முண்டாசுக் கவியே மீண்டும் வா!

– சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

கம்பீரத் தோற்றத்துடன் விளங்கும் அழகுக் கவியே
காணவில்லை எனத்தான் தேடுகிறோம் உனையே
சுதந்திரக் காற்றை நாங்கள் நித்தம் சுவாசிக்கத் தானே
பல கவிதை தான் வடித்துப் பக்குவப்படுத்திய சிற்பியே
எட்டையபுரம் பாரதத் தாய்க்கு அளித்த அறிவு மழலையே
எட்டாத தொலைவே ஓடவைத்தாய் நீயும் அந்நியனையே

கண்ணனைக் கண்ணம்மா ஆக்கிக் கவிபல பாடினாயே
உன் செல்லம்மாவுமேதான் உனக்காக ஆனாள் தாயே
அச்சமில்லை அச்சமில்லை என அன்றே நீயும் உரைத்தாய்
அஞ்சி வாழும் அவல நிலை அறிந்தால் நீயோ துடிப்பாய்
நீ கண்ட புதுமைப் பெண்களாய் இருக்கத் தானே ஆவல்
நீயே கண்டால் வெடிப்பாயே பெண்மைக்கு ஏது காவல்?
உனக்காக நாங்கள் இன்று செலுத்துவோம் வீரவணக்கம்
உன் நாமம் சொன்னால் தானே தமிழும் அமிழ்தாய் இனிக்கும்!

தரணி தன்னில் பல துறையில் சிறந்திருக்ககிறோம் நாமே
தப்பாது அன்றே நீ வடித்த வரிகளின் இலக்கணம் தானே
நன்றிகள் பலகோடி உரித்தாக்குவோம் உனக்கே ஐயா
நலிந்த நம் தாயவள் முகம் மலரச்செய்த தலைமகனே
என்ன தவம் செய்தோம் உனைப்பெற முண்டாசுக் கவியே
என்று மீண்டும் நீ வருவாய் என ஏங்கித் தவிக்குது புவியே
அண்டம் உய்ய மீண்டு(ம்) வா ஐயனே!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க