இலக்கியம்கவிதைகள்

கோலங்கள் ……

 

க. பாலசுப்பிரமணியன்

 koolam

எட்டுப் புள்ளி பத்துப் புள்ளி

எட்டும் புள்ளி எட்டாப் புள்ளி

எல்லாப் புள்ளியும் ஒன்றாய் சேர்த்து

எளிதில் போட்ட கோலமடி !

 

கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து

ஊட்டிக் கொடுத்த கணிதப் பாடம்

உருவகம் கொண்டு வீட்டுக் கணக்காய்

வாசலில் வெளிச்சம் போட்டதடி !

 

பொழுதினில்  காலையில் பூத்திடும் கோலத்தில்

பூவும் கனியும் புதிதாய் பிறக்குதடி !

பரிதியும் மதியும் பக்கத்தில் நின்றே

பாவையின் விரல்களில் பாடங்கள் படிக்குதடி !

 

மங்களம் கூட்டிடும் மனங்கள் சேர்ந்திட

மாலைகள் மாற்றிடும் மணக்கோலமடி !

ஓணத்தின் வண்ணத்தில் உலவிடும் ரங்கோலி

உள்ளங்கள் கவர்ந்திடும் கலைகளின் முன்னோடி!

 

அன்னை தந்தை அண்ணன் தம்பி

உற்றார் உறவினர் மற்றோர் சூழ

ஆடிடும்  விரல்களில் ஆனந்தம் படைக்கும்

வீட்டுவாசலில் வளர்ந்திடும் கோலமடி !

 

கோலங்கள் கண்டதும்  குளிர்ந்த மனத்துடன்

வந்த விருந்தும் வாழ்த்திடத் துடிக்குமடி  !

வானத்தைப் பார்த்து வியந்திடும் கோலத்தை

மண்ணில் கண்டே விண்ணும் மயங்குமடி !

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க