எதற்காக எழுதுகிறேன்?
-உமாஸ்ரீ
எழுத்தாளர் திருமதி ஜெயா சீனிவாசன் எழுதும் கதைகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். நகைச்சுவையாய் இருக்கும். கதையை வசனங்கள் நகர்த்திப் போகும். மிகவும் புதுமையாய், நவீனமாய், பாரதியின் புதுமைப் பெண் போல் சிந்திப்பவர். பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சைனா, மானசரோவர், நாகலாந்து பயணக் கட்டுரைகள் மற்றும் கோவில் கும்பாபிஷேகம் பற்றியும் எழுதியிருக்கிறார். கலைமகளில் அவருடைய கதைகள், கட்டுரைகள் பிரசுரம் ஆகியிருக்கின்றன.
பொழுதுபோக்குக் கதைகளில் “ ரா… சா… ர… தா…” என்பது ஒரு நல்ல நகைச்சுவை கதை. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? . இதன் அர்த்தம் “ராத்திரி சாப்பாடு ரயிலேதான்.“ அவருடைய எல்லாக் கதைகளிலும் ஹாஸ்யம் மிகுந்து காணப்படுகிறது. திருமதி ஜெயா சீனிவாசனின் கதைகள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் கதைகள் என்று சொல்லலாம். அவரது கைவிரல்களில் ஸரஸ்வதி தேவி நர்த்தனமாடுகிறாள் என்றும் சொல்லலாம்.
அவர் நேர்காணலைக் காண்போம்.
1. உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவும்?
என் பெயர் ஜெயா சீனிவாசன். நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். வசிப்பது சென்னையிலுள்ள கோபாலபுரத்தில். ஒரு பெண், ஒரு பிள்ளை என இரண்டு மணியான ரத்தினங்கள். பேரன் பேத்தி உண்டு. கணவர் டன்லப் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்.
2. தாங்கள் எப்பொழுதிலிருந்து எழுதுகிறீர்கள்?
1969, 1970இல் இருந்து எழுதுகிறேன். என் முதல் கதை ஆனந்த விகடனில் பிரசுரம் ஆயிற்று. அப்போது நான் வெஸ்ட் பெங்காலில் இருந்தேன். கொல்கத்தாவின் அருகிலிருக்கும் ஒரு கிராமம். அப்போதிலிருந்து அப்பப்போ எழுதிக் கொண்டிருக்கிறேன்.
3. தாங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?
எனக்கு எழுதுவது என்றால் மிகவும் பிடிக்கும். சுவாரஸ்யமாய் எழுதுவேன். எனக்கு நல்ல கற்பனை சக்தி உண்டு . அதனால் எழுதுகிறேன். பொழுது போக்கிற்காக மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
4. தாங்கள் எப்பொழுது எழுதுகிறீர்கள்? (குறிப்பிட்ட நேரத்தில்தான் எழுதுவீர்களா?)
நேரம் கிடைக்கும்போது, பொதுவாகப் பகல் வேளைகளில் எழுதுவேன்.
5. சிறுகதையில் என்ன அம்சங்கள் இருக்க வேண்டும்?
கதைக்கரு, பொழுதுபோக்கு அம்சம், விறுவிறுப்பு, நல்ல மெசேஜ் எல்லாம் இருக்க வேண்டும்.
6. உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் நான்கை கூறவும்.
- கல்கியின் பொன்னியின் செல்வன் – பலமுறைப் படித்தது. இப்போது கூட சமீபத்தில் படித்தேன்.
- நா. பா.வின் குறிஞ்சி மலர்.
- சுஜாதாவின் உள்ளம் துறந்தவன்.
- லக்ஷ்மியின் மிதிலா விலாஸ்.
7. படைப்புகளாக மாறிய சில அனுபவங்களைப் பற்றி சொல்லவும்.
அப்படி எதுவும் கிடையாது. எனக்குத் தெரிந்தவர்களை அறிமுகப் படுத்துவேன்.
8. நீங்கள் எழுதிய நூல்கள்/கதைகள் வெளிவந்த பத்திரிகைகள் பற்றிய விவரம் கூறவும்.
சிறுகதைத் தொகுப்பு.
- நான் யார்?
2. பொழுதுபோக்குக் கதைகள்.
குறுநாவல்
நவீன சுயம்வரம்.
9. உங்கள் படைப்புகளில் தங்களுக்கு மிகவும் பிடித்தது?
எல்லாக் கதைகளும் எனக்குப் பிடிக்கும். இருந்தாலும் “நான் யார்?” என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும்.
10. தாங்கள் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது ஒன்றைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
”நெல்லை சந்திப்பு” என்ற சிறுகதை 2012ஆம் ஆண்டு கலைமகள் தீபாவளி மலரில் பிரசுரமானது. அக்கால எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்பாளருமான திரு. கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களின் மூத்தமகன் திரு. பார்த்தசாரதி (இவரும் பெரிய எழுத்தாளர்) அவர்கள், இக்கதையைப் படித்துவிட்டு, தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டுப் பேசி, 5.1.2013இல் நடக்க இருக்கும் தங்கள் தகப்பானார் திரு. கா.ஸ்ரீ.ஸ்ரீயின் நூறாவது ஆண்டு நினைவு நாள் விழாவில், என்னைக் கெளரவப்படுத்த விரும்புவதாகச் சொன்னார்கள்.
அதன்படியே அவர்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்து நடத்திய அந்த பிரம்மாண்டமான நூற்றாண்டு விழாவில், என்னை மேடைக்கு அழைத்து, என்னுடைய கதையைப் பற்றி சிலாக்கியமாகப் பேசி, பெரிய தொகை ஒன்றையும் சன்மானமாகக் கொடுத்து கெளரவப்படுத்தியதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
எழுத்தாளர் திருமதி ஜெயா சீனிவாசனிடமிருந்து விடைபெறும்போது அவருடைய எளிமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவர் மேலும் பல சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துப் பார்புகழ் அடைய வாழ்த்துகள்.