இசைக்கவி ரமணன்

 

images-5

இருள்
இருளே அஞ்சிப் பதறும் பேரிருள்
இழைபிரியாமல் எழுந்து பரவி
இனியொரு திசையே இலாதபடி
இருந்தும் அசைந்தும் பராவி அவாவி
ஏதுமே இலாத இலாத எதிரை
இருக்க வைத்துக் கரைத்துக் குடிக்கும்
இருள்

ஒருநாள்
ஆயிர மாயிரம் கோடிக் கதிர்கள்
வாயினைத் திறந்து வற்றாச் செம்மைப்
பாயினை விரித்த பயங்கரி, எனது
தாயினைக் காணத் தளபதியாய் ஊழித்
தீயினை அழைத்துச் சேனை வகுத்தன
தங்கள் ஒளியெனத் தலைகனத்தன
திங்கள் பகலெனத் திகிரி சுழற்றின
நுரைக்குமிழிகளை நொறுக்கும் சூறையாய்
தரைப்புதர்களைத் தழுவும் நெருப்பாய்
அரைவிழி கூடத் திறக்கவில்லை
அனைத்தும் அவளது கறுத்த இருட்டில்
நனைந்த கணத்தில் அமிழ்ந்து மறைந்தன

மொத்த வானும் ஒற்றை நிலவின்
முத்தமொன்றால் முழுதும் நெகிழ்ந்து
அறியாத அழிவொன்றின் தறுவாயில்
தெரியாமல் சிரித்தபடித் ததும்புவதாய்
ஆகாசம் காணாமல் போகலாம் எனுமோர்
அபாயமாக
ஆரிருளிலிருந்து ரெண்டு
காரிழைகள் பிரித்தாள்
அமிழ்தம் நஞ்சாய் அனைத்திலும் ஏறவும்
அகத்தில் நிலவு மொட்டு முளைக்கவும்
புறத்தைத் தொட்டுப் புளகம் எய்தவும்
அகமும் புறமும் அமிழ்தத்தாலே
தகர்ந்து போகுமோர் தருணத்தில் விழி

சற்றே திறந்தாள்
முற்றத்தினிலே முத்துதிர்ந்தன
பற்றில்லாமல் மோட்டுவளையை
உற்றுப் பார்த்து றைந்த சிறுவன்
ஒவ்வொன்றாகப் பொறுக்கிக் கொண்டான்…

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சக்தி முற்றம்

  1. முத்தைப் பொழிந்த முத்து மாரியமன்னின் ( நவகிரக நாயகி ) முத்துக்களை உற்றுப்பார்த்துறைந்த சிறுவன் உதிர்ந்த முத்துக்களை ஒவ்வொன்றகாக தனது உடைமயாக எடுத்துக் கொண்டவிதத்தை இசைக் கவி ரமணனின் முத்தான ஒம் சக்தி முற்றம் பாடல் வரிகள் மூலம் தகவல் தந்த விதம் போற்றுதலுக்குரியது. இசைக்கவி ரமணன் ஐயா அவர்களுக்கு இதயங்கனிந்த பாராட்டுக்கள். நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.