ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 35

0

சி. ஜெயபாரதன்.

கலில் கிப்ரான்

(1883-1931)

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

மூலம் : கலில் கிப்ரான்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“கழிந்து போகும் பகலுக்கும், சூழ்ந்து வரும் இரவுக்கும் இடையே உதிரும் நமது வாலிபத்துக்கு வருந்தி, தெரியாத ஒருத்திக்கு ஏங்கிப் பலமுறைக் கரிய வெற்று வானை வெறித்து நோக்கி, மௌனத்தின் முணுமுணுப்பைக் கேட்டு ஒன்றுமில்லாததற்கு எல்லாம் அலறிக் கொண்டு நின்றோம்.
யுகங்கள் கடந்து விட்டன ஓநாய்கள் சமாதிகளுக்குள் அடங்கியதைப் போல் ! ஆனால் இப்போது வானம் வெளுத்து விட்டது. நாம் அமைதியோடு தெய்வீக மெத்தைகளில் ஓய்வெடுக்கலாம். நமது ஆசைகளை அணைத்து நம் எண்ணங்களை, கனவுகளை நிறைவேற்ற வரவேற்கலாம்.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________

நீதானா அவன் ?
___________________

நீ தானா
துன்பத் தொட்டிலில்
தோன்றியவன் ?
இடர்ப்பாட்டின் மடியில்
அடக்கு முறை இல்லத்தில்
வளர்ப் பானவன்
நீ தானா ?
உலர்ந்து போன ரொட்டியைக்
கண்ணீரில் ஈரமாக்கி
உண்பவன் நீ தானா ?
உதிரமும், கண்ணீரும் கலந்த
சகதி நீரைப்
பருகி வருபவன்
நீ தானா ?
___________________

பேராசை பிடித்த உனது
நாட்டுத் தலைவன்
காட்டுத் தனமாய்க்
கடமை விதி யென்ற
கட்ட ளைக்குக்
கீழ்ப்படிந்து
மனைவி மக்களைப் பிரிந்து
உடைவாள் ஏந்திப்
போர்க் களத்துக்குப் போகும்
படைவீரன் நீ தானா ?
___________________

நீ யொரு கவிஞனா ?
சகத் தோழர்
அறியாத அன்னியனாய் –
பிறந்த நாட்டில்
தற்காலிய மனித னாகத்
தங்கு பவனாய் –
பிரிவு பட்ட வாழ்க்கையில்
திருப்தி அடைப வனாய் –
தோலும் மையும்
எழுதப் பெற்றதில்
களித்துப் போய்க் –
காலம் தள்ளும் நீயொரு
கவிஞனா ?
___________________

நீ யொரு
சிறைக் கைதியா ?
மனிதனை வஞ்சித்து
நேராக மாற்ற நினைக்கும்
நீசர்கள்
ஓரிருட் டறையில்
உன்னைத் தள்ளி
சிறு குற்றம் ஒன்றுக்குத்
தண்டிக்கப் பட்ட
சிறைக் கைதியா நீ ?
___________________

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *