நவராத்திரி நாயகியர் (8)
க. பாலசுப்பிரமணியன்
திருச்சானுர் அலமேலு மங்கை
திருமாலின் இதயத்தில் திருவுள்ளம் கொண்டவளே
திருமலையில் திருமாலைத் தினமும் போற்றுபவளே !
தீதில்லாச் செல்வத்தைத் திகட்டாமல் தருபவளே
திருச்சானூர் குடிகொண்ட தெய்வத் திருமகளே !
அலைபாயும் கடலங்கே உடலணைத்து உவகையுற
ஆதிசேடன் அரங்கனுடன் உனைத்தாங்கி அமைதியுற
அத்தனையும் துறந்துவிட்டு திருமலையின் தாளடியில்
அலர்மேல் அமர்ந்தவளே ! அண்டமெல்லாம் காப்பவளே !
ஏழுமலை வாசனையும் ஏழ்மைக்கு விலையாக்கி
ஏழுகடல் வாசினியே! எளிமைக்கு பொருள்தந்தாய் !
போதுமென்ற மனமதனில் பூமழை பொழிபவளே
போதாத மனிதருக்குப் பொருளறிந்து கொடுப்பவளே !
கண்ணனவன் காலடியில் கனிவோடு அமர்ந்தாலும்
எண்ணத்திலே மன்னனவன் மனம் கொண்டாய் !
விண்ணகமே வியந்திடும் செல்வமே விழிவளர
மண்ணினிலே குபேரர்கள் கோடி படைத்தாய் !
மலையேற வந்தோரை மனமுவந்து காப்பவளே !
மலையான துயரத்தைப் பொடியாக்கும் நின்னருளே !
மங்காத தங்கமெல்லாம் தங்காமல் சென்றாலும்
மனதிலே நீயிருந்தால் மங்காது அருட்செல்வமே!
பொங்கிவரும் பேரழகே! புன்னைவாசன் பொற்கிழியே!
புல்லாங்குழல் ஓசையிலே புலனெல்லாம் மறந்தவளே!
புவிமயங்கும் காதலுக்குப் புதுமொழியைத் தந்தவளே!
பரந்தாமன் கைபிடுத்துக் கொலுவிருக்க வந்திடுவாய்!