மனமாயை அகற்றிடும் மாகாளி அன்னையே!

பவள சங்கரி

lalitha1

அங்குசபாசமும் கரும்புவில்லும் ஏந்திய
ஓங்குபுகழ் மேவிய கோதைநாயகி
பங்கயக் கரத்தினள் பரிபாலினி
சங்குசக்கிர நாயகனின் நேசமுக்தினி

வயிணவி பதம்நாடும் வரமேசூழ்கவே
பிரமாணி பதமலர் நாளும்போற்றவே
உருத்திராணி உத்தமர்தம் ஊர்காக்கவே
கருத்திலுறை காத்தியாயனி எண்திசைக்காக்கவே!

புவனமெலாம் பூமாரிபொழியும் வரமருள்பவளே
ககனமெலாம் காத்தருளும் காமாட்சிதாயே
உன்னிருதாள் வணங்கி வையமுறைகவே
பன்னிருக்கரம் தாங்கிய பொற்பூரவல்லியே!

பீதாம்பர மணியிடையும் பொற்பூண்களும்
நவரசங்களும் நிறைந்தவள் நித்தியகல்யாணி
புவனமெலாம் காக்கும் புவனாம்பிகைத்தாயே
பிறவிப்பிணி அறுக்கும் பூதேவியும் நீயே

எவர்மனமும் நோகாமல் எவர்வழியும் மோதாமல்
எவர்தயவும் நாடாமல் சிவநெறியில் சுயவடிவில்
சத்தியமும் சாந்தமும் சகலமும் சக்தியர்ப்பணமென
புவனமெங்கும் புத்தொளியாய் மலர்ந்திட அருளுமன்னையே!
சிவயோகமும் தவஞானமும் வரமாய் அருளுமன்னையே!
புவியேழும் நிறைந்திருப்பவளே! சடுதியில் வாருமம்மா!
மனமாயை அகற்றிடும் மாகாளி அன்னையே! காத்தருளுமம்மா!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.