நினைத்துப் பார்க்கிறேன்

புவன் கணேஷ்
Bhuvan Ganesh
‘தார்’ பாலைவன மணலில் கால்கள்
புதையப் புதைய, நீண்ட தூரம் நடந்தால்
எப்படியிருக்கும்?

நா வறண்டு, கண்கள் எரிந்து,
பாதம் சிவந்த நிலைதனில்,
பரந்து விரிந்த ஒரு மரமும்,
அதனருகே ஒரு ஓடையும் கிடைத்தால்
எப்படியிருக்கும்?

குதிரையும் ஒட்டகமும் களைக்கும் அளவு,
பயணம் செய்து சோர்ந்த நிலையில்,
ஒரு ஓலைக் குடிசையின் உள்ளிருந்து,
மோர்ச் செம்புடன் ஒரு மூதாட்டி வந்து,
“பேராண்டி, இந்தா கொஞ்சம் மோர் குடி”
என்று என் முன் உரைத்திட
எப்படியிருக்கும்?

புழுதியும் புகையும் கடந்து வந்த சாலையை
மறைக்க மறைக்க! காற்றில் எழுந்த
மணல்துகள்கள் முகத்தில் முட்களாய்க் குத்திட
நாட்கணக்கில் வாகனத்தில் பயணித்த பின்
குறுக்கிடும் குக்கிராமத்து வாண்டுகள்
“ஹையா!  மாமா வந்தாச்சு!” என்று கூச்சலிட்டு
என் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டால்
எப்படியிருக்கும்?

கிராமத்துக் கண்மாயில் மெல்லலை எழுப்பி
வரும் தென்றலை சுவாசித்தபடி
“ஜல், ஜல்” என்று சலங்கைகள் ஒலிக்க
மாட்டு வண்டியில் சென்றால்
எப்படியிருக்கும்?

அம்மாவிற்கு ஆரம், தங்கைக்குத் தங்க வளை,
காதலிக்கு முத்து மாலை என்று கை நிறைய பரிசுகளுடன்,
திடீரென்று தாய் முன் தோன்றி, அவரை
ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மகிழ்ச்சிப் படுத்தினால்
எப்படியிருக்கும்?

அட……………………………
சட்டென்று என் கனவு கலைந்துவிட்டது.
வெளியில் சென்று வெளிச்சம் பார்க்க முயன்றேன்!

அங்கே………………………….
சூரியனை மறைத்திடும் பனிப் புகையும்,
விழிகளை உறுத்திடும் பனித் தூசியும் நிறைந்து,
சூழ்நிலை விறைத்து, உலகம் உறைந்து போய்ப்
பார்வையில் தட்டுப்பட்டது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க