புலனடக்கம் இல்லையானால் பூஜைகள் வீண்
சக்தி சக்திதாசன்
மதங்கள் பல. அவற்றின் மூலம் மனங்கள் ஒரே பொருளை, அனைவருக்கும் பொதுவான அந்த இறையை வணங்குகின்றன. இறை நம்பிக்கை மனிதனுக்குக் கொடுப்பது அமைதி. ஆனால் மனச் சுத்தம் இல்லாத வெறும் தெய்வீக நம்பிக்கை மட்டுமே மனத்துக்கு அமைதியைத் தந்து விடுகிறதா?
ஆசைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தெரியாமல் ஆண்டவன் கால்களில் விழுவதனால் பலன் என்ன?
என்னுடைய வாழ்க்கையின் பல நிலைகளை நான் எடுத்துப் பார்க்கிறேன். குழந்தை முதல் என் பதின்ம (teenage) வயதுகள் வரை தெய்வ நம்பிக்கை என்பது என் பெற்றோரால், நான் வளர்க்கப்பட்ட முறையினால் என்மேல் திணிக்கப்பட்டது.
இறைவனை வணங்காவிட்டால் நினைத்த காரியம் ஈடேறாது என்னும் ஒரு நம்பிக்கையை என்னுள்ளே நாட்டினார்கள்.
பின்பு பதின்ம வயதுகளில் கோவிலுக்குப் போவது, நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரைக்குப் போவது போன்ற ஒரு உணர்வினைத் தோற்றுவித்தது. அந்த வயதுக்கேயுரிய வாலிப வயது உணர்ச்சிகள் என்னைத் தாலாட்டின.
பெண்கள் தாய்மார்களாகவோ, அன்றி சகோதரிகளாக(உடன் பிறந்தவர்களாக)வோ இல்லாது போனால் தோழியராகப் பார்க்க முடியாதவாறு ஒரு வாலிப வேகம். உண்மை நட்பு, காதலாக அன்றி ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் தோன்றுவது முடியாத ஒன்று என்று மடத்தனமாக எண்ணும் ஒரு பருவம். ஒத்த வயதுப் பெண்களைக் கண்டுவிட்டாலோ ஏதோ நமக்குள்ளே நாமே ஹீரோ போன்ற ஒரு நினைப்பு.
இந்த நினைப்புக் கொடுத்த வேகத்தை ஈடு கட்ட நண்பர்கள் கோவில் வீதிகளிலே வலம் வருவது ஒரு வாடிக்கை என்பது போல ஆகி விட்டிருந்தது.
அப்போதும் என்ன? மனம் நிறைந்த பெண்ணின் காதலுக்கு அந்த இறைவன் துணை வருவான் என்று ஒரு நப்பாசை. அது தெய்வ நம்பிக்கையா?
பின் புலம் பெயர்ந்து வந்த பின்னால் இள ரத்தத்தின் வேகம் புரட்சிக் கருத்துகள் நெஞ்சைக் கவர்ந்திழுத்த காலம், திரைப்படங்களிலே ஹீரோக்கள் பேசும் வசனங்கள் பச்சை மரத்தில் ஆணி ஏறுவது போல் இலகுவாக புகுந்து விடக்கூடிய பருவம்.
இறை நம்பிக்கை கொண்டோர்களைச் சவாலுக்கு அழைப்பது வாடிக்கை. அதுவும் கூட ஒரு ஆணித்தரமான அடித்தளத்தில் அமைந்தது அல்ல.
திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தந்தையான பின்பு கூட இந்த இள ரத்த வேகம் மனத்தின் இறுக்கமான பிடியை விட்டபாடில்லை.
மற்றையோரின் உணர்வுகளைப் புண்படுத்துகிறோம் என்னும் எண்ணம் சிறிதளவும் மனத்தில் இல்லாது நான் கொண்ட கருத்துகளே சரி என மூர்க்கத்தனமாக வாதிடும் ஒரு மனப் பாங்கு.
இப்படி எத்தனையோ காலக் கட்டங்களுக்கிடையில் நுழைந்து வெளியே வந்த என் பெற்றோர் தமது அந்திம காலங்களில் நோயால் வாடும் நிலைகளைக் கண்டு, பல உற்ற நண்பர்கள், உறவினர்கள் உலகினை விட்டு அகன்ற பொழுதுகளை எதிர்நோக்கி, இன்று ஐம்பதுகளின் நடுவில் அசதியோடு உட்கார்ந்திருக்கும் போது ஆழமான கேள்விகள் உள்ளத்தினுள்ளே உருளுகின்றன.
இறை நம்பிக்கை என்னும் ஒன்று ஏதோ ஒரு விதத்தில் என் நெஞ்சில் எப்படியோ தன்னை நியாயப்படுத்திக்கொண்டு விட்டது. இறைவன் இருக்கிறானா இல்லையா? என்பதல்ல கேள்வி. அதைப் பற்றி விவாதிப்பதும் என் நோக்கமல்ல.
ஆனால் உள்ளத் தடுமாற்றங்களை உணர்ந்துகொள்வதற்கு, ஆசைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கு ஒரு நம்பிக்கை எமக்கும் அப்பால் உள்ள ஒரு சத்தியைக் கொண்டு விளக்கம் கொடுக்க முற்படுவது இதயத்தைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது.
இந்த நம்பிக்கை இறைவன் என்றொருவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இயற்கையாகக் கூட இருக்கலாம். கொடுத்ததைப் பறிப்பது, பறித்ததைத் தருவது, விரும்பியதைக் கிடைக்க முடியாதவாறு செய்வது, அனைத்தையும் சரியாகச் செய்தும் நாம் எதிர்பார்ப்பது நடக்காது இருப்பது இவையனைத்துமே இயற்கையினால் நடக்கிறது என்று நம்பினால் அந்த இயற்கை என்னும் சக்தியைச் சிலர் இறைவன் என்னும் உருவம் கொடுத்து வணங்குவது தப்பா? இல்லையென்று தெரிகிறது.
ஆனால் இதைக் காரணமாக வைத்து மக்களைப் பிரித்து, அவர்களுக்கிடையில் வேற்றுமைகளை உருவாக்கி தமக்குச் சுயலாபம் தேடுவோர் பலர் இல்லாமலில்லை.
இதற்குத்தான் புலனடக்கம் இல்லாத பூஜைகள் வீண் என்னும் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அப்படி இவ்வாக்கியம் சொல்ல முற்படுவது என்ன?
மனத்தை அடக்க முடியாமல், மனத்தின் உணர்ச்சிகள் கோபம், வெறுப்பு, ஆத்திரம், அவமானம், கர்வம் இவற்றினை அடக்கி மற்றையோரையும் தன்னைப் போலவே எண்ண முடியாதவர்கள் பல பூஜைகளைப் பண்ணியும் என்ன லாபம்?
அன்பே தெய்வம், அன்பே சிவம், அன்பே கர்த்தர், அன்பே அல்லா… இதை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக்கொள்ளாமல் எத்தனை கோவில் கோவிலாக ஏறி இறங்கினாலும் மனம் அமைதி கொள்ளாது.