அவன்,அது,ஆத்மா (27)
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 27
“நூலகம் காட்டிய சித்தப்பா”
அவனது இளமைக்காலம் சுகமாக இருந்ததற்கு அவனுக்கு அமைந்த சுற்றுச் சூழலும் ஒரு முக்கிய காரணம். பள்ளி விடுமுறைக் காலங்களில் அவன் அனேகமாக ஏதாவது ஒரு உறவினரின் இல்லத்தில்தான் இருப்பான். அவனுக்குச் சித்தி வீடும் அதில் ஒன்று. அவனுக்கு அம்மாவின் சகோதரி சீதாலட்சுமி. அவரது கணவர் நா.சுப்பிரமணியன். அவனுக்கும், அவனுக்கு அக்கா பாலாவுக்கும் அவர்களை மிகவும் பிடிக்கும். சித்தப்பா நா.சுப்பிரமணியனுக்கு தமிழ்ப் பற்று அதிகம். அவர் தமிழ்நாடு கருவூலத்தில் (Treasury office) “சப்-ட்ரஷரி” (Sub-treasury) அதிகாரியாக காஞ்சீபுரம், திருப்பத்தூர், சென்னை போன்ற பல இடங்களில் வேலை பார்த்து கருவூல அதிகாரியாக ஒய்வு பெற்றவர். அவருக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். அவரது நாற்பதாவது வயதில் அஞ்சல்வழிக் கல்வி மூலமாக B.A. படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறியவர். அவன் பிற்காலத்தில் “காட்பரீஸ்” நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அஞ்சல்வழிக்கல்வி முறையில் சேர்ந்து படிப்பதற்கு ஊக்கமாக அவரும், அவனுக்கு மாமாவும் இருந்தனர்.
ஒரு நேர்மையான அதிகாரியாக வேலை பார்த்து ஒய்வு பெற்ற பின்பு ஜோதிடக் கலையின் மீதுள்ள ஆர்வத்தினால் “ஜோதிடம்” கற்றுக் கொண்டு “கல்லிடை மணியன்” என்ற பெயரில் இலவசமாக ஜாதகப் பொருத்தங்களும், பரிகாரங்களும் இன்றும் கூறிவருகிறார். அவருக்கு எழுத்தில் ஆர்வம் அதிகம். இன்றைக்கு எண்பது வயதை நெருங்கும் அவர் பல ஊர்களுக்குப் பயணம் செய்து அந்த ஊரில் இருக்கும் கோவில்களைப் பற்றிய செய்திகளைக் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவையெல்லாம் தினமணியின் வெள்ளிமணி, தினமலர் ஆன்மீகமலர், ஓம் சரவண பவ, சக்தி விகடன் போன்ற ஆன்மிகப் பத்திரிகைகளில் வெளிவருகின்றன.
அவன் ஒன்பதாவது வகுப்பு விடுமுறைக்கு அவனுக்குச் சித்தப்பா நா.சுப்ரமணியன் அவர்களது வீட்டிற்குச் சென்றான். அப்பொழுது அவர் திருப்பத்தூரில் “சப்-ட்ரஷரி” (Sub-treasury) அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் அலுவலகம் செல்லும் முன்பு,” விஸ்வம்..இந்த ஊர்ல நல்ல நூலகம் இருக்கு..மெயின் ரோட்டுலதான் இருக்கு…காலைல சாப்பிட்ட ஒடனே அங்கே போய் புத்தகங்களைப் படி…நேரத்தை வீணாக்காதே” என்று சொல்லுவார். அவனும் அப்படியே ஒவ்வொரு நாளும் அந்த நூலகத்திற்குச் சென்று படித்து வருவான். முதல்நாள் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” புத்தகத்தை எடுத்துப் படித்தான். கீழே வைக்கவில்லை. அத்தனை சுவையாக இருந்தது. அதில் “கர்ணனின்” பகுதி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ரொம்பவும் ரசித்துப் படித்தான். அதே போன்று “பீஷ்மரும்”, “விதுரரும்”, “அபிமன்யுவும்,” “துரோணரும்” அவனுக்குப் பிடித்திருந்தது. கண்ணனின் லீலைகளை, சாதுர்யத்தை அவன் ரசித்தான். அன்று மதியம் மூன்று மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்பினான். சித்தி பஜ்ஜியும், அல்வாவும் செய்திருந்தாள். அவன் விரும்பிச் சாப்பிட்டான். ஒவ்வொரு நாளும் மதியம் சித்தி ஏதேனும் பலகாரம் செய்து தருவாள். நல்ல ருசியாகச் சமையல் செய்வாள். சித்தப்பவுக்கு அப்பொழுது மூன்று வயதில் “மாலினி” என்ற பெண்குழந்தையும், ஒரு வயதில் “வேணு” என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். “வேணுவின்” முதல் பிறந்த தினம் திருப்பத்தூரில் உள்ள அந்த வீட்டில்தான் நடந்தது. அந்த சகோதரி, சகோதரனை அவனும், அவனுக்கு அக்காவும் கொஞ்சி விளையாடுவார்கள். அந்த வீட்டில் நடுக்கூடம் திறந்த வெளியாக இருக்கும். சிமின்ட் பூசிய தரை. வழுவழு வென்றிருக்கும். இரவில் அந்த வெட்ட வெளியில் படுக்கை விரித்து, நிலவொளியில் படுத்துறங்குவது சுகமாக இருக்கும். இரவில் சித்தப்பாவுடன் சேர்ந்து சாப்பிடுவான். சாப்பிட்டு விட்டு அந்தக் கூடத்தில் அமர்ந்து கொண்டு ,” விஸ்வம் இன்னிக்கு “லைபிரரில” (நூலகத்தில்) என்ன புத்தகம் படிச்சே..என்ன நியூஸ் படிச்சே..” என்று கேட்பார். அவன் “வியாசர் விருந்து” என்று சொல்லி, அன்று படித்த விபரங்களைச் சொல்லுவான். அவர் அதை ரசிப்பார். “மேலும் இன்னும் நல்ல புத்தகங்களைப் படி” என்று உற்சாகப் படுத்துவார். “இந்த ஊர்ல ஒரு பெரிய சிவன் கோவில் இருக்கு..அதுக்கு ஒன்னக் கூட்டிண்டு போறேன்” என்று சொல்லி அழைத்துச் சென்றார். மிகப் பெரிய சிவன் கோவில். குன்றக்குடி ஆதீனத்தின் பராமரிப்பில் அந்தக் கோவில் இருக்கிறது. அங்கு தேவாரம் ஓதுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். அந்த ஈடுபாட்டில் அவன் அடுத்தநாள் நூலகத்திற்குச் சென்ற பொழுது “பெரியபுராணம்” உரைநடையை எடுத்துப் படித்தான். அந்தத் திருவருட்செல்வர்களின் கதையில் “திருநீலகண்டரும், கண்ணப்பநாயனாரும், அப்பூதியடிகளும்” அவனை ஆட்கொண்டனர். நாமும் மற்றவர்களுக்கு உபகாரமாக வாழவேண்டும் என்ற சிந்தனையை பெரியபுராணம் அவனுக்குக் கற்றுத் தந்தது. அவன் நூலகத்தில் இருந்து நா.பா.வின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கிவந்து வீட்டில் மதிய வேளையில் படிப்பான். நா.பா.வின் கதைகளில் ஒரு சத்திய நோக்கம் இருக்கும். அது அவனை ஈர்த்தது. “என்னடா..எப்போதும் கதைபுத்தகமும் கையுமா இருக்கே” என்று அவனை வேடிக்கை செய்வாள் சித்தி.
திருப்பத்தூரில் உள்ள திரையரங்கில்தான் அவன் சிவாஜிகணேசன் நடித்த “வியட்னாம்வீடு”, “எங்க ஊர் ராஜா” போன்ற திரைப்படங்களை முதலில் பார்த்தான். அவனுக்குச் சித்தப்பாதான் அவனைக் கூடிக்கொண்டு போனார். வியட்னாம்வீடு படம் பார்த்துவிட்டு வரும்பொழுது அவன்மனம் கனத்திருந்தது. நேர்மையான ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை அந்தப்படம் எடுத்துக் காட்டியது. நாடகத்தன்மை அதிகம் இருந்தாலும் கதையின் மையப் புள்ளி அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் சிவாஜி ரசிகனாக இருப்பதால் அதில் ஒன்றியே விட்டான்.
குன்றக்குடி முருகன்
ஒருநாள் அவனுக்குச் சித்தப்பா அவனிடம் சைக்கிளைக் கொடுத்து பக்கத்தில் இருக்கும் குன்றக்குடிக்குச் சென்று முருகனை தரிசித்து வரச் சொன்னார். அவனுக்குச் சித்தி அவனைத் தனியாக அனுப்பத் தயங்கினாள். சித்தப்பாதான் அவனுக்கு வழியும் சொல்லி, சித்திக்கு தைரியமும் கூறினார். அவன் காலையில் சைக்கிளில் எட்டு மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு, குன்றக்குடி மலையடிவாரத்திற்கு அரைமணி நேரத்தில் சென்று விட்டான். அரை டிராயரும், சட்டையும் போட்டுக் கொண்டுதான் செல்வான். அவன் சைக்கிளை வேகமாகவும், நன்றாகவும் ஒட்டுவான்.
குன்றக்குடி மலையேறி முருகனை நன்றாக தரிசனம் செய்தான். மலை மீதிருந்து பக்கத்துக் கிராமங்களைப் பார்த்துப் பரவசப் பட்டான். நெருக்கடி இல்லாத ஊர். மலையில் கோவில் வளாகத்தில் கொண்டைச் சேவலும், அழகிய தோகை மயிலும் உலவிக் கொண்டிருந்தது. அழகான கோவில். அதன் பிறகு அவன் இரண்டு முறைகள் அந்தக் கோவிலுக்கு வாடகை சைக்கிளில் சென்று வந்திருக்கிறான். சில நாட்கள் சித்தப்பாவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் “ராஜு” என்பவரின் சைக்கிளை வாங்கிக் கொண்டு திருப்பத்தூர் தெருக்களை அவன் சுற்றி வந்ததுண்டு. “சைக்கிள்” பித்து என்று அவனை அவனுக்குச் சித்தி கேலிசெய்வாள்.
காஞ்சிபுரத்தில் சித்தப்பா வேலை செய்து கொண்டிருந்த சமயம், சின்னக் காஞ்சிபுரத்தில் அவர் குடியிருந்தார். விடுமுறைக்கு அவனும், அவனுக்கு அக்காவும் சின்னக் காஞ்சிபுரம் சென்றனர். சித்தப்பா அவர்களை எல்லாக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்றார். முக்கியமாக ஸ்ரீகாமாக்ஷிஅம்மன், ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவில்களுக்கும் கூட்டிச்சென்றார்.
ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்லில் உற்சவம் நடந்து கொண்டிருந்த நேரம். ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி வேதியர்கள் வரிசையாக நின்று கொண்டு, கோவிலில் வேத பாராயணம், திவ்யப்பிரபந்தம் (நாலாயிரம்) ஓதியது இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. அந்த வேதியர்களின் கூட்டத்தில் நடு நாயகமாக நின்று கொண்டிருந்த ஒரு பெரியவரைக் காட்டி, “இவர்தான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ அனங்கராச்சார்யார்” என்று அவனுக்குச் சித்தப்பா கூறினார். அந்த பழுத்த பழமான வேதியரைத் வெகு அருகில் தரிசித்தது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. பிற்காலத்தில் அவரது “வைணவ வேதாந்தக்” கட்டுரைகள் பலவற்றை அவன் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறான். அவர் ஒரு மகாத்மா.
சித்தப்பாவிற்கு மாலினி என்ற பெண்ணும், வேணு, ரமேஷ் என்ற இரண்டு மகன்களும், பேரன் பேத்திகளும் இருக்கின்றனர். அவனுக்குச் சித்தி சீதாலட்சுமி பதினேழு வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டாள். இன்றும் அந்த உறவுகள் அவனோடு அன்பு பாராட்டிக் கொண்டிருப்பது அவனது பேறு.
அவனுக்கு உறவினர்கள் வீட்டிற்குச் சென்ற பொழுதெல்லாம் அவர்களது அன்பும், அவர்களது அனுபவச் செய்திகளும் நிறையவே அவனுக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் அதுதானே வேண்டும்.
27.08.2015
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..
படம் உதவி “அன்னபூர்ணா”
நமஸ்காரம் . நான் பீ யூ சீ சேருவதற்கு 1974ல் என் தந்தையார் வீயார் அவர்களும் எதிர்வீட்டு மொட்டை ராமையா அவர்களும் உங்கள் தந்தையாரை பார்க்க வந்திருந்தனர் .ஒருவருடம் தான் ஸ்ரீ பரம கல்யாணியில் படித்தாலும் , நீங்கள் சொல்வது போல் நானும் அங்குள்ள நூலகத்திலிருந்து பொன்னியின் செல்வன் வாங்கி, மற்ற நண்பர்கள் அரட்டை அடிக்கும் சமயம், நான் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன் . மேல் நிலை படிப்பு கல்கத்தாவில் .
நகரேஷு காஞ்சி என்பதற்கு ஏற்ப ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவிலை மையமாக வைத்து நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோவிலில் நடக்கும் எந்த உற்சவமும் இந்த கோவிலை சுற்றியே செல்லும். கோவில் மதில் சுவரில் நம் ஊர் பக்கம் உள்ளது போல் பெரிய உருவத்தில் தேவிகள் சமேத ஸ்ரீ சாஸ்தா காவல் தெய்வமாக விளங்குகிறார். ஸ்ரீ துர்வாச முனிவர் ஏற்ப்படுத்திய பததி படி பூஜைகள் நடக்கின்றன .
விஷ்ணு காஞ்சியில் நிறைய ஆசார பக்தர்கள் பாரம்பர்யம் தவறாமல் வாழ்கின்றனர் .அவர்களிடம் வைதீக அனுஷ்டானமும் , திவ்ய பிரபந்த படனமும் ஒருசேர அமைந்துள்ளன .
நிறைய ஸ்தலங்கள் சென்று தரிசிக்கும் பாக்கியம் பெற்றுள்ளீர்கள் .