இறையியல் சிந்தனைகள்: 6 ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்
அவ்வை மகள்
6. துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும் ஓங்கார நாதம்
முனைப்பாடியார் தனது அறநெறிச் சாரத்தில் கூறுவார்:
நோற்பவ ரில்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவருக்குச் சார்வா யறம்பெருக்கி–யாப்புடைக்
காழுங் கிடுகும்போல் நிற்குங் கயக்கின்றி
ஆழிசூழ் வையத் தறம்.
என்று. இல்லறமும், துறவறமும் ஒன்றுடன் சார்ந்து இயங்குதலே இவ்வையத்தின் அறம் எனக்காட்டும் இக்காட்சி உய்ந்துணரத்தக்கது. “காழும் கிடுகும் போல்” என்கிற உவமை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது சிந்தனைகளைக் கிளப்பவல்லது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் – இது மிகப்பெரிய ஆற்றல் சங்கமத் தத்துவம்.
முனைப்பாடியார் காட்டும் காட்சியைக் கூர்ந்து பாருங்கள் – இல்லறம் என்பது கிடைமட்டமாய்ப் போடப்படும் உத்திரமாம். துறவறம் என்பது நெட்டுக்குத்துத் தூணாம். இவையிரண்டும் ஒன்றுடன் ஒரு ஒரு சார்வாகி இணையுமேயானால், அவை கயங்கின்றி ஒரு கட்டிடத்தைத் தாங்குமாம். அந்த கட்டிடம் எதுவென்றால் ஆழிசூழ் வையகத்தின் அறமாம்.
ஆக, உலக தர்மம் இல்லங்களில் தாம் உருவாகிறதாம், அவ்வாறு உலக தர்மத்தை உருவாக்கும் அவ்வில்லத்தார்க்குச் சார்பாய் துறவிகள் நிற்பார்களாம். இல்லத்தவர்களோ உலக தர்ம உற்பத்தியில், தமக்குச் சார்பு தரும் துறவிகளுக்குச் சார்பாய் இருப்பார்களாம். இது ஒரு அற்புத எடுத்துக் காட்டு – அறிவியலில் cyclical relationships – வளைய உறவுகள் என்பார்கள். எது ஆதி எது அந்தம் என்று சொல்லமுடியாத பந்தம் இது. சொல்லப்போனால் இல்லறமும் துறவறமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலானவையே எனும் அற்புதக் காட்சியை முனைப்பாடியார் காட்டுகிறார்.
இங்கு வையகம் என்று சொல்லாமல் ஆழிசூழ் வையகம் என்று சொன்னது உய்ந்துணர்த் தக்கது. எதுகை மோனைக்காக “ஆழி” உபயோகப்படுத்த்தப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓயாமல் கொந்தளிக்கும் கடல்கள் இருப்பதால் இந்த வையகம் என்றுமே என்றும் ஒரு நிலைப்பாடாய் நிற்காமல் ஓயாமல் அதிர்ந்துகொண்டேயிருப்பது போல, இவ்வுலகத்தில் தர்மம் கூட ஒருவித அதிர்வுக்கு ஓயாமல் இலக்காகிறதாம் என்பதை முனைப்பாடியார் சுட்டிக்காட்டுகிறார். அப்படிப்பட்டதான அதிர்வுள்ள ஒரு கட்டிடமான உலக தர்மத்தை, கயங்கின்றி இந்த உத்திரமும் (இல்லறமும்) தூணும் (துறவறமும்) தாங்குகின்றனவாம்.
கயங்கு என்பதை அறிவியல் மொழியில் “Strain” என்று கொள்ளலாம். “Strain” என்பதை எளிய தமிழில் சுணக்கம் எனலாம், சிரமம் எனலாம்; சுணக்கமும் சிரமுமின்றி இலகுவாக பாரம் மிகுந்த கட்டிடத்தைத் தாங்கும் வல்லமை கிடைமட்ட விசையும் நெட்டுக்குத்து விசையும் சார்புடன் பொருத்தும்போது மட்டுமே பிறக்கிறது என்பதை நாமறிவோம் என்பதால் இல்லறமும் துறவறமும் கைகோர்த்துச் செல்வது தான் உலக க்ஷேமதத்திற்கு இலக்கணம் என்பது நமக்குத் புரிகிறது,
“அறம் செய்ய விரும்பு” என்றும் “அறனை மறவேல்” என்றும் அவ்வை இடித்துச் சொன்னது ஏன் என்பதை இங்கு நாம் நன்கு புரிந்து கொள்கிறோம். தனிமனிதரோ பொது மனிதரோ அவர் எவராயினும் அனைவருக்கும் அறம் செய்வது என்பது அடிப்படைக் கடைமை என்றே ஆகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
தனிமனித நெறி தான் அனைத்து நெறிகளுக்கும் முதலாவது என்பதை முனைப்பாடியார் மீண்டும் நன்னெறிச் சாரத்தில் கூறுவதை பாருங்கள்:
“காட்சி யொழுக்கொடு ஞானந் தலைநின்று
மாட்சி மனைவாழ்த லன்றியு–மீட்சியில்
வீட்டுலக மெய்தல் எனவிரண்டே நல்லறங்
கேட்டதனா லாய பயன். “
இந்தப் பாடலில் முனைப்பாடியார் வலியுறுத்துவது என்னவென்றால்: தனிமனிதர்கள் தோற்றத்தில் ஒழுக்கம் கொண்டவராகவும், ஞானம் எனும் விவேகத்தைத் தலையாயக் கொள்கையாய்க் கொண்டவராகவும் கவுரவத்தோடு மனையில் வாழவேண்டும் என்பதே. துறவிகளும் தனிமனிதர்களே தாம். அவர்களுக்கும் இந்த அறநெறிச் சாரம் பொருந்தும்.
“காட்டுக்கோ இமயமலைக்கோ சென்று எதனையும் பிரயாசை செய்யத் தேவையில்லை” அது சாதனை ஆகாது – உன் சொந்த இடத்தில் இருந்தபடி, உன் மக்களோடு இருந்தபடி, தோற்ற ஒழுக்கத்தோடு, விவேகம் கொண்டு கவுரவமாய் வாழு என்று முனைப்பாடியார் சொன்ன எளிமையான – ஆனால் பெருத்த வலிமையான இந்த வழி காட்டுதலைத் துறவிகள் கொள்வதும் மிகப் பொருத்தமே. இங்கு வள்ளலாரின் தோற்ற ஒழுக்கம் மிகவும் போற்றத்தக்கது. அன்றைய நாளில் மட்டுமல்ல இன்றும் கூட வள்ளலாரின் தோற்ற ஒழுக்கம் பெரிதும் போற்றத்தகதே.
துறவி என்ற ரீதியாக வள்ளலாரைப் பார்த்தவர்கள் அவரை ஞானத் துறவிகள் வரிசையில் வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஏனெனில் வள்ளலார் ஒரு முழுமையான ஞானியே என்பதால் தான்.
அதே நேரத்தில் அவர் துறவிதானா என்று பார்த்தால் – மற்ற துறவிகளைப் போல் துறவற இலக்கணங்களை ஒழுகி துறவறம் பூண்டாரா என்று பார்த்தால் அவர் துறவி இல்லை என்றே கூட எண்ணம் தோன்றக்கூடும். ஏனெனில் எவ்விதமான துறவற படாடோபங்களும் அலங்காரங்களும் இன்றி – வெகு இயல்பாய் – ஒரு சர்வசாதாரணப் பிரஜையாய் – மக்களோடு மக்களாக வாழ்ந்து போனவர் வள்ளலார்.
ஒரு சர்வ சாதாரண மனிதராக இருந்தபடியே இறைமை எனும் பெருநிலைக்கு நம்மை வழிகாட்டிப்போந்த வள்ளலார் அந்நாளில் மட்டுமல்ல இன்றும் ஒரு மாபெரும் புரட்சியாளர்தான். மக்களோடு மக்களாய் வாழும் யதார்த்தம்தான் வள்ளலாரின் முக்கிய வசீகரம் எனலாம். இந்த வசீகரம் அந்நாளில் (ஏன் இந்நாளில் கூட) பலரை மிகவும் சிந்திக்க வைத்திருக்கிறது. வள்ளலாருக்குப் பின்னால் வந்த இன்னொரு ஞானத்துறவியான ரமணரும்கூட எளிமை – யதார்த்தம், மக்களோடு மக்களாய் வாழும் அடிமட்ட எளிமை என்ற வசீகரங்களோடு, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவராக விளங்கினார் என்றே அறிகிறோம்.
அடுத்ததாக, வள்ளலாரின் மொழியாளுமை வெகு வசீகரமானது. தமிழை இப்படி அப்படி என்று வார்த்தைகளால் வரையறுக்கமுடியாதபடி அத்தனை அனாயாசமாகக் கையாண்டிருக்கிற நேர்த்தி வள்ளலாரை ஒரு மிகப்பெரிய எழுத்துச் சித்தராய்க் காட்டுகிறது. திருவருட்பாவின் திருமுறைகளில் நாம் காணும் எழுத்துச் சிலம்பம் அப்பப்பா எத்தனை அட்டகாசம்! – ஆண்டவா இயன்றால் இன்னுமொருமுறை வள்ளலாரை இங்கே அனுப்பிவையேன் எனும்படியாக இறைவனிடம் நம்மைக் கோரிக்கை வைக்கத் தோன்றுகின்றது அவரது எழுத்து. அவரெழுத்தில் காணப்படும் எளிமையும், நீரோட்டமும், நாதமும், எதுகை மோனையும், அந்தாக்ஷரமும் உண்மையில் படு ஜோர்!
இறைமை என்பது யாதென வள்ளலார் சொன்ன எளிமை ஒப்பிடற்கரியது. இறைமை என்பதை வாழ்விலிருந்து புறத்ததான விஷயமாகக் கொள்ளாமல் அதனை வாழ்வோடு வாழ்வாய் வாழும் ஒரு கூறாகக் காட்டி வள்ளலார் நடத்திக் காட்டிய அனாயாச எளிமை சாதனங்களை – எளிமை சாதகங்களை வேறு எந்தத் துறவியும் நடத்திக் காட்டியதில்லை. ரமணரிடம் வள்ளலாளரின் சில பல சாயல்களைக் காணமுடிகிறது என்றாலும், வள்ளலாரின் போக்கு வெகு முற்போக்கு எனபதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
“அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி – தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” எனும் இந்த வாசகம் வள்ளலாரை அனைவருக்கும் அடையாளம் காட்டும் வாசகம். கூர்ந்து கவனித்தால், இறைவனுக்கு வள்ளலார் காட்டுவது மூன்றே மூன்று அடையாளங்கள்:
அருள், ஒளி, கருணை.
இந்த மூன்று இறைவனிடம் எவ்வாறு இருக்கின்றன எனபதை அவர் விளக்கும் பாங்கே தனி.
அருள், ஒளி, கருணை -இந்த மூன்றும் இறைவனிடம் எவ்வாறு உள்ளன என்றால் – அருளானது பெரும் ஜோதியாக உள்ளதாம் – கருணையானது தனிப்பெருங்கருணையாக இருக்கிறதாம் – அந்த தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதியாகுமாம். ஆஹா! ஆஹா! ஆஹா! என்று எத்தனை முறைக் கூவினாலும் தகும்! வேறு எவரே இவ்வாறு சொல்லினர் அல்லது சொல்லமுடியும்? இங்கு திருவாசகத்தின் – சிவபுராணத்தின் சார்பு தெரிந்தாலும் – அதிலிருந்து நூறுபடி மேலே சென்று விட்டார் வள்ளலார்.
கூர்ந்து நோக்கினால், ஓங்காராத்தின் மும்முனையையும் – மும்முளையையும் – முவ்வேரையும் வள்ளலார் அருள், ஒளி, கருணை என்றே காட்டுவதாகத் தெரிகிறது. ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும் என்பதை நாம் அறிவோம். அம்மூன்றும் முறையே அருள், ஒளி, கருணை என்று சமனிடும் அற்புதக் கணிதத்தை வள்ளலார் பிரயோகிப்பதை இங்கு நாம் காண்கிறோம். ஓங்காரத் தத்துவப் பொருளை உணர்த்த அவர் விழைவது இன்னொரு இடத்திலும் கூட புலப்படுகிறது: “முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய் எச்சுடரும் போதா இயர்ச்சுடராய்” என்று திருவருட்பாவில் முதல் திருமுறையில். இங்கு, இயர்ச்சுடர் என்பதை இயற்கையின் இயல்பான சுடர் என்று கொள்ளலாம். இயற்கைச் சுடரின் இயல்பு எவ்வாறானது என்றால் எந்தச் சுடராலும் அதனை “மாடல்” செய்து காட்டமுடியாத தனிப்பெரும் தன்மை உடையது.
என்ன தனிப்பெரும் தன்மை என்றால் – இயற்கைச் சுடருக்கு அளப்பெரும் ஆற்றலும் (power) அளப்பெரும் ஜோதியும் (radiance), அளப்பெரும் நிறமும் (luminescence), அளப்பெரும் வெப்பமும் (enthalpy) உள்ளன (குளிரேயானாலும் அதுவும் ஒரு வெப்ப அளவே என உணர்க)! இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இயற்கைக் சுடரில் இருப்பது நாதம் – ஓசை!
இயற்கையின் இயல்பான சுடரில் என்ன ஓசை – என்ன நாதம் இருக்கிறது என்றால் அதுதான் ஓங்காரம். இந்த ஓங்கார நாதத்தை பிதாகரஸ் எனும் கணித மேதை கண்டுபிடித்திருக்கிறார், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இந்த நாதத்தைப் பதிவு செய்திருக்கிறது. (காண்க: https://www.youtube.com/watch?v=TfoRAdDolqA). ஆனால் நம் உலகின் ஒப்பரிய பொக்கிஷமாய்க் கருதப்படும் – நம் நாட்டில் தோன்றியதான இயற்கை மதமான இந்துமதம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓங்காரத்தை அடையாளம் கண்டுவிட்டது. ஓம் எனும் நாதம் இயற்கையின் உயிரோட்டம். துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும் இயற்கை என்றும் ஒரு சீராய்க் கொள்ளும் நாடித்துடிப்பின் இசை ஒலிதான் ஓங்காரம்.
எனவே, அருள், ஒளி, கருணை என்கிற மூன்று ஆற்றல்களையும் ஒன்றிணைத்த வள்ளலார் அந்த விழுதை ஒரு தார்மீக மந்திரமாக – உயிர்மூச்சாக – ஓங்கார நாதம் போல் செய்தார். மாபெரும் புரட்சி இது ஆன்மீகப் புரட்சி என்ற வகையில் மட்டும் இது புதுமையானது அல்ல. அறிவியல் வாயிலாகப் பார்த்தாலும் கூட, இது அறிவியல் முன்னேற்றஙகளுக்கு ஒரு முன்னோடி எனவும் கொள்ளத்தக்கது.
ஏனெனில், இதுவரையிலும் தோன்றியிருக்கிற – தோற்றப்பட்டிருக்கிற அறிவியல் தியரிகள் யாவும் இரண்டு சங்கதிகள் ஒருமித்து நிகழ்வதாக (simultaneity) மட்டுமே காட்டும் வல்லமை பெற்றனவாய் உள்ளன. மூன்று சங்கதிகளை ஒருமித்து நிகழ்த்தும் திறமை அறிவியலுக்கு இல்லை. அறிவியலின் பவுதீக – கணித – புள்ளியியல் திறனுக்கு உள்ளப் பற்றாக்குறை நிலை இது. இந்தப் பற்றாக்குறையை நான் பலவிடங்களில் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது – ஏனெனில் அறிவியல் என்பது ஞானத்தின் ஒரு பகுதியே. அதில் பல கூறுகள் வெற்றாய் இருக்கும். அதிலே உள்ள பற்றாக்குறைகளை இட்டு நிரப்ப எதனால் முடியும் என்றால் – மெய் ஞானத்தால் மட்டுமே முடியும்.
அருள், ஒளி, கருணை என்கிற மூன்று ஆற்றல்களை வள்ளலார் கையாண்ட விதமும் அவற்றை அவர் தொகுத்து வினைவகை செய்த வித்தகமும் கற்றுணரத் தக்கன. சத்ய சன்மார்க்கமும் ஜீவ காருண்யமும் அருள், ஒளி, கருணை என்கிற மும்முனைக்கருவியால்உருவாக்கப்பட்டவையே. இந்த சாதனையில் மணிவாசகரின் திரிகரண சுத்தியையும் சங்கரரின் அத்வைதத்தையும் நம்மால் உணரமுடிகிறது.
மேலும் பேசுவோம்.