என்னழகியே!
இசைக்கவி ரமணன்
மதுவெழுந்து மலராகி மலர்விரிந்து மனமாகி
மனமுழுதும் உனதானதே
மகரந்தம் கனவாகி இதழ்யாவும் நினைவாகி
மணமெங்கும் பெயர்வீசுதே
இதுவரையில் கதையொன்றை இங்கங்குமாகவே
எழுதியகை இளைப்பாறவே
இமையடியில் மைதொட்டுன் விரலெழுதத் துவங்கியதும்
இதயத்தில் குயில்கூவுதே
இதுகேட்டு முகில்சூழ இணைகூடும் தருணமென
இளையமயில் நடமாடுதே
இமைக்காத தேவர்க்கும் விண்மின்னும் மீனுக்கும்
இதுவிந்தை யானதம்மே
எதுசெய்தும் தீராத துன்பங்கள் எதுவொன்றும்
செய்யாமல் தீர்ந்ததின்றே!
என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
எழுந்தருளும் என்னழகியே!
படியேறி வந்தென்றன் மடிதட்டிப் பதறவும்
பாட்டியாய் நின்ற போதும்
பாவாடைச் சிறுமியாய்ப் பாதச் சதங்கையுடன்
பளிங்காய்ச் சிரித்த பொழுதும்
முடிவற்ற இருளொன்றில் மூவாத இருளாக
மூண்டெனை வெருட்டும் போதும்
முத்தத்தில் என்றனுயிர் மொத்தமாய் மிஞ்சாமல்
கொள்ளையாய் அள்ளும் பொழுதும்
விடிவெள்ளி போல்நெஞ்சின் நடுவிலொரு புள்ளியாய்
விலகவொட் டாத போதும்
வேறுபல நிலைகளும் ஊரறிந் தாலென்னை
வேறுபெயர் வைத்தழைக்கும்!
எடையற்ற வெளியொன்றில் இதமாய் மிதக்கின்ற
ஏகாந்தம் தொடர்க தாயே!
என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
எழுந்தருளும் என்னழகியே!
எப்படித் தானிந்தக் குப்பிக்குள் இன்பமெனும்
ஏழுகடல் கூத்தாடுமோ!
ஏதுமறி யாதவன்முன் பாதமிரண் டும்காட்டி
ஏதுக்குத் திரைபோடுமோ!
தப்பேதும் நேராத தாளத்தி லேயென்னைத்
தாலாட்டித் தூங்கவிடுமோ!
தள்ளாடும் தூக்கத்தில் முள்ளாடும் முனையொன்றில்
தனைக்காட்டி ஏங்கவிடுமோ!
தப்பென்னும் சரியென்னும் தர்மங்கள் யாவும்நீ
தழுவியதும் தீர்ந்ததம்மா
தானாக வந்தனை நானாகப் பெறவில்லை
தாயே மறக்கவில்லை
எப்போதும் பிரியாமல் முப்போதும் அன்போடு
என்னோ டிருக்கவேண்டும்
என்மயிலை தென்மதுரை எனதுஜா கேஷ்வரில்
எழுந்தருளும் என்னழகியே!