தது தவறு. கட்டிக்கொண்டு டெல்லிக்கு ஓட நினைத்தது தவறு. பெற்றோர் வாழ பணம் அனுப்பினால் போதும் என்று நினைத்ததும் தவறு. இப்படித் தவறுகளின் வடிவமாக அர்த்தநாரி காட்டப்பட்டிருக்கிறார்.
அர்த்தநாரி நன்றாகப்வெளிப்படையாக சாதியைச்சொல்லி பங்கஜம், கோவிந்த்தராவ் எப்படி நடந்தாலும் கவலையில்லை என்று வாழ்ந்திருக்கவேண்டிய அர்த்தநாரி சாதியை மறைக்க தாய் தந்தையை இழந்த்ததாக கதைமுடிகிறது. “நீர் எந்தச்சாதியாக இருந்தால் என்ன?” என கதையின் இறுதியில் பங்கஜம் பேசியும் குற்ற உணர்வாளனாக அர்த்தநாரியை ஆக்கி கதையை முடிக்கிறார். அது உண்மையும்கூட. எல்லா குற்றமும் அர்த்தநாரிக்கே உரியது. ஒருவகையில் இது அனைவருக்கும் பாடம்.
ஒன்றை மறைத்து இன்னொன்றைப் பெறுவதில் நன்மை இருந்தாலும் இழப்பது நிம்மதி எனபதை எச்சரிப்பதாகவே உணரமுடிகிறது. ஓரிடத்தில் “உன்கூட நாங்களும் வந்துவிடுகிறோம் “ என்பார் தகப்பன். “முடியவே முடியாது. உன்னைக்கண்டால் என்னை வேலையிலிருந்துநீக்கிவிடுவார்கள்” என்பார் அர்த்தநாரி. பெற்றோரை மறைத்து, பெற்றோர் இல்லாமலேயே வாழ நினைக்கும் இளஞனே அர்த்தநாரி. இவரிடம் தாழ்வு மனப்பான்மையும் ஆசையும் கூடிவிளையாடுவதை உணரமுடிகிறது. தனக்குக்கிடைத்த வாழ்க்கையை ஒருமுறை உணர்ந்திருந்தால் இப்படிப்பொய்யில் வாழ்க்கையை இழந்திருக்கத்தேவையில்லை.
கடிதமுறை, உரையாடல், திருப்பம் எனச்சேர்ந்து கதையை வலுவாக எழுதியிருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள். இங்கே தாழ்த்தப்பட்ட இளஞனைத் தாழ்வுமனப்பான்மையுடையவனாகவும் மேல்சாதிக்காரர்களைப் பெருந்தன்மை படைத்தவர்களாகவும் திட்டமிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர் என ஒரு குற்றச்சாட்டைவைக்கலாமா? எனவும் யோசித்தேன். கதையில் அதற்கு இடமில்லை. கதையின் போக்கின்படி எல்லாக்குற்றமும் அர்த்தநாரி தலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அவர் மனச்சாட்சியைக்கொன்றுவிடுகிறார்.
மேல்சாதிப்பெண்ணோடு வாழ்வதற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையின் அடிநாதத்தை இழந்த பாவியாகிறார் அர்த்தநாரி. ஆனாலும் அர்த்தநாரி எதையும் மறைத்து வாழவில்லை. உண்மையைச்சொல்லி உணர்ந்து மனச்சாட்சியுடன் வாழும் மனிதனாக மாறிவிடுகிறார். இப்படி அனைவரையும் இழந்து எதையும் பெற யாரும் எண்ணக்கூடாது. தாழ்வு மனப்பான்மை எந்த நிலையிலும் கூடாது என்பதே பொதுச்செய்தியாகிறது. பங்கஜம் அவருடைய அண்ணன் கோவிந்தராவ் போன்றவர்கள் கதாபாத்திரமாக அமையாமல் சமூகத்தின் பாத்திரமாக விளங்கவேண்டும் என்பதே நம் ஆசை.
ஆக, ஆசிரியரின் கோணம் சரியானது என்பதில் ஐயமில்லை. அதன் ஓட்டம் இயல்பானது. பழுத்த நுட்பமான அரசியல்வாதியிடம் மறைந்திருக்கும் இலக்கியவாதியைக்காட்டும் கதை ‘அன்னையும் பிதாவும்.’
அழவைத்த கதை மூதறிஞர் இராஜாஜியின் “அன்னையும் பிதாவும்”
(பிச்சினிக்காடு இளங்கோ- 24.05.2015 5.30மாலை)