எழுவகைப் பெண்கள்: 2. பெண்ணுடலில் பதினோரு வித்தியாசங்கள்

2

அவ்வை மகள்

ஈன்று புறந்தருதல் தாயின் கடனே என்பார் பொன்முடியார். “பெற்றுப் போடுவது” என்று இளக்காரமாய்ப் பேசுவர் இனம்புரியார். ஈன்று புறந்தருதல் என்பது பெற்றுப்போடும் கொச்சை வேலை இல்லை. பெற்று, பேணி வளர்த்து, அவனையோ அவளையோ ஆளாக்கி, நல்ல மனிதராய் உலகிற்கு வழங்குதல் என்பதே ஈன்று புறந்தருதல் – இது சும்மா பொம்மை விளையாட்டல்ல. ஈன்று புறந்தரும் பணிஎன்பது ஒரு அசாதாரணவேலை- படைத்தல் மட்டுமல்ல – காத்தலும் – வளர்ந்தெழுமித்தலும் இதில் அடக்கம். இது பெண்ணுக்காய் இறைவன் அளித்துள்ள மகத்தான கடமை.

இயற்கையில் ஒரு நியதி உண்டு. எந்த உயிரியும் அதற்கிடப்பட்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றுமுகமாக அந்த உயிரிக்கு வேண்டிய அனைத்தும் அவ்வுயிரிக்கு உடலமைப்பிலேயே இயற்கையாய் வழங்கப்பட்டிருக்கும் – வெளிப்படையாக மட்டுமன்று உள்ளீடாகவும் தான். எனவே, ஈன்று புறந்தருதல் எனும் பணியை ஒரு பெண் நிறைவேற்றுமாறு இயற்கை அவளை வடிவமைத்து படிப்படியாய் உருமாற்றம் செய்து அவளை வளர்த்தாளாக்குகிறது. இந்த இயற்கை ஏற்பாட்டைப் பார்க்கப் போந்தால் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விடயங்கள் சரமாரியாகப் புலப்படுகின்றன.

முதலில், நம் கவனத்தில் படுவது – தாய் என்பவள் குழந்தை ஈன்ற காரணத்தால் உருவாவதில்லை – அவள் தாயாகவே பிறப்பிக்கப்படுகிறாள் என்பதே. பின்னாளில் அவள் தாயாக இயங்க என்னென்ன வேண்டுமோ அத்தனை மூலக்கூறுகளுடனும் ஒரு பெண் குழைந்தை பிறக்கிறது. ஆக, தாயின் சாராம்சங்கள் பெண்ணுக்கு, பின்னால் வருவதில்லை அது பிறப்பிலேயே அவளுடன் பிறக்கிறது என்பது தெளிவு.

எனவே பிறக்கும் பெண் குழந்தை ஒவ்வொன்றும் தாயின் ரூபமே என்பதை முதலில் நாம் தெற்றெனப் புரிந்து கொள்கிறோம். மேலும், நம் வாழ்நாள் அனுபவத்தில் நாம் காணக்கூடிய மற்றொரு யதேச்சை யாதெனில் – எந்த ஒரு பெண்குழந்தையும் எவரின் நிர்ப்பந்தமும் அல்லாமல், தாய்மைப் பண்புகளை வெகு சிறு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்படுத்தலாகின்றது என்பதே. தான் விளையாட எடுக்கும் பொம்மை முதல் தான் விளையாடும் பாங்குவரை அவள் ஒரு தாயை நித்தமும் பிரதிபலிப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த குணாதிசயங்கள் சொல்லித்தந்து வருவதில்லை சுயம்புவாய்ச் சொல்லாமலே இயற்கையாய் வருவன.

விருட்சம் வித்துக்குள் தானே அடங்கி நிற்கிறது? விறகில் தீயும் – பாலில் நெய்யும் உள்ளுறை மகத்துவங்கள் அல்லவா? கங்கையின் உபநதிகள் கங்கையின் பிறப்பல்லவா? இதுபோன்றே, தாயின் பரிமாணங்களும் குணாதிசயங்களும் ஒவ்வொரு பெண் குழந்தையின் உள்ளேயும் அடக்கம் பெறுவது இயற்கைப் பரிசளிப்பேதான் அல்லவா?.

ஆக, பெண் என்பவள் ஒரு சிருஷ்டி கர்த்தாவாகவே பிறப்பெடுக்கிறாள் எனக்காண்கிறோம். மேலும், “அவள்” என்றாலே அதன் பொருள் படைப்பாற்றல் என்கிற உண்மையும் நமக்கு புலப்படுகின்றது.

சொல்லப்போனால், படைப்பாற்றல் என்பதே தான் ஈன்று புறந்தருதல் – இது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, படைத்தல் – காத்தல் – வளர்த்தெழுமித்தல் எனும் முப்பெரும் இயற்கைக் கட்டளைகள் பின்னிப் பிணைந்த சீரிய பணி. இதனை ஆற்றுமுகமாக அவளுக்குள்ளே இயற்கையாய் ஒரு ஆற்றல் புதையல்!

தனக்குள்ளே பல தலைமுறைகளை அடுக்கி வைத்திருக்கும் வித்தினைப்போல – பலப்பலக் கிளை நதிகள் உருவாகும் – வற்றாத ஜீவநதியைப்போல் – கடலுக்குள் மடங்கிநிற்கும் எரிமலைகளைப்போல – பூமியின் உள்ளுறை அக்கினியைப்போலே பிரம்மாண்டமான ஆற்றல் பிரவாகம் பெண்ணினுள்ளே அடங்கிக்கிடக்கிறது. கமண்டலத்திலிருந்து புறப்படும் நதி என்பார்களே அதைப்போன்ற அளப்பற்கரியதான ஆற்றல் கொண்டது பெண் எனும் மகா சக்தி. சக்தி இலையேல் சிவம் இல்லை என்பது இதுபற்றியே. ஆண், விந்துவின் சொந்தக்காரன் தான் ஆனால் விந்து வித்தாகாது – சிசுவகாது – விந்துவைப் பிதாவாக்கும் வித்தையும் வல்லமையும் பெண்ணுக்கு மட்டுமே உண்டு. “நீயே வித்தை! நீயே தருமம்! நீயே இதயம், நீயே மருமம்! உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!” என்று பக்கீம் சந்திரரும் அவர் வழி பாரதியும் பாரத மாதாவைப் பார்த்து நெகிழ்ந்த நெகிழ்வு, பெண்மையின் உச்சஸ்தாயி. இந்த மணிவாசகம் எந்த ஒரு பெண்ணுக்குமே பொருந்தும் என்பதுதான் உண்மை.

சரி, அப்படி என்னதான் இந்த பெண்ணின் உடலில் இருக்கிறது வித்தியாசமாக? என்ற கேள்வி இப்போது நம்மை உலுக்கியெடுக்கிறது அல்லவா? பெண்ணின் சமதள ஜீவியான ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏராளமான வித்தியாசங்களைக் கூறலாம் என்றாலும், முக்கியமான பதினோரு அடிப்படை உடலியல் வித்தியாசங்களை முதலில் காண்போம்.

பெண்களுக்கு ஆண்களை விடக் கூடுதலான நாடித்துடிப்பு உள்ளது.

பெண்களுக்கு ஆண்களை விடக் கூடுதலான இரத்த வெள்ளை அணுக்கள் உள்ளன.

பெண்களின் உடலில் ஆண்களின் உடலில் நிகழ்வதைக்காட்டிலும் கூடுதலான வேகத்தில் நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன.

தொற்று வியாதிகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களைக் குறைவான அளவே தாக்குகின்றன.

பெண்களுக்கு ஆண்களை விட, உடலில் அதிக விழுக்காடு கொழுப்புச் சத்து உள்ளது.

பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான அளவு தசை உள்ளது.

பெண்களுக்கு ஆண்களைவிடக் குறைவான இரத்த அழுத்தம் உள்ளது.

பெண்களுக்கு ஆண்களை விடவும் குறைவான் அளவு இரத்தச் சிவப்பணுக்கள் உள்ளன.

பெண்ணின் எலும்புக்கூடு ஆணின் எலும்புக்கூட்டைக்காட்டிலும் எடை குறைவானதாகவும், பலத்தில் குறைந்தும், வெளிப்பரப்பில் சொரசொரப்பு இன்றி மிருதுவானதாகவும் அமைந்திருக்கிறது.

எலும்பையும் தசையையும் இணைக்கும் தசைநார்கள் (tendons) ஆணைவிடப் பெண்ணுக்கு உறுதி குறைவாக இருக்கின்றன.

பெண்ணுக்குள், எலும்புகளை இணைக்கும் சவ்விழைகள் (ligaments) ஆணைக்காட்டிலும் பலவீனமானவையாகவே இருக்கின்றன. .

இந்த வித்தியாசங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றதான இன்னொரு வேறுபாடுண்டு. அதுதான் இடுப்பு. வடிவத்தில் மட்டுமல்ல கட்டமைப்பிலும் கூட ஆணின் இடுப்பிற்கும் பெண்ணின் இடுப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இடையுடன் தொடையும் பெண்ணின் தனித்திறங்கள்!

மேலும் பேசுவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “எழுவகைப் பெண்கள்: 2. பெண்ணுடலில் பதினோரு வித்தியாசங்கள்

  1. அவ்வை மகள் வெகு நாட்களாக எழுதவேயில்லையோ. அருமையான, உண்ண்மையான, சுவை குறையாத படைப்பு. 
    “..தாயின் பரிமாணங்களும் குணாதிசயங்களும் ஒவ்வொரு பெண் குழந்தையின் உள்ளேயும் அடக்கம் பெறுவது இயற்கைப் பரிசளிப்பேதான்.”  இதில் ஐயமே இல்லை. என் எண்ணங்களும் இவ்வாறே ஓடுகின்றன. [இன்னம்பூரான் பக்கம்: பெண்ணியம்] இந்த 11 வித்தியாசங்களை பற்றியும் நான் எழுதக்கூடும். யார் கண்டார்!

    வாழ்த்துக்கள், ரேணுகா.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *