– சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

அன்னையவள் இல்லத்தின் குலவிளக்காய்த்தான் திகழ
அப்பனாக உடன் இணைந்து அகல்விளக்காய் ஒளிர்பவனே
அன்னை தந்தையாய் உனைத்தான் எனக்கு அறிமுகப்படுத்த
மழலை எனக்கு விந்தையாய்ப் பலவற்றின் அறிமுகம் தந்தவனே
உன் மனைவி அவளுக்கு நீதான் ஆனாய் தலைச்சனே
உன் பெற்றோர் மனதினிலோ நீ குலக்கொழுந்தாய் நிலைத்ததேன்?

அன்னை பத்துமாதம் சுமந்ததுகூடப் பெரிதாய்த் தெரியவில்லை எனக்கு
அப்பனாய் நீ நெஞ்சில் சுமந்தவலி தெரியவில்லையா உனக்கு?
உன் மக்கள் அவர் தமக்கு என்றும் நீ கதாநாயகனே
அவர் செயலில் தந்தை உன் செய்கை பிரதிபலித்தல் விந்தையல்லவே!
உன் மகளின் மண வாழ்வில் இளவரசனே தான் வந்தாலும்
மனதார அவள் நாளும் பூஜிக்கும் பேரரசனும் நீதானே!

உன் மகன் தன் வாழ்வில் உயர்நிலையை அடைந்தாலும்
மனக்கண் உன்துயர் மறைத்த மகத்தான ஏணி நீ தானே
எங்களுக்காய் நீ செய்த தியாகமெல்லாம் என்ன சொல்ல
எந்தை உன் புகழ்பாட நெஞ்சமெல்லாம் இனிக்குதய்யா மெல்ல
அழைத்தவுடன் வர இயலாது என்று எண்ணித் தானோ
ஆண்டவனே உனைத்தான் அனுப்பி வைத்தான் எங்களுக்காய்
அன்னைதான் நாங்கள் குடியிருந்த கோவில் என்றாலும்
தந்தை நீதான் இல்லத்தின் தலைசிறந்த காவல் தெய்வமே!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல்
நீ தானே ஐயா நம் குடும்ப மரத்தின் நிலையான ஆணிவேர்!
தந்தையே நீ இன்றுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
தப்பாத உண்மை இதுதானே பல நேரம் நீ தந்தையல்ல
தாயுமானவனே!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தாயுமானவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *