இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (173)

– சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!

ஒரு நாட்டின் முதுகெலும்பு அதன் இளைய சமுதாயம். அந்த இளைய சமுதாயம் ஒரு எழுச்சி மிக்கச் சமுதாயமாக, புத்துணர்ச்சி கொண்ட சமுதாயமாக, நாளைய உலகில் தம் நாட்டின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் எனும் இலட்சியதாகம் கொண்ட ஒரு இளைய சமுதாயமாக, பரிணமிக்க வேண்டுமானால் கல்வியில் மேம்பட்டு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

“இளைமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பார்கள் பெரியோர்கள். அதனால்தான் உலகநாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் கல்வியின் முக்கியத்துவம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. கல்விக்கு முதன்மை கொடுக்காத பெற்றோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படக்கூடிய வகையில் இந்நாடுகளில் சட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி இலவசமாக வழங்கப்படுவதன் காரணமும் கல்வியின் முக்கியத்துவத்திற்கு முதன்மை அளிப்பதற்காகவே !

ஆனால், இன்றைய 21ம் நூற்றாண்டில், நாட்டின் எல்லைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழும் மக்கள் அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறார்கள். உதாரணத்திற்கு நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டை எடுத்துக் கொண்டோமானால், இந்நாட்டு மக்கள் என்று கணிக்கப்படும் பொழுது இந்நாட்டின் பழங்குடி மக்களான வெள்ளை இனத்தவர் மட்டுமல்லாது ஆப்பிரிக்கத் தேசத்தவர், ஆசிய தேசத்தவர் மற்றைய ஐரோப்பிய தேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இணைந்த ஒரு சமுதாயமாகவே இந்நாடு காணப்படுகிறது.

மாணவர்கள்ஒவ்வொரு நாட்டையும் பின்புலமாகக் கொண்டவர்கள் அதன் கலாச்சாரப் பின்னணியில் தான் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள். ஒவ்வொரு கலாச்சாரப் பின்னணியிலும் கல்வியின் முக்கியத்துவத்தின் விகிதாசாரம் வேறுபடுகின்றது. வாழ்வின் முன்னேற்றத்திற்கான இலட்சிய வேட்கையின் தாகமும் வேறுபடுகின்றது. தாம் வாழும் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள, தமது வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளக் கல்வி எத்தகைய விதத்தில் வித்திடுகிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள்தான் கல்வியைச் சரியான வகையில் பயன்படுத்தித் தமது வாழ்வில் வெற்றியைத் தேடிக் கொள்கிறார்கள்

இங்கிலாந்து போன்ற ஒரு சமுதாயத்திடலிலே ஒவ்வொருவரும் தமது திறமையை இன, மத, நிற வேறுபாடின்றிக் காட்டக்கூடிய ஒரு சூழல் நிலவுகின்றது. உண்மையான திறமையைக் கண்டெடுத்து அதனை ஊக்குவிக்கவும், அத்திறமையைச் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வழி வகைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால், கேள்வி இவற்றைச் சரியான வகையில் இனங்கண்டு கொள்கிறோமா என்பதுவே ! எதற்காக இந்த அலசலும் , கேள்வியும் என்று எண்ணத்தோன்றுகிறது இல்லையா ?

கணிப்பியல்‘Institute of Fiscal Studies’ எனும் அமைப்பு ஒன்று தனது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் இங்கிலாந்து பழங்குடி வெள்ளை இனத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களே சர்வகலாசாலைக்கு மிகவும் குறைவாகச் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் அதே பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட புலம்பெயர் சமூகங்களைச் சேர்ந்த இந்திய (ஆசிய), சீன மாணவர்கள் அதிக அளவில் சர்வகலாசாலைப் பட்டப் படிப்பை மேற்கொள்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம் என்ன என்பதற்கு அவ்வறிக்கையில் தமது ஆராய்ச்சிகளின் படி, இச்சமூகங்களைச் சேர்ந்த பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வியில் அதிகச் சிரத்தை எடுக்கிறார்கள் என்றும் அக்குழந்தைகளும் மிகவும் சிறப்பான எதிர்காலக் கனவுகளை வரித்துக் கொண்டு அதனை நோக்கி உழைக்கிறார்கள் என்பதும் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இதைப்பற்றிய ஒரு வானொலிக் கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட ஒரு ஆப்பிரிக்க ஆண் ஆசிரியர் ஒருவர், தான் இத்தகைய பின் தங்கிய பொருளாதார நிலையில் வாழும் மாணவர்களைப் பயிற்றுவிப்பதாகக் கூறினார். அவர் மேலும் தான் அம்மாணவர்களுக்கு ஒருமுறை அவர்களின் கருத்தில் அதியுயர்ந்த பணிகளில் அவர்களுக்குப் பிடித்தமான மூன்றை எழுதித் தரும்படி கேட்ட போது அவர்களில் பெரும்பான்மையோர்,

— பிரபல்யமடையும் தொழில் அதாவது நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் போன்ற தொழில்
— உதைபந்தாட்ட வீரர் (இங்கிலாந்தின் உதைபந்தாட்ட வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்)
— தேசிய லாட்டரி சீட்டில் வெற்றி பெறுவது

போன்ற தொழில்களைக் குறிப்பிட்டிருந்தமை அவர்களது வாழ்க்கையை நோக்கிய கண்ணோட்டத்திற்கு எடுத்துக்காட்டு என்று கூறினார்.

ஆனால், இந்திய வம்சாவழியினர் (இந்திய வம்சாவழியினர் என்பது சிறீலங்கா போன்ற நாடுகளையும் உள்ளடக்கியதாகும்), சீன வம்சாவழியினர் மருத்துவர், வக்கீல், கணக்காளர்கள், விஞ்ஞானிகள் போன்ற தொழில்களையே தமக்குப் பிடித்தமான அதியுயர்ந்த பணிகள் என்று குறிப்பிருந்தமை அவர்களது இலட்சிய நோக்கை எடுத்துக் காட்டுகிறது.

இதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கலாம். புலம்பெயர் சமூகத்தின் முதலாம் தலைமுறையினர் இங்கிலாந்தில் கால் பதித்த போது வாழ்வில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்தே முன்னேற வேண்டிய நிலை இருந்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் தாமடைந்த சிரமங்களைத் தமது குழந்தைகளும் எதிர்நோக்கக் கூடாது என்பதற்காகக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்குச் சரியான வகையில் சிறுவயது முதலே நிலைநாட்டி வந்திருப்பது யதார்த்தமே !

அது தவிர, பின்புலத்தில் வாழும்போது எமக்குக் கிடைத்த வாழ்வின் அடித்தள ஆரம்பம் மிக வலுவானது. புலம்பெயர் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் எழுப்பப்படும் வாழ்க்கையைச் சரியான வகையில் தக்க வைத்துக் கொள்வதற்குக் கல்வி ஒரு முக்கியக் காரணி என்பதும் கருத்திற் கொள்ளப் படவேண்டியுள்ளது.

இத்தகைய ஆய்வறிக்கைகள் இப்பல்லினக் கலாச்சாரச் சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதுவே கேள்வி. பின் தங்கியுள்ள வெள்ளை இன மாணவர்களின் கல்வி பற்றிய முக்கியத்துவத்தைச் சரியாகப் புரியவைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே ஒழிய இந்திய,சீன வம்சாவழியின மாணவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாக மாற இடமளிக்கக் கூடாது.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

(நன்றி – பீ.பீ.சி இணையத்தளம் படங்களுக்காக)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.