குறளின் கதிர்களாய்…(91)
–செண்பக ஜெகதீசன்
தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். (திருக்-614: ஆள்வினையுடைமை)
புதுக் கவிதையில்…
முயற்சியற்றவன்
வள்ளல் தன்மை,
பேடியின் கையில்
வாள்போலப்
பயனின்றிக் கெடும்!
குறும்பாவில்…
முயற்சியில்லாதவன் கொடை,
பேடியின் கையில் வாள்,
பயனில வீணே இரண்டும்!
மரபுக் கவிதையில்…
வீரம் உறுதி ஏதுமின்றி
–வீணன் பேடி வாளேந்திப்
போரில் சென்று வீசிநின்றால்
–பலனாய்க் கிடைப்பது கேடன்றோ,
பாரில் மனிதன் முயற்சியின்றிப்
–பலரும் நலம்பெற உதவிடவே
பேரில் வள்ளலாய் ஆவதெல்லாம்
–பேடி கையினில் வாள்தானே!
லிமரைக்கூ…
முயற்சியற்றவன் வள்ளல் என்பது மெய்யில்
மேன்மைதராது வாழ்வில் எவர்க்கும்,
கேடுதானே வாளிருந்தால் பேடியின் கையில்!
கிராமிய பாணியில்…
பாருபாரு நல்லாப்பாரு
வீரமில்லாப் பேடிபாரு,
வீரன்கைல வாளிருந்தா
வெற்றிவரும் பேருவரும்,
பேடிகைல வாளிருந்தா
கேடுதானே தேடிவரும்…?
இதுதான்கத இங்கயும்,
கொஞ்சங்கூட மொயற்சியில்லாதவன்
கொடகுடுக்கப் போறேங்கிறது
பேடிகைல வாள்போலத்தான்…
பாருபாரு நல்லாப்பாரு
வீரமில்லாப் பேடிபாரு…!