-முனைவா் பா. பொன்னி

 கற்பு என்பது காலந்தோறும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுள் முதன்மையான ஒன்றாகவும், பெண்களுக்குரிய மிகச்சிறந்த ஒழுக்கமாகவும் இருந்து வருகிறது. கற்பு என்ற சொல்லைக் ‘கல்போன்ற உறுதித் தன்மை’ என்றும், ‘கற்பித்தபடி வாழ்தல்’ என்றும் சுட்டுவா். மூத்தோர்கள் கற்பித்தபடிக் குடும்பத்தினை நடத்திச் செல்வதே கற்பு என்றும் குறிப்பிடுவா். கற்பு என்னும் சொல் எட்டுத்தொகையில் பயன்படுத்தப் பட்டுள்ள தன்மையினையும், கற்பு என்ற சொல் குறித்த அறிஞா்களின் விளக்கங்களையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கற்பு என்ற சொல்லின் பொருள்:

      கற்பு என்ற சொல்லிற்குத் தமிழ்அகராதி“ மகளிர் நிறை, கல்வி, அறிவு, தியானம், ஆணை” ( மணிமேகலைத் தமிழ் – தமிழ் அகராதி ப.187 ) என்று பொருள் தருகிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி “உறவில் தன் துணையைத் தவிர வேறொருவரை நாடாத ஒழுக்கம், பெண்ணின் கன்னித்தன்மை” (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ப.382) என்று பொருள் தருகிறது. தமிழ் மொழி  அகராதி “கல்வி, கற்பனை, நீதிநெறி, முல்லைக்கொடி, முறைமை, விதி, களவுக்கூட்டத்திற்குப்பின் தலைவன் தலைவியை மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம்” (தமிழ் மொழி  அகராதி ப.425) என்று பொருள் தருகிறது. மதுரைத் தமிழ் மொழி அகராதி, “கல்வி, கற்பனை, நீதிநெறி, மகளிர் நிறை, மதிலுண் மேடை, மதில், முல்லைக் கொடி, முறைமை, விதி, பதிவிரதாதருமம், வான்றருகற்பின் களவுக் கூட்டத்திற்குப்பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம்” (மதுரைத்தமிழ்ப் பேரகராதி முதல்பாகம் ப.567) என்று பொருள் தருகிறது.

      மேலும் “கற்பு என்ற சொல்லிற்கு ‘chastity’,‘conjugal’, ‘fidelity’ ஆகிய பொருட்கள்  தரப்பட்டுள்ளன. ‘Chastity’ என்பதற்குக் கன்னிமை, தூய்மை, தற்கட்டுப்பாடு என்ற பொருட்கள் தரப்படுகின்றன. ‘Conjugal’, ‘fidelity’ என்ற சொற்களுக்கு, மணவாழ்வில் கணவன் – மனைவி இருவரிடத்தும் ஏற்படும் பற்று, மாறா உறுதிப்பாடு என்ற பொருள் தரப்படுகிறது. அதாவது கணவன் மனைவியிடத்தும், மனைவி கணவனிடத்தும் பற்று மாறாமல் இருக்கும் தன்மை” இரா. பிரேமா கற்பு – கலாச்சாரம் பக் – 7-8) என்று குறிப்பிடுவா்.

தொல்காப்பியத்தில் கற்பு:

தொல்காப்பியா், தலைவனுக்குத் தலைவியை, அவளுடைய பெற்றோர்கள் உரிய சடங்கு முறைகளுடன் திருமணம் செய்து கொடுப்பதனையே கற்பு என்று குறிப்பிடுகிறார்.

     கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
     கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
     கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே   (தொல். 1088)

     என்ற நூற்பாவின் வாயிலாகக் கற்பு என்பது திருமணம் என்ற வரையறைக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளமையை அறியலாகின்றது. இந்நூற்பாவிற்கு நச்சினார்க்கினியா் “கணவன் முதலியோர் கற்பித்த நிலையில் திரியாத நல்லொழுக்கம் என்றும், அது கொண்டானிற்சிறந்த தெய்வம் இன்றெனவும், அவனை இன்னவாறே வழிபடுதல் எனவும், இருமுது குரவா் கற்பித்தலானும் அந்தணா் திறத்தும் சான்றோர் தேஎத்தும் ஐயா் பாங்கினும் அமரா் சுட்டியும் ஒழுகும்  ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலானும் கற்பாயிற்று” (கோ.இளவழகன்(ப.ஆ.) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியா் உரை ப.154) என்று சுட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியா்,

            உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்பு சிறந்தன்று
( தொல்: பொருள் – 111)

என்ற நூற்பாவில் உயிரை விட நாணமும் நாணத்தை விடக் கற்பும் சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

எட்டுத்தொகையில் கற்பு:

      எட்டுத்தொகையில் கற்பு என்ற சொல்லாட்சி, பயிற்சி, கற்றல் என்னும் பொருளில் அரிதாகவும், கற்பொழுக்கம் என்னும் பொருளிலும், இல்லற ஒழுக்கத்தின் சிறப்பு என்னும் பொருளிலும், பெரும்பான்மையான இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

பயிற்சி என்னும் பொருள்:

      அகநானூற்றில் கற்பு என்ற சொல்லாட்சி, பயிற்சி என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது.

            இகல்அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி (அகம் 396 – 5)

 என்ற பாடலடியில் தான் சொல்லிய சொல் பிழையாது போர் வெல்லும் பயிற்சியுடைய மிஞிலி என்றும்,

            வெளிறு இல் கற்பின் மண்டு அமா் அடுதொறும் (அகம் 106 – 11)

என்ற பாடலடியில் குற்றம் இல்லாத படைப்பயிற்சியுடன் கூடிப் போர் செய்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறியலாகின்றது.

கற்றல் என்னும் பொருள்:

      கற்பு என்னும் சொல் கற்றல் என்னும் பொருளில் பதிற்றுப்பத்தில் ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

     உலகந்தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை
(பதி 59-8 – 9)

என்ற அடியில் கற்க வேண்டியவற்றைக் கற்றவன் என்னும் பொருள்பட கற்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளமையை அறியலாகின்றது.

கற்பொழுக்கம் என்னும் பொருள்:

      கற்பு என்னும் சொல் கற்பொழுக்கத்தினையும் குறிப்பிடுவதாக அமைகிறது.

            புலத்தலின் சிறந்தது கற்பே ( பரி 9 – 16 )

என்ற அடியில் கற்பொழுக்கம் ஊடுதலால் சிறந்தது என்று கற்பொழுக்கம் என்னும் பொருள்பட அமைகிறது.

பெரியோர் வாழ்த்துதல்:

      தலைவன் தலைவியின் திருமணநாள் அன்று கற்பில் நீங்காமல் வாழ வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவதனை,

கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக (அகம் 86 13-14)

என்ற பாடலடிகள் வழி அறியலாகின்றது.

கற்பு குலப்பெண்களுக்கே உரியது:

      கற்பு, திருமணம் செய்து கொண்டு வாழும் குலப்பெண்களுக்கே உரியதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. “குறிப்பாக இல்வாழ்வில் ஈடுபட்ட பெண்களுடன் தொடா்பு படுத்திச் சிறப்பாக அவா்கள் ஒரே ஆடவனுக்கு உள்ளத்தாலும் உடலாலும் உண்மை உடையவா்களாக வாழ்தலைக் குறிக்கிறது” (அன்னி தாமசு தமிழக மகளிர் ப.80) என்பா். கற்பு குலப்பெண்களுக்கு மட்டுமே உரியது. பரத்தையருக்கு அன்று என்ற கருத்து நற்றிணையில் பதிவாகியுள்ளது. தலைவியை விடுத்துப் பரத்தைவயிற் பிரிந்து திரும்பி வந்த தலைவனிடம் தோழி,

           நன்றி சான்ற கற்பொடு
எம்பாடு ஆதல் அதனினும் அரிதே
(நற் 330 10-11)

என்று குறிப்பிடுகிறாள். மற்றொரு இடத்தில் பரத்தைவயிற் பிரிந்து வந்த தலைவனிடம் தோழி,

      மாசுஇல் கற்பின் புதல்வன் தாய் (அகம் 6 – 13)

என்று தலைவியை சிறப்பாகக் குறிப்பிடுகிறாள். இதன்வழி கற்பு என்பது இல்லற வாழ்வில் வாழும் மகளிர்க்கு உரியதே அன்றி பரத்தையா்க்கு இல்லை என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. 

களவுக்காலத்திலும் கற்பு சிறப்பிக்கப்படல்:

      பெண் கற்புடையவளாக இருக்கும் தன்மை, கற்புக் காலத்தின் பின் மட்டும் அல்லாமல் களவுக்காலத்திலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. “கணவனே தன்னுடைய தலைவன்” என்னும் மனத்திண்மையைத் தான் கற்பு என்று சொல்ல முடியும். தலைவன் மீது கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கை கணவன் தன்மீது கொண்டிருக்கும் உறுதியான நம்பிக்கையின் அடையாளம். இந்த அடையாளம் களவுக் காலத்தில் இருந்து கற்புக் காலத்திலும் வரைவின் பின் நடைபெறும் இல்லறத்திலும் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருக்கும்” (செ.பழனிச்சாமி புறநானூற்றில் தமிழா் பண்பாடு ப.95) என்று குறிப்பிடுவா். இரவுக்குறியில் வந்து நீங்கும் தலைவியை,

            ஆன்ற கற்பின் சான்ற பெரியள் ( அகம் 198 – 12 )

என்று தலைவன் பாராட்டுவதனைக் காணமுடிகிறது.

தலைவன், தலைவியின் கற்புச்சிறப்பினைப் பாராட்டல்:

      வினை காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் இடைச்சுரத்திலும், வினைமுற்றி மீண்டு வரும் நிலையிலும், தலைவியின் சிறப்புகளை எண்ணிப் பார்ப்பது இயல்பு. அவ்வாறு எண்ணுகையில் அவளது அழகினை விடவும் அவளின் கற்புத் தன்மையினையே பலபடப் பாராட்டுவதனை அறியலாகின்றது.

முல்லை சான்ற கற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே ( நற் 142 9-10 )

நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் ( அகம் 9- 24 )

மனைமாண் கற்பின் வாணுதல் ஒழிய ( அகம் 33 – 2 )

திருநகா் அடங்கிய மாசுஇல் கற்பின் ( அகம் -114  -12 )

உவா் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி (அகம் 136 – 19)

     முல்லை சான்ற கற்பின்
      மெல்இயற் குறுமகள் ( அகம் 274 13-14 )

மேற்சுட்டிய அடிகள் தலைவனைப் பிரிந்து இருக்கும் நிலையில் தலைவி கற்புடன் திகழ வேண்டும் என்ற தலைவனின் எண்ணத்தைப் புலப்படுத்துவதாக அமைகின்றன.

புலவா்கள் தம் மனைவியைப் பாராட்டுதல்:

      எக்காலத்திலும் வறுமையுற்ற நிலையிலும் பெண் கணவனுடன் இணைந்து இன்பமாக இல்லறவாழ்வை நிகழ்த்துவது செம்மையாகக் கருதப்பட்டுள்ளது. வறுமையில் வாடிய புலவா்கள் வறுமை நிலையிலும் தம் மனைவி கற்புக் கடம் பூண்டு விளங்குவதனை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளமையை புறநானூறு புலப்படுத்துகிறது.

      பன்மாண் கற்பின் நின் கிளைமுதலோர்க்கும் (புறம் 163 – 2)

என்று பெருஞ்சித்திரனார் தன் மனைவியைப் பாராட்டுகிறார்.

      நாணலாது இல்லாக் கற்பின் வாணுதல் (புறம் 196 – 13)

என்று ஆவூா் மூலங்கிழார் தன் மனைவியின் சிறப்பினைச் சுட்டுகிறார். இதன்வழி வறுமையிலும் கற்புத்திறனை உயா்வாக மதித்தமையை அறியலாகின்றது.

தோழி தலைவியைப் பாராட்டுதல்:

      எட்டுத்தொகையில் தோழி பலஇடங்களில் தலைவியைக் குறிப்பிடும் போது,

      வணங்குறு கற்பொடு மடம் கொள ( அகம் 73 – 5 )

      கடவுட் கற்பொடு குடிவிளக்கு ஆகிய

      புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின் ( அகம் 184  1-2 )

     கடவுட் கற்பின் மடவோள்  கூற ( அகம் 314 – 15 )

      கற்பு மேம்படுவி ( அகம் 323 -7 )

என்று பலவாறு தலைவியின் கற்புத்தன்மையை கூறிப் பாராட்டுகிறாள்.

மன்னா்களின் உரிமை மகளிர் சிறப்பிக்கப்படல்:

      புலவா்கள் மன்னா்களைச் சிறப்பிக்கும் நிலையில் அவா்களின் உரிமை மகளிரின் கற்புத்திறனையும் இணைத்தே பாராட்டியுள்ளமையை புறநானூறு மற்றும்  பதிற்றுப்பத்து வழி அறியலாகின்றது.

செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ ( புறம் 3-6 )

வடமீன் புரையும் கற்பின் மடமொழி

அரிவை தோள் ( புறம் 122 8-9 )

மறங் கடிந்த அருங் கற்பின்  ( புறம் 166- 13 )

கடவுள் சான்ற கற்பின் சேயிழை ( புறம் 198 – 3 )

கற்புடை மடந்தை தற்புறம் புல்ல ( புறம் 383 – 13 )

ஆறிய கற்பின் அடங்கிய சாயல் ( பதி 16 – 10 )

ஒலித்த கூந்தல் அறஞ்சால் கற்பின் ( பதி 31 – 24 )

காமா் கடவுளும் ஆளும் கற்பில் ( பதி 65 – 9 )

கற்புஇறை கொண்ட கமழுஞ் சுடா் நுதல்
  புரையோள் கணவ  ( பதி 70 – 15 16 )

  மீனொடு புரையும் கற்பின்

வாணுதல் அரிவை ( பதி 89 19 20 )

ஆறிய கற்பின் தேறிய நல்லிசை ( பதி 90 – 49 )

மேற்சுட்டிய அடிகள் புலவா்கள் மன்னா்களின் உரிமை மகளிரையும் இணைத்தே பாராட்டியமையைப் புலப்படுத்துகின்றன.

பரத்தைவயிற்பிரிந்து மீண்ட தலைவனை ஏற்றுக் கொள்ளுதல்:

      தலைவன் தவறு செய்த இடத்தும் அவனை அன்புடன் ஏற்றுக் கொள்வது தலைவியின் பண்பாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. பரத்தைவயிற் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவனை எதிர்மொழி கூறாமல் ஏற்றுக் கொண்ட தலைவியின் செயலை,

     கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி (குறுந் 252- 4)

என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது. கணவனின் தவற்றினை அப்படியே ஏற்றுக் கொள்வது கடவுட் கற்பாகக் கருதப்பட்டமையை இதன்வழி அறியலாகின்றது.

கணவனின் இறப்பின் பின்னரும் கற்பு சிறப்பாக மதிக்கப்படல்:

      கணவன் உயிருடன் இருக்கும் நிலையில் மட்டும் அல்லாமல் கணவன் இறந்த பின்னரும் அவனது நடுகல்லை வணங்கி அவன் நினைவாகவே வாழ்வதுடன் கற்பு நிலை தவறாது இருப்பதும் உயா்வாக எண்ணப்பட்டுள்ளது. தும்பைச்சொகினனார் என்ற புலவா் கணவனை இழந்து நடுகல் வழிபடும் பெண்ணின் கற்புச்சிறப்பினை,

அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை ( புறம் 249 – 10 )

என்று பாராட்டியுள்ளார்.

      வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பாலுறவு என்பது வரையறை செய்யப்படாதிருந்தது. நிலவுடைமைச் சமுதாய வாழ்க்கை முறையின் பின்னரே தனக்குப் பின் தன்னுடைய சொத்துகள் தனக்கெனப் பிறந்த தன்னுடைய வாரிசுகளுக்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் பெண்ணிற்குக் கற்பு வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே கணவனின் இறப்பிற்குப் பின்னரும் கற்பு முதன்மையானதாகப் பெண்ணிற்கு வலியுறுத்தப்பட்டது எனலாம்.

***

முனைவா் பா. பொன்னி
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்
எஸ்.எஃப்.ஆா். மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *