அன்பில் ஒன்றான சங்கம்
இசைக்கவி ரமணன்
கனவிலே மேவும் விடியலில் வந்து
காதில் கவிதைகள் சொல்கிறாய், அதை
நினைவிலே பாடி வைக்கிறேன், உனை
நாளெலாம் தேட வைக்கிறாய்
மனதிலே தைத்த முள்ளினை, உன்
மலர்விரல் என்று கிள்ளுமோ? துளி
மனமிலாத பெரும் மர்மமே! அது
மறந்து பிள்ளையைத் தள்ளுமோ?
துருவமாய் அன்னை பிள்ளையா? இந்தத்
துயரை மிஞ்சும்துயர் உள்ளதா?
கருவமா? இது கருணையா? இந்தக்
கதையில் திருப்பமே இல்லையா?
அருவமே! ஆழ நெஞ்சிலே அழகின்
உருவமாய்த் தோன்றும் உண்மையே! உன்
புருவம் உயரும் கணத்திலே, வினைப்
பொற்பு பொடியாகிப் போகுமே!
ஒன்றுநீ என்று சொல்லுவார் அதை
நன்றுதான் என்று கொள்ளுவோம், ஒவ்
வொன்றிலும் நீ ஒன்றுதான் என்றும்
சொல்லுவார் அதையும் கொள்ளுவோம்
ஒன்று மாறி ஒன்றாகத் தெரிவதும், நீ
ஒன்றுதான் என்னில் ஏற்பரோ? அந்த
ஒன்றி லொன்றாமல் ஒன்றி நிற்பதே
வென்றி என்கிறேன் வேர்ப்பரோ!
கற்றை விரியுமுன் ஒற்றை அழகினைக்
காட்டினாய் யாம் கண்டனம்
பெற்ற தாயெனப் பிச்சிப் பேயெனப்
பேசினாய் யாம் கேட்டனம்
உற்ற தோழியாய் உதடு முத்தங்கள்
ஊட்டினாய் யாம் உண்டனம்
மற்றும் வாழ்விலே வாட வைக்கிறாய்
மன்றில் வைக்கிறோம் கண்டனம்!!
உன்னில் நானாகி என்னில் நீயாகி
நம்மில் நாமான இன்பம்
அன்பி லொன்றாகி அழகில் இரண்டாகி
அன்பில் ஒன்றான சங்கம்
நன்மை தீமைகள் இன்ப துன்பங்கள்
அன்னையாடும்சது ரங்கம்
என்றும் உன்சொந்தம் என்று வாழும்நான்
கன்னித் தமிழ்பேசும் சிங்கம்!
கன்னித்தமிழ் பாடும் காளிதாசரே,
நீவீர் அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர் வரிசையில் ஐந்தாம் தமிழ் அருட்கவியாய் தமிழகத்தில் மேன்மை இடம் பெற்றீர்.
அதற்கு கீழ்க் காணும் எழுசீர் ஆசிரிய விருத்தம் ஒன்றே உறுதி அளிக்கிறது.
பாராட்டுகள்,
சி. ஜெயபாரதன்
////உன்னில் நானாகி என்னில் நீயாகி
நம்மில் நாமான இன்பம்
அன்பி லொன்றாகி அழகில் இரண்டாகி
அன்பில் ஒன்றான சங்கம்
நன்மை தீமைகள் இன்ப துன்பங்கள்
அன்னை யாடும்சது ரங்கம்
என்றும் உன்சொந்தம் என்று வாழும்நான்
கன்னித் தமிழ்பேசும் சிங்கம்! ///