சுரேஜமீ

உணர்ச்சி வயப்படுதல்

peak1111111111-1

பொதுவாகவே இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. எங்கு மனிதம் இருக்கிறதோ, பாசம் இருக்கிறதோ, இரக்கம் இருக்கிறதோ, உறவுகள் வலுவாக வேரூன்றி இருக்கிறதோ, அங்கு நிச்சயமாக உணர்ச்சிப் பெருக்கு இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

அத்தகைய உணர்வுகள், சில வேளைகளில் நம் அறிவைக் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றிலும் மறைக்கவோ செய்து, நம்மைத் தவறான முடிவை நோக்கி இட்டுச் செல்லும் வல்லமை படைத்தது. ஆகவே அது பற்றிச் சில செய்திகளைத் தங்களின் பார்வைக்குக் கொணர்ந்து, சிந்தையைத் தூண்டுவதே இன்றைய பதிவின் மையக் கருத்தாகும்!

நம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கு நாம் காட்டும் அலட்சியப் போக்கே,

பெரும்பாலும், நம்மால், உணர்ச்சி மேலோங்கும் நிகழ்வுகளைப் பற்றி அலசி ஆராய முடியாமல்,

சரியான நிலையில், நம் எண்ணத்தை வார்த்தையாக்கவோ, செயலாக்கவோ அல்லது பிரதிபலிக்கவோ இயலாமல் செய்து விடுகிறது.

அதன் விளைவாக ஏற்படும் இன்னல்கள், உடல் ரீதியாகவோ அல்லது உள்ள ரீதியாகவோ, நமக்கு வருத்தத்தை அளிக்கிறது.

மேற்கத்திய நாட்டில் உள்ளவர்களுக்கும், குறிப்பாக வெள்ளையர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடே, உணர்ச்சிகளைக் கையாள்வது தான் என்று சொன்னால், மிகையாகாது.

பெரும்பாலும் உணர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அபரிமிதமான அன்பு அல்லது ஏதோ ஒரு விதமான அச்சம் என்பதை,

அமைதியாகச் உணர்ச்சிமயமான சூழ்நிலையையும் அதனை எப்படிக் கையாண்டோம் என்பதையும் சிந்தித்தால் தெளிவாகும்.

உணர்ச்சியை வெளிக்கொணர்வதில் அவரவர் வாழ்வியல் மற்றும் அனுபவத்தின் சாரத்தில் ஆராய்ந்தால், அது மகிழ்ச்சியாகவோ, அழுகையாகவோ, கோபமாகவோ, பிணக்காகவோ, மன அழுத்தமாகாவோ பயணமாகவோ, சந்திப்பாகவோ, பேச்சாகவோ, எழுத்தாகவோ இருக்கலாம்!

இதுவரை ஆராயவில்லை எனில், இப்பொழுது முதல் உங்கள் ஆராய்ச்சியைத் தொடங்குங்கள். நிச்சயம் ஒரு தெளிவைப் பெறலாம்.

உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் தலையாயது, கோபமாக இருப்பதால்தான்,

“நகையும் உவகையும் கொல்லும் சினம்……” என்கிறார் வள்ளுவர்!

அதுமட்டுமல்ல!

ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள அவசியமானது தன்னிடமிருந்து வரும் உணர்ச்சிப் பெருக்காகிய கோபத்தைக் காக்க வேண்டும் என்றும் சொல்கிறார் என்றால்,

திருக்குறளை விட, நமக்குக் கற்றுத் தருவதற்கு சிறந்த நீதிநூல் வேறென்ன இருக்க முடியும்?

இன்னும் நமக்குப் புரியும்படியாக எத்தனையோ மகான்கள், புத்தர் முதல் வள்ளலார் வரை, நாம் எப்படி உணர்ச்சிகளைக் கையாளவேண்டும் என்று சொன்னாலும், நம்மால் வாழ்வியலில் அதை நடைமுறைப் படுத்த இயலாமல், பல துன்பத்திற்கு ஆளாகிறோம்!

இத்தகைய உணர்ச்சிப் பெருக்கு நம்மை வழி நடத்தாமல், கற்ற கல்வியும்; வாழ்க்கை அனுபவமும் நம்மை வழி நடத்தும் வகையில், அறிவு சார்ந்து உணர்ச்சியைக் கையாள நாம் செய்ய வேண்டுவது என்ன எனப் பார்ப்போம்!

1. முதலில் நாம் உணர்ச்சி மேலோங்குவதை அறிய முற்படுதல் அவசியம்.

எப்படி அறிவது?

உதாரணமாக, நீங்கள் அலுவலகத்திற்குக் காலையில் 8 மணிக்குச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். தங்கள் குழந்தைகள் தினமும் பள்ளி வாகனத்தில் செல்ல் வேண்டியவர்கள், இன்று வாகன ஓட்டுனர் உடல்நலக் குறைவு காரணமாக, வர இயலவில்லை! தாங்கள், குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டுச் செல்ல தங்கள் மனைவி வேண்டுகிறார். உங்களுக்கோ, அலுவலகத்தில் இருக்கும் அவசர பொறுப்போடு, குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பும் இணைகிறது. குழந்தைகளைத் தயார் செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும்உங்கள் உணர்ச்சி மேலோங்கும் வாய்ப்பு இருக்கிறது!

இங்கு உணர்ச்சியின் வெளிப்பாடு சினமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதை முன்னமே அறிந்து, அலுவலகம் செல்லச் சற்று தாமதமாகலாம் என மனதைத் தயார்படுத்தி விட்டால்,

உணர்ச்சி இலகுவாகக் கையாளப்படுகிறது என்று அர்த்தம் கொள்ளலாம்!

இது ஒரு மாதிரியே. இதைப்போல, உணர்ச்சி எழும் சூழ்நிலைகளை அறிந்து கொண்டோமேயானால், பெரும்பாலான உணர்ச்சிகள் மட்டுப்பட்டு, உடல் மற்றும் மனதளவில் நாம் திறம்படச் செயலாற்ற முடியும்!

2. ஜப்பான் நாட்டில் ஒரு வழக்கமுண்டு. தொழிலாளர்களுக்கு மேலதிகாரி மேல் கோபம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. அத்தகைய சூழலில், ஒரு அரைமணி நேரம், அவர்கள் தனி அறைக்குச் சென்று, அங்கு ஒரு பலூன் போன்ற காற்றடைக்கப்பட்ட ஒரு சாதனத்தை தொங்கவிட்டு, அதனை ஓங்கி அடித்துக் கொண்டே இருப்பார்களாம்! இவ்வாறாக, தொழிளாளர்களின் உணர்ச்சிகள் வடிகாலாக்கப் பட்டு, உறபத்தித் திறனைப் பெருக்குவதுண்டு.

அது போல, உணர்ச்சிகளை மட்டுப்படுத்த முடியாத தருணங்களில், அதை வெளிப்படுத்துவது சிறந்த முறையாகும்.

ஆனால், இங்கு கவனம் தேவை! வெளிப்படுத்தும் முறை அறம் சார்ந்ததாக, அடுத்த மனிதரைத் துன்புறுத்தாததாக இருத்தல் அவசியம்!

3. மதம் மற்றும் இறை நம்பிக்கை சில வேளைகளில் உணர்வுகளை மட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிந்தனைத் தெளிவையும்; திடமான நம்பிகையையும் கொடுக்கும்!

4. மிக முக்கியமாக, உணர்ச்சிகளைப் பெருக்கும் புறச்சூழலை நாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால், அங்கே உணர்ச்சிகளுக்கு அடிமையாக வேண்டிய அவசியம் துளியும் இருக்காது.

5. இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால், பற்றற்றிருப்பது, நமக்கு நல்ல பக்குவத்தைத் தரும். அதற்காகத் துறவறம் மேற்கொள்ள வேண்டியது இல்லை. சாதாரண நிலையிலேயே நம்மால், உணர்ச்சிகளைக் கையாள முடிந்தால், அந்த நிலைதான் துறவறத்திற்குச் சமம்!

6. யோகா மற்றும் தியானப் பயிற்சி உணர்ச்சிகளை மட்டுப்படுத்தும்!

நண்பர்களே நம்மீது சிறு அக்கறை கொண்டு, உணர்ச்சி மேலோங்குவதை நன்கு புரிந்து, அதனைக் கையாளக் கற்றுக் கொண்டால்,

நம் உடலும், மனமும் இன்னும் ஆரோக்கியம் பெற்று, வீரியத்தோடு நம்மை இலக்கு நோக்கி இட்டுச் செல்லும்!

நம்புங்கள்! நிச்சயம் நம் ஒவ்வொரு அடியும் இம்மண்ணில் ஒரு அழுத்தமான வடிவை விட்டுச் செல்லும்! அது சொல்லும் வெற்றிக்கான அடிப்படை தத்துவத்தை!!

தொடர்ந்து சிந்திப்போம்………

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *