-எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்த்திரேலியா   

 ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் , சிறந்த கல்வியிலாளருமான சிற்பி
என அழைக்கப்படும் சரவணபவன் அவர்கள் 09 / 11 / 2015 அன்று
தனது 82-வது அகவையில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
இந்திய எழுத்தாளர்களுக்கும் இலங்கை எழுத்தாளர்களுக்கும்
நல்லதோர் இலக்கியப் பாலமாக விளங்கிய நல்ல இனிய சுபாவம்
உடையமனிதர் அவர். அன்னாருக்கு அஞ்சலி இக்கவிதை!

   காரைநகர் ஈன்றெடுத்த
   கலைமகளின் தவப்புதல்வா
   காதலுடன் கலைச்செல்வி
   கைப்பிடித்த தமிழ்மகனே!

    சாதனைகள் பலசெய்தாய்
    சோதனையும் பலகண்டாய்
    வேதனையில் எமைவிட்டு
    வித்தகனே சென்றதேனோ?

    தமிழ்நாட்டில் கல்விகற்றுத்
    தங்கம்வென்ற நாயகனே
    தமிழோடு உனையிணைத்துத்
    தளராமல் பணிசெய்தாய்

    துணிவாகப் பலபேரும்
    எழுதிநிற்கத் துணையானாய்
    கனிவான உன்முகத்தைக்
    காண்பதினி எப்போது?

    இலக்கியப் பாலமாய்
    இருந்தவெங்கள் சிற்பியையா
    இல்லையெனும் சேதிகேட்க
    இதயமெல்லாம் அழுகிறதே!

    தமிழுலகில் உங்கள்பெயர்
    தலைநிமிர்ந்தே நிற்குமையா
    எமதருமைச் சிற்பியையா
    இருக்கின்றார் உள்ளமெல்லாம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *