முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalaiஇந்தியாவில் காலம் காலமாகப் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததன் விளைவாக இப்போது கணவனைத் தெய்வமாக நினைக்கும் மனைவிமார்களும் அவனில்லாமல் தங்களுக்கு வாழ்க்கை இல்லை என்று நினைப்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள். கணவனை எதிர்த்துத் தங்களுக்கென்று ஒரு தனி அபிப்பிராயமோ, கருத்தோ இருக்கிறது என்று கூறுபவர்களையோ, கணவனோடு ஒத்துப் போக முடியாமல் தனித்து வாழ நினைப்பவர்களையோ இந்தியச் சமூகம் அனுதாபத்தோடு நடத்துவதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம். இவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதை விட தங்களைப் பற்றிச் சமூகம் என்ன நினைக்கும் என்பதுதான் இவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இப்படி இருப்பதால் ஆண்களும் அவர்களை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள். இப்படி கணவனைத் தேவைப்பட்டாலும் தட்டிக் கேட்காத இந்தப் பெண்களைக் கண்டால் எனக்குச் சில சமயங்களில் சோகமும் ஒரு சில சமயங்களில் கோபமும் ஏற்படுகிறது. இவர்கள் ஏன் தேவைப்படும்போது கணவனை எதிர்க்கக் கூடாது, அவனுடைய வார்த்தைகளை ஏன் மந்திரமாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே என் சோகத்திற்கும் கோபத்திற்கும் காரணம்.

ரு குடும்பத்தில் திருமணம் ஆனதிலிருந்து கணவன், மனைவி மேல் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான். அவளை மட்டுமல்ல, அவளுடைய பெற்றோர்களையும் தாறுமாறாகத் திட்டிக்கொண்டிருக்கிறான். எத்தனை தடவைதான் மனைவியும் கணவனின் ஏச்சுகளைப் பொறுத்துக்கொண்டிருப்பாள்? எப்போதாவது அவளும் வெடித்துவிடுகிறாள். மருமகள் கணவனை எதிர்த்துப் பேசுவதுதான் கணவனின் தாய்க்குத் தெரிகிறதேயொழிய தன் மகன் அவளைச் சொல்லால் வதைப்பது அவளுக்குத் தெரியவே இல்லை. வீட்டில் என்றுமே நிம்மதி இல்லை. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த இந்தத் தம்பதிகளின் இரண்டு குழந்தைகளும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் படிக்காமல் தேவையில்லாதவற்றைப் படித்துக்கொண்டு இன்று சமூகத்தில் வாழத் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த போக்கிற்குக் கணவன்தான் காரணம் என்று எவ்வளவோ மனைவியிடம் எடுத்துச் சொல்லியும் அவள் கணவனை விட்டு வரத் தயாராக இல்லை. ஏனென்றால் சமூகம் தன்னை எப்படிப் பார்க்கும் என்பதுதான் இவளுடைய பெரிய கவலை. மேலும் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து, கணவனுக்குச் சேவை செய்யாவிட்டால் அது தான் செய்யும் பெரிய பாவச் செயல் என்று கருதுகிறாள். தான் இந்தப் பிறவியிலோ அல்லது போன ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலோ பெரிய பாவம் செய்திருப்பதால்தான் இந்தக் கணவனோடு கடவுள் தன்னை இணைத்திருக்கிறார் என்று கருதும் இவள் கணவனைக் கவனிப்பதை விட்டுவிட்டால் இன்னும் பெரிய தண்டனையாகக் கடவுள் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சி, வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவிற்குத் தன்னை இம்சிக்கும் கணவனோடு குடும்பம் நடத்தி வருகிறாள். இந்தப் பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் இவள் மீது எனக்கு ஏற்படுவது கோபமா அல்லது சோகமா என்று என்னாலேயே கணிக்க முடிவதில்லை.

ன்னொரு குடும்பம். மனைவி அழகி என்று எல்லோராலும் கருதப்பட்டாலும் கணவன் மாத்திரம் ஒரு போதும் இவளை அழகி என்று கூறியதில்லை. வக்கணையாக அவனுக்குச் சமைத்துப் போட்டாலும் அதை ஒரு போதும் பாராட்டுவதில்லை. சமைத்துப் போடுவது உன் கடமை, சாப்பிடுவது என் உரிமை என்பது போல்தான் நடந்துகொள்வான். இந்த விஷயத்தில் இவன் மட்டுமல்ல, பெரும்பாலான கணவன்மார்கள் அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். இவன் இதில் எல்லோரையும் மிஞ்சிவிடுகிறான். அதுதான் வித்தியாசம். இவன் பெரிய சோம்பேறி.  வியாபாரம் என்று ஒன்று இருந்தது. அதில் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை. கடையில் போய் உட்கார வேண்டியது, அங்கு யாரோடாவது பேசிப் பொழுதைக் கழிக்க வேண்டியது ஆகிய இவைதான் இவனுடைய தினசரி வேலை. இவனுடைய மாமனாருக்கு ஆண் குழந்தை இல்லாததால் அவர் காலத்திற்குப் பின் அவருடைய சொத்துகளில் தனக்கும் பங்கு உண்டு என்பதால் அவனுடைய இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைப்பதற்குப் பணம் சேமித்து வைக்க வேண்டும் என்றுகூட இவன் ஒருபோதும் நினைத்ததில்லை. சரி அப்படி நினைக்காமல் இருந்துவிட்டுப் போகட்டும். மாமனாரையாவது இவன் மதித்தானா என்றால் அதுவும் இல்லை. அவர் எப்போது உயிரை விடுவார், அவர் சொத்துகள் எல்லாம் தனக்கு வந்து சேரும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தான். மாமனார் இறந்த அன்று இவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது!? மனைவியின் தந்தை என்ற எண்ணம் கொஞ்சம் கூட இவன் மனத்தில் இல்லை. மாமனாரின் சொத்துகளைத் தனதாக்கிக்கொள்ள இருந்த தடை இப்போது விலகிவிட்டது என்பதுதான் இவனுடைய எண்ணமாக இருந்ததேயொழிய மனைவியின் சோகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லை.

இப்படிப்பட்ட கணவனோடு வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தப் பெண், அவனிடம் எந்தக் குறையும் இருப்பதாக நினைக்கவில்லை. தந்தையின் சொத்துகள் இவனிடம் வந்த பிறகும் இவன் அதை நன்றாகப் பராமரிக்கவில்லை என்பதோ, அதன் பிறகும் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்பதோ இவளை உறுத்தவில்லை. இப்போதும் தன் கணவன் தன் கடமைகளைச் சரிவரச் செய்துகொண்டிருப்பதாகத்தான் இவள் நம்புகிறாள்.

ட்சக்கணக்கான சொத்துகளுள்ள ஒரு தந்தை தன் ஒரே மகளுக்குத் திருமணம் செய்துவைக்கிறார். மருமகனும் சுமாரான வசதி உள்ளவன் என்றாலும் மனையின் சொத்துகள் என்றாவது தனக்கு வந்துசேரும் என்பதுதான் இவனுடைய எண்ணமாக இருக்கிறது. பெண்களுக்கென்று சில விதிகள் வகுத்து நடக்கும் கணவன்மார்களில் இவன் ஒருவன். பயணம் செய்யும்போது வழியில் அவன் மட்டும்தான் ஓட்டலில் சாப்பிடுவான்.  இவள் பேருந்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். ஊரில் இருக்கும்போதும் இவளை எங்கேயும் வெளியில் அழைத்துச் செல்வதில்லை. வெளியில் போவது, ஓட்டல்களில் சாப்பிடுவது எல்லாம் இவனுடைய உரிமைகள் மட்டுமே. புதையல் காத்த பூதம் போல் தன் சொத்துகளைக் காத்துவந்த இவனுடைய மாமனார் ஒரு நாள் இறந்துவிட்டார். அதன் பிறகு மாமனாருடைய சொத்துகள் எல்லாம் கணவன் வசமாயின. அதை எப்படி உபயோகிப்பது என்பது பற்றியெல்லாம் அவன் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. பழைய மாதிரிதான் அவளை நடத்தி வந்தான்.  மாமனாரின் சொத்துகளையாவது பாதுகாத்தானா என்றால் அதுவும் இல்லை. ஒரு சில சொத்துகளைத் தவிர மற்ற எல்லாச் சொத்துகளையும் முழுதாக அழித்துவிட்டான். இப்போதாவது கணவனை விட்டு வந்து, இருக்கும் சொத்துகளை உன் எதிர்காலத்திற்காகப் பாதுகாத்துக்கொள் என்றால் இவள் அவனை விட்டு வருவதாக இல்லை. கணவன் உயிரோடு இருக்கும்போது அவனை விட்டு வருவது பாவச் செயல் என்று பைபிளில் கூறியிருக்கிறது என்று வாதாடுகிறாள். இன்னும் கணவன் மேல் எந்தக் கோபமும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் விதிப்படி நடக்கும் என்று இந்து மதத்தில்தான் கூறியிருக்கிறது என்றால் கிறிஸ்துவ மதத்திலும் இப்படித்தான் கூறியிருக்கிறதா?

கணவனே எல்லாம், அவன் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று மனைவிமார்கள் நினைக்கிறார்கள். இதைத்தான் மிகைப்படுத்திக் கதைகளிலும் சினிமாக்களிலும் காட்டுகிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பார்த்து நம் பெண்களும் தாங்கள் நடந்துகொள்வது சரி என்று நினைக்கிறார்கள்.  உங்களுக்கென்று ஒரு உள்ளம் இருக்கிறது, அதில் உணர்வுகள் இருக்கின்றன, அவற்றை மதிக்கக் கற்றுக்கொள்ளும்படி கணவனுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று இந்தப் பெண்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? யார் எடுத்துச் சொல்வது? எல்லாம் கணவன் மயம் என்று வாழ்க்கையை நடத்திச் செல்லும் இந்தப் பெண்களின் மடமை எப்போது மடியும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.