-மேகலா இராமமூர்த்தி

மனிதர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும், சுறுசுறுப்போடும் ஆற்றலோடும் திகழ்வதற்கும் மனித உடலில் ஓடும் இரத்தம் இன்றியமையாதது. மனிதனின் தலைமைச் செயலகமான மூளையும், இரக்கத்தின் இருப்பிடமாகக் கருதப்படும் இதயமும், உடலின் இன்னபிற உறுப்புக்களும் பழுதின்றி இயங்கத் தேவையான உயிர்வளியையும் (Oxygen) ஊட்டச்சத்துக்களையும் (Nutrients) அவற்றிற்கு எடுத்துச்சென்று அளிப்பது இரத்தமே. அத்தோடு, உடலுறுப்புக்கள் வெளியிடும் கழிவுகளை இழிவாகக் கருதாமல் சுமந்துசென்று வெளியேற்றுவதும் இரத்தத்தின் பணியே.

அரத்தம் என்று இலக்கியங்கள் விளிக்கும் இரத்தமானது, குருதி, செந்நீர், உதிரம் போன்ற பிற பெயர்களாலும் அழைக்கப்படுவது நாமறிந்ததே. சிறப்புடைய செந்நிறத்திரவமான இரத்தத்தில், இரத்த நீர்மம் (பிளாஸ்மா), சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்தச் சிறுதட்டுக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தையும், உடலுறுப்புக்களுக்குத் தேவையான உயிர்வளியையும் தருபவை இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள். எதிர்த்துப் போரிடும் வீரர்களாய் விளங்கி உடலை நோயிடம் கொள்ளைபோகாமல் காப்பவை வெள்ளையணுக்கள். இரத்தக்குழாய்கள் பாதிப்படையும்போது அவற்றிலிருந்து அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படுவதைத்தடுத்து உதிரத்தை உறையச் செய்பவை இரத்தச் சிறுதட்டுக்கள். இப்படி, இரத்திலுள்ள உயிரணுக்கள் அனைத்துமே தத்தம் பணியைத் திறம்படச் செய்தால்தான் நோயென்னும் இடும்பையின்றி மாந்தர் இன்பமாய் வாழமுடியும்.

Components of blood: erythrocytes, platelets, and leukocyte, also small vessel showing blood components in plasma SOURCE: hhtp://facultyune.edu.com/abell/histo/histolab3a.htm; Wheater's Functional Histology 3rd ed.இரத்தத்தின் அருமையை அனைவரினும் அதிகமாக உணர்ந்தவர்கள் அரசியல்வாதிகள்தாம் என எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில், ”என் இரத்தத்தின் ரத்தமே” என்று அவர்கள் தொண்டர்களை அன்பொழுக(!) அழைப்பதும், அந்த மந்திரச்சொல்லைக் கேட்டமாத்திரத்தில் தொண்டரடிப்பொடிகளும் மகுடிக்கு மயங்கிய நாகமென மாறி, ஆனந்தக்கண்ணீர் உகுத்து, ஓட்டுக்களை அவர்களுக்கு வாரிவழங்குவதும் கண்கூடு!

என்னதான் அரசியலார் அனைவரையும் ’ஒரே இரத்தமாக’க் கருதி அன்புபாராட்டினாலும் இரத்தத்தின் நிறந்தான் அனைவருக்கும் ஒன்றே தவிர அதில் பலபிரிவுகள் (வகைகள்) உள்ளன என்பதே உண்மை. ஒருவரின் இரத்தப்பிரிவு மற்றொருவரின் இரத்தப்பிரிவிலிருந்து வேறுபட்டது. நெருங்கிய உறவுகளுக்குள் வேண்டுமானால் இரத்தவகை ஒத்ததாயிருக்கும். வேற்றுமனிதர்களின் இரத்தவகை அவ்வாறிருக்க வழியில்லை!

இரத்தச்சிவப்பு அணுக்களின் (RBCs) மேற்பரப்பிலிருக்கும், சிறிதளவு புரதத்தாலான (a tiny bit of protein) உடற்காப்பு ஊக்கிகளே (antigens) மனிதரின் இரத்தவகையைத் தீர்மானிக்கின்றன. இந்த உடற்காப்பு ஊக்கிகளின் அடிப்படையில், மனிதக்குருதியை ஏ (A), பி (B), ஏபி (AB), ஓ (O) எனும் நான்கு பொதுப்பிரிவுகளில் நாம் அடக்கலாம்.

இந்த இரத்தப்பிரிவுகள் பற்றி இரத்தினச் சுருக்கமானதோர் அறிமுகம்…

ஏ பிரிவு: இப்பிரிவு இரத்தத்தில், அதன் சிவப்பணுக்கள் ’ஏ’ வகை உடற்காப்பு ஊக்கியையும் (A antigen), (இரத்தநீர்மமான) பிளாஸ்மா, ’பி’ வகை உடற்காப்பு மூலத்தையும் (B antibody in the plasma) கொண்டிருக்கும்.

பி பிரிவு: இதில், சிவப்பணுக்கள் ’பி’ வகை உடற்காப்பு ஊக்கியையும் (B antigen), பிளாஸ்மா, ’ஏ’ வகை உடற்காப்பு மூலத்தையும் (A antibody in the plasma) பெற்றிருக்கும்.

ஏபி பிரிவு: இவ்வகை இரத்தத்தில், அதன் சிவப்பணுக்கள் ’ஏ, பி’ எனும் இருவகை உடற்காப்பு ஊக்கிகளையும் கொண்டிருக்கும் (both A and B antigens are present in the red cells); ஆனால் பிளாஸ்மாவில், ஏ, பி எனும் இருவகை உடற்காப்பு மூலங்களுமே இராது (neither A nor B antibody in the plasma.)

ஓ பிரிவு: இதில், இரத்தச்சிவப்பணுக்களில் ஏ, பி எனும் இருவகை உடற்காப்பு ஊக்கிகளும் இராது (neither A nor B antigen in the red cells); ஆனால் பிளாஸ்மாவில் ஏ, பி எனும் இருவகை உடற்காப்பு மூலங்களும் இருக்கும் (both A and B antibodies are present in the plasma). 

ஊடற்காப்பு ஊக்கிகளைப் (antigens) போலவே மற்றொருவகைப் புரதமும் (protein) இரத்தத்தில் காணப்படுகின்றது. அதனை Rh காரணி (Rh factor) என்றழைப்பர். இது ஒருவருடைய இரத்தில் இருக்கலாம்; இல்லாதும் போகலாம். இப்புரதம் ஒரு குறிப்பிட்ட இரத்தவகையில் இருந்தால் அந்த இரத்தத்தை ’பாசிட்டிவ்’ வகை இரத்தம் என்றும், இல்லையேல் ‘நெகடிவ்’ வகை இரத்தம் என்றும் அடையாளப்படுத்துகின்றனர் மருத்துவர்கள். சான்றாக, ஏ பிரிவு இரத்தத்தில் இந்த Rh காரணி இருந்தால் அந்த இரத்தத்தை ’ஏ பாசிட்டிவ்’ என்றும், இல்லையேல் ’ஏ நெகடிவ்’ என்றும் அழைப்பர்.

நால்வகை இரத்தவகைகளில் ’ஓ நெகடிவ்’ பிரிவு இரத்தம் அனைத்து இரத்தவகையினருக்கும் பொருந்தக்கூடியது. எனவே, இவ்வகை இரத்தப்பிரிவினரை ’உலகளாவிய குருதிக் கொடையாளர்கள்’ (universal blood donors) என்றழைக்கின்றனர். (மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) நோயாளி ஒருவரின் அவசரத்தேவைக்கு அவருடைய இரத்தவகை கிடைக்கவில்லையெனில், ஓ நெகடிவ் இரத்தத்தைப் பயன்படுத்தலாம் என்பது மருத்துவர்கள் கருத்து. (எனினும், குருதிக்கொடை (blood donation) பெறுபவருக்கு ஓ நெகடிவ் இரத்தம் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால், இரத்தம் ஏற்றுவதை உடனடியாய் நிறுத்திவிட்டுத் தகுந்த மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும்.)

ஓ நெகடிவ் இரத்தப்பிரிவினர் அனைவருக்கும் குருதிக்கொடையாளர்களாக இருப்பதுபோல், ’ஏபி பாசிடிவ்’ இரத்தப்பிரிவினர் அனைவரிடமிருந்தும் குருதியைத் தம் தேவைக்குக் கொடையாகப் பெற்றுக்கொள்ளும் தகுதி படைத்தவர்களாயிருக்கின்றனர். ஆதலால், இவர்களை ’உலகளாவிய குருதிப் பயனாளர்கள்’ (Universal Recipients) என்றழைக்கின்றனர். ஈவதற்கு ஒரு பிரிவினர் இருந்தால் ஏற்பதற்கும் ஒரு பிரிவினர் தேவைதானே? இயற்கையின் கணக்கு சரியாகத்தான் இருக்கிறது!

அடுத்து நம்முன் எழும் கேள்வி…இந்த இரத்தவகைகளுக்கும் நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது. ’இருக்கிறது’ என்கிறது மருத்துவ அறிவியல். ’ஓ’ இரத்தப்பிரிவினரைவிட ’ஏபி’ இரத்தப்பிரிவினரை இதயநோய்கள் 23 சதவீதம் அதிகம் தாக்குவதாகவும், ’ஏ’ பிரிவினரை 5 சதவீதம் அதிகம் தாக்குவதாகவும், ’பி’ பிரிவினரை 11 சதவீதம் அதிகம் தாக்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களை உறுதிசெய்ய மேலும்பல ஆய்வுகள் தீவிரமாக இத்துறையில் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இதயநோய்கள் தடுப்புப்பிரிவில் பணிபுரியும் இதயநோய் நிபுணர் ரிச்சர்ட் ஏ. ஸ்டெயின் (Richard A. Stein, MD).

ஈதொப்ப, மறதிநோயும் (Dementia) ’ஓ’ இரத்தப்பிரிவினரைவிடப் பிறபிரிவினரை, குறிப்பாக ’ஏபி’ பிரிவினரை அதிகம் தாக்குவதாகத் தெரியவருகின்றது. காரணம், நினைவாற்றலுக்குத் துணைசெய்யும் மூளையிலுள்ள சாம்பல்நிறப்பொருள் (Gray matter), ’ஓ’ பிரிவினருக்கு அதிகமாகவும் ஏபி, ஏ மற்றும் பி பிரிவினருக்குக் குறைவாகவும் இருப்பதே எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு, இரத்தவகைகளுக்கும் நோய்களுக்குமிருக்கும் தொடர்பை மருத்துவ அறிவியல் நமக்கு அறியத்தருகின்றது எனினும் இதுகுறித்து நாம் அச்சம்கொள்ளத் தேவையில்லை. நோய்குறித்து விழிப்புணர்வூட்டும் தகவல்களாகவே இவற்றை நாம் கொள்ளவேண்டும். ஏனெனில், நம் உடலும், அதில் ஓடும் உதிரமும் நாமாக விரும்பிப் பெற்றதில்லை! நம் பெற்றோரும், உற்றாரும் (நாம் கேட்காமலேயே) நமக்குக் கொடையாகக் கொடுத்தவை. ஆதலால், நம் இரத்தம் எந்தவகையைச் சேர்ந்ததாயிருப்பினும் அதுகுறித்துக் கவலையுறாது, சிறந்த உணவுப்பழக்கத்தையும், சீரான உடற்பயிற்சியையும் நாம் கைக்கொண்டு, இருப்பதில் நிறைவுகாணும் இனிய மனத்தோடு வாழ்ந்தால் நோய்கள் நம்மை அணுகாது!

*****

தகவல்தந்து உதவிய தளங்கள்:

http://www.hematology.org/Patients/Basics/

http://www.mayoclinic.org/tests-procedures/blood-transfusion/expert-answers/universal-blood-donor-type/faq-20058229

http://www.webmd.com/heart-disease/news/20120814/blood-type-may-impact-heart-risk

https://www.hsph.harvard.edu/news/hsph-in-the-news/qi-blood-type-heart-disease-risk/

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *