உன்னையறிந்தால் …… (25)
நிமிர்ந்து நில்லுங்கள்
நிர்மலா ராகவன்
கேள்வி: தாய்நாட்டைவிட்டு அயல்நாடுகளில் வாழ்பவர்களில் பலர் ஏன் சுலபமாகக் கோபம் அடைகிறார்கள்?
விளக்கம்: `இந்தியாவை விட்டு வெளியேறினால், நாம் இரண்டாந்தாரப் பிரஜைகள்தாம் (SECOND CLASS CITIZENS). இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால்தான் நிம்மதியாக இருக்க முடியும்,’ என்று ஒரு விமானி என்னிடம் பல ஆண்டுகளுக்குமுன் கூறினார்.
அயல்நாடுகளில் வாழ நேரிடும்போது நமது கலாசாரத்துக்கு மாறுபட்ட பிறரைப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் அச்சமும், அவர்களுடன் நெருங்கிப் பழக தயக்கமும் வருகிறது, எங்கே நம்மிடையே அவர்கள் காணும் வித்தியாசங்களில் குறை கண்டுபிடித்து விடுவார்களோ என்று.
சாதி, இனம் முதலிய பாகுபாடுகள் ஒருவரது தகுதியைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யாது. அப்படி எண்ணுபவர்கள் சிறுபிள்ளைத்தனமானவர்கள்.
ஒவ்வொரு மனிதனும், `நான் உயர்ந்தவன்!’ என்று ரகசியமாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறான். இதனால் பாதிக்கப்பட்டவர்களோ தாழ்வு மனப்பான்மைக்கும், அது விளைவிக்கும் பொறாமைக்கும் ஆளாகிறார்கள். நம்மை ஒத்தவர்கள் மேலே போய்விட்டால், நாம் கீழேயே தங்கிவிடுவோமோ என்ற பயத்தில், ஒரே இனத்தைச் சார்ந்தவருக்கே குழி பறிக்கும் அவலமும் இதனால்தான் விளைகிறது.
பிற நாட்டில் வாழ்பவர்கள் சிறுபான்மையினர். `நமக்கு பிரத்தியேகமான சலுகைகள் இல்லையே!’ என்று மறுகி, அதைப்பற்றிப் பேசிப் பேசியே காலத்தைக் கடத்தினால், பலம் தான் குறைந்துபோகும்.
நிறைய சலுகைகள் கொண்ட அந்நாட்டு மக்களைப்பற்றி அவதூறாகப் பேசினால், அதைக் கேட்டு ஆமோதிக்க நாலு நண்பர்கள் கிடைக்கலாம். இதனால் என்ன பயன்? நேரமும், சக்தியும்தான் விரயம். அதிருப்தி அடைய நிறைய காரணங்கள் இருப்பினும், நம்மால் மாற்ற முடியாததை ஏற்பதுதான் விவேகம்.
ஒரு எச்சரிக்கை: பொறுக்க முடியாத எல்லாவற்றையும் `விதி,’ `பொறுமை’ என்று ஏற்கக்கூடாது. இது கையாலாகாதவர்கள், அல்லது பயங்கொள்ளிகளின் வீண் பேச்சு. பொறுமையும் ஒரு நாள் மீறும். அப்போது, வன்முறை பிறக்கும்.
நம்மையே அலசிப் பார்த்து, நமது நல்ல குணங்களை வரிசையாக எழுதி, அவைகளில் நிலைத்திருத்தல் வேண்டும். `வேண்டாதவை’ என்று நாம் கருதும் குணங்களையும் எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாகக் கழித்தால், மனோதிடம் பிறக்கும். நாளடைவில், இருக்குமிடத்தில் முன்னேற்றம் மட்டுமின்றி, நிம்மதியும், மகிழ்வும் உறுதி.
பிற நாட்டில் கல்வி பயிலும், அல்லது வேலை பார்க்கும் இடங்களில் நம் மனதை நோகடிக்கவேயென பலர் காத்திருப்பார்கள். நம் தன்மானத்தைப் போக்கும் வழியில் எவராவது ஏதேனும் சொன்னால், அசட்டுச் சிரிப்புடன் அதை ஏற்றுக் கொண்டுவிட்டு, அவர் தலைமறைந்ததும் அடுத்தவரிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகாதீர்கள். எதிர்த்துச் சண்டை போடுங்கள். உடனுக்குடன்! அதன்பின், அவரைக் கண்டால் ஒதுங்கிவிடுங்கள்.
ஒரு கதை
`உன் பெண்களுடன் எந்த மொழியில் பேசுகிறாய்?’ கேட்டது என்னுடன் வேலைபார்த்த சீன ஆசிரியை.
நான், `தமிழ்! அதுதானே என் தாய்மொழி!’ என்றதும், `You are so chauvinistic! (’வெறித்தனமானவள்’) என்று பழித்தாள்.
நான் எதுவும் பதிலளிக்கவில்லை. தான் வெற்றி பெற்றதாகவே அவள் நினைத்திருக்கட்டும் என்று அப்போதைக்கு விட்டுவிட்டேன்.
சில நாட்கள் பொறுத்து, `உன் பெண்களுடன் என்ன மொழியில் பேசுகிறாய்?’ என்று தற்செயலாகக் கேட்பதுபோல் கேட்டேன்.
`சீனம்தான். IT IS NATURAL! வேறு எப்படிப் பேசுவதையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது,’ என்று கனப் பெருமையுடன் கூறினாள்.
`அது என்ன, நான் என் தாய் மொழியில் பேசினால் chauvinistic, நீ பேசினால் மட்டும் natural?’ என்று தாக்கினேன்.
அவள் முகம் `செத்துவிட்டது’. அதன்பின், என்னுடன் மோதமாட்டாள்.
`இப்படியெல்லாம் எதிர்ப்பேச்சுப் பேச பயமாக இருக்கிறதே! இது அவமரியாதை இல்லையா?’ என்கிறீர்களா?
மரியாதை கொடுக்கத் தெரிந்தவரிடம்தான் அன்புடன் பணிந்து போகவேண்டும். `ஒருவன் உன் கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டு!’ என்பதெல்லாம் இந்தக் காலத்திற்கு உதவாது. நட்பையோ, அதிகாரத்தையோ காட்டி, தெரிந்தே நம்மை அவமதிப்பவர்களிடம் அவர்களைப்போலவே நடந்தால்தான் அவர்களுக்கு உறைக்கும்.
நிமிர்ந்த நடையுடன், வளையாத உடலும், நேர்ப்பார்வையுமாக, நீங்களே உங்களை மதிப்பதைக் காட்ட வேண்டும். அப்போதுதான் பிறர் உங்களை அவமதிக்கத் தயங்குவர். ஒருக்கால் உங்களை அவமரியாதையாக நடத்தினாலும், நீங்கள் பொறுத்துப் போகமாட்டீர்கள்.
எவருக்குமே, `உன் ஒவ்வொரு சொல்லும், செயலும் இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என்று பிறரது போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. இது மனப்புழுக்கத்தில் கொண்டுவிடும்.
பிறர் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டுமென்றால், நமக்கெல்லாம் எதற்கு தனித் தனியாக மூளை?
பிறர் சொல்வது அவர்களைப் பொறுத்தவரை நல்ல அறிவுரையாக இருக்கலாம். நாம் புழங்கும் சூழ்நிலை, பழகும் மனிதர்கள் இவற்றுக்கு ஏற்ப, நாமே நம் அனுபவத்திற்கு ஏற்ப முடிவெடுப்பதுதான் சரி.
இதனால் தவறுகள் ஏற்படலாம். அதனால் என்ன! அதே தவற்றை மறுமுறை செய்யாதிருந்தால், தானே அது நல்ல அனுபவமாகி விடுகிறது!
உங்கள் சுதந்திரமான போக்கையும், அதனால் விளையும் தன்னம்பிக்கையையும் பொறுக்காது, நீங்கள் எப்போதோ செய்த தவற்றையே திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டலாம் சிலர். `பொறாமை பிடித்தவர்களின் பிதற்றல்’ என்று அவர்கள் பேச்சைப் புறக்கணியுங்கள். பிறருடைய பாராட்டையும், மதிப்பையும் எப்போதுமே பெறவேண்டும் என்று நாம் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, போட்டி போடுவது ஆரோக்கியத்திற்குக் கேடு.
உங்களுடனேயே நீங்கள் போட்டி போடுங்கள். ஒரு முறை செய்ததை அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். அப்போதுதான் உங்களை யாராலும் அசைக்க முடியாது.
தொடருவோம்