மீ.விசுவநாதன்

 

vallamai111-300x15011111111111
கடவுள் துணையில் கடுமையாய் என்றும்
திடமாய் உழைத்தால் திறக்கும் மடமடென
இன்பக் கதவுகள் ; எந்தக் கவலையும்
என்றுமே இல்லை இனி. (201) 19.07.2015

உழைத்து நிதமும் உயர நினைத்தால்
தழைத்து வருமே தனமும் – குழைத்தே
அழகாகப் பூசிய சந்தன வாசம்
பழகினோர் பாக்கிய வான். (202) 20.07.2015

அயல்நாட்டுப் “பக்ஷிகள்” ஆயிர மாக
இயல்பாக வந்திங்கே எந்த பயமின்றி
வாழ்ந்துதன் குஞ்சுடன் வண்ணமாய்த் தன்தேசம்
வாழத் திரும்பும் மகிழ்ந்து ! (203) 21.07.2015

காயப் படுத்தா கனிவாம் எழுத்தாலும்,
நோயைக் குணமாக்கும் நூலோரின் தாய்மைக்
கருணை மொழியாலும் கற்றோர் பழகும்
அருமைதான் என்று(ம்) அழகு. (204) 22.07.2015

கூன்விழுந்து , கன்னம் குழிவிழுந்து போனாலும்
“நான்”விழுந்து போகாது நாறுகிற “தானகந்தை”
பூதத்தைப் பொன்னாலும் பூவாலும் போற்றுகிறோம் !
சாதத்தால் செய்த சதி ! (205) 23.07.2015

வெளியில் இரைச்சல் ! விடுதலை உள்ள
ஒளியில் மகிழ்ச்சி ! உலகம் களிக்க
முகமோ சுளிக்கும் ; முதலும் முடிவும்
அகத்தின் அறத்தின் அளவு. (206) 24.07.2015

விஸ்வரூபம் பார்த்த விஜயன் மனமுடன்
பஸ்மமாச்சு ; கண்ணனின் பாதத்தை விஸ்வாச
எண்ணத்தில் தொட்டே இதயத்தில் வைத்தவுடன்
கண்ணனே எல்லாம் கதி.. (207) 25.07.2015

நீலமாய்த் தோன்றுவான் ; நீங்காது நெஞ்சிலே
ஆலமாய் வாழுவான் ; ஆகாயக் கோலமாய்,
பாலனாய், வெள்ளைப் பசுவோடு கோகுலச்
சீலனாய்க் கண்ணன் சிரிப்பு. (208) 26.07.2015

ஊர்மெச்ச வேண்டாம் உறவெனைக் கொஞ்சியே
சீராட்ட வேண்டாம் ; சிறப்பெனும் பாராட்டும்
வேண்டாம்; இறுதிவரை வேண்டுவது பெற்றோர்கள்
பூண்டதோர் நற்குணப் பூ. (209) 27.07.2015

குளக்கரையில் நாரை குறியாக மீனை
அளக்கு மசையாம(ல்) அங்கே களக்கெனக்
குத்திப் பிடிக்கும் ; உளக்கரையில் உள்நோக்க
முத்தி விழிக்கும் முயல். (210) 28.07.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *