புலவர் இரா. இராமமூர்த்தி.

திருக்குறளில் ஏறத்தாழ ஒரே வகைச் சீர்களைக் கொண்ட குறட்பாக்கள் உள்ளன! அவை சிறு வேறுபாட்டுடன் அமையும் அழகை நாம் கண்டு சுவைக்கலாம்! அவ்வகையில் இரண்டு குறட்பாக்கள் ஒரே வகைச் சொற்களைக் கொண்டு அமைந்துள்ளன! அவை,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (355)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (423)

என்பனவாகும். இவ்விரண்டு குறட்பாக்களும் ”எப்பொருள்” …… “அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற தொடர்களையே கொண்டு அமைந்துள்ளன! இவற்றின் பொருள், ”எத்தன்மைத்து ஆயினும்” ,”யார், யார்வாய்க் கேட்பினும்”, என்ற தொடர்களால் வேறு படுகின்றன! இவற்றின் வேறுபாட்டை முறையாகப் புரிந்து கொண்டால் உலகியல் அறிவும், ஆன்மிக அறிவும் வளரும்! முதல் குறட்பா பொருள்களின் புறத்தோற்றத்தைக் குறித்தது! ஐம்பெரும்பூதங்களாலான உலகப் பொருள்கள் நம் ஐம்புலன்களால் உணரப் பெறுகின்றன! உலகப் பொருள்கள் அனைத்தையும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புல அறிவுகளால் உணர்வதோடு, அவை உருவான வகை குறித்த தத்துவ அறிவுடன் உள் நோக்கி அறிவதே உலகியலறிவு பெறுதலாகும்! இதனைத் திருவள்ளுவர் உணர்த்துவதற்காகவே, முந்தைய பாட்டில்,

“ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு !” (354)

என்று தெளிவு படுத்தியுள்ளார்! கம்பர்,

“உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட் டுடை யாரவர்
தலைவர்”

என்று குறிப்பாகக் கூறியது தத்துவப் பொருளையேயாகும்! தாயுமானவர்,

“பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே!”

என்றதும் இந்த மெய்ப்பொருளையே ஆகும்! ஆகவே, ஐம்புலன்களால் அறியவும், உணரவும் படும் பொருளே மெய்ப்பொருள் என்பது திருவள்ளுவர் கருத்தாகும் ! அனைத்தும் அணுக்களால் ஆனவையே என்ற அறிவியல் கருத்தும், அணுவுக்கும் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவன் என்ற ஆன்மிகக் கருத்தும் இதனையே உணர்த்துகின்றன!

பொதுவாக ஒருவன் எதனையும் அறிந்து கொள்ள வேண்டுமானால் மிகவும் தேவையான புலன்கள் கண்களும் செவிகளுமே ஆகும்! அதனால்தான், கல்வியறிவுக்கு மிகவும் தேவையானவை கட்புலனும், செவிப்புலனும் ஆகிய இரண்டே என்று கல்வியாளர்கள் கூறினர். கற்றறிவதுடன் கேட்டறிவதும் அறிவுபெறத் தேவையான முறைகளாகும்! இவற்றுள் கேட்டு அறிவது இரண்டு வகைப்படும்! அவை, கேள்வியால் பெறும் அறிவு , உபதேசத்தால் பெறும் அறிவு என்பனவாகும்! வள்ளுவர் கூறிய ‘ஐயறிவு’ க்குள் காணுதலும், கேட்டலும் அடங்கினவே எனினும், கேள்வி என்பது பிறரால் கூறப்படும் கருத்துக்கள் பற்றியதாகும்! இதனைத் திருவள்ளுவர், கல்வி, கேள்வி என்ற இரு அதிகாரங்களில் விளக்குகிறார். இவை, உலகியல் அறிவைப் பற்றிய அறிமுகமேயாகும்!

இவை அனைத்திற்கும் மேலாக,எந்தக் கருத்தையும் பிறர் கூறக் கேட்டறியும் நாம், அவற்றை யார் கூறுகிறார் என்று ஆராய்ந்து, பெரியோர், சான்றோர், நல்லோர் கூறுவதைக் கேட்டல் வேண்டும்! அவை நமக்கு உற்றுழி உதவும்! அதனையே வள்ளுவர்,

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்!” (415)

என்கிறார்! நாம் சிறந்த அறிவுடன் விளங்கும் போதுதான் பிறர் கூறும் கருத்துக்களை ஆராய்ந்து தேவையானால் ஏற்போம்; தேவையில்லையானால் நீக்கி விடுவோம்! இதனையே ‘யார்’, ‘கேட்பினும்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார்! அக்கருத்தைக் கூறுவோர் யாவராயினும் அதனை ஆராய்ந்தே ஏற்போம்! அவ்வாறு கூறுவோர் சிறியவரானாலும், பெரியோரானாலும், அறிஞரானாலும், மூடரானாலும், நண்பரானாலும்,எதிரியானாலும் அவர் கூறுவதிலும் பயன்தரும் கருத்திருந்தால் ஏற்போம்; அப்படியில்லையானால் ஏற்கமாட்டோம்! இதனையே திருவள்ளுவர் ‘ யார்வாய்க் கேட்பினும்’ என்று கூறுகிறார்! அந்தக் கருத்தின் ‘உண்மைப்பொருளை’ ஆராய்ந்தறிவதே மெய்யறிவு என்கிறார்! ஆகவே யார் கூறுகிறார், என்பதை விடவும், அவர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்! ஆகவே,

“எப்பொருள் யார், யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!”

என்ற குறட்பா, உலகியல், அறிவியல் கருத்தைச் சார்ந்தது! அறிவியல் கருத்துக்கள் எப்போதும் மறுப்பின்றி ஏற்கப் படுவதில்லை அவை ஆராயப்பட்டு, மறுக்கப்படும் வரை ஏற்றுக் கொள்ளப் படும். இதனை,

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!” (645)

என்ற குறள் அறிவியல் அணுகுமுறையைக் குறிக்கிறது! ஆகவே இந்த இரண்டு குறட்பாக்களுக்கும் ஆன்மவியல், மற்றும் அறிவியல் கருத்தை உணர்த்துகின்றன என்ற புதிய பொருளை உணர்ந்து கொள்கிறோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *