க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் வீட்டுச் சூழ்நிலைகளும் (7)

education-2

வீட்டுச் சூழ்நிலைகள் எவ்வாறு குழந்தைகளுடைய மனநிலைகளையும் அவர்களுடைய கற்றலின் திறன்களையும் முறைகளையும் பாதிக்கின்றன என்று நாம் பார்த்து வருகின்றோம். பல நேரங்களில் பெரியவர்களுக்குப் புலப்படாத சிறிய நிகழ்ச்சிகள், வார்த்தைப் பரிமாற்றங்கள் சிறார்களின் மனத்தில் வியத்தகு பாதிப்புக்களையும் அதனால் அவர்களுடைய சிந்தனை மற்றும் வாழ்க்கைப் போக்குக்களையும் மாற்றியதற்கான முன்னுதாரணங்கள் நமக்கு நித்தம் கிடைக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்  நடந்த ஒரு நிகழ்ச்சி. பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் கணிதத் தேர்வுக்கு முந்திய தினம் ஒரு மாணவனின் தாயார் நோய்வாய்ப்பட்டதன் காரணமாக இறந்து விடுகின்றார். அதனால் அந்த மாணவன் அந்தத் தேர்வுக்குச் செல்ல முடியவில்லை. மறுதினம் அவர்கள் கண்ணீருடன் என்னைச்சந்தித்தபோது “நான் IIT தேர்வில் நிச்சயமாகத் சார். ஆனால் இந்த கணிதத் தேர்வில் எழுத முடியாததால் அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேன் ” என்று துயரத்தோடு கூறினான். அவனை சமாதானப்படுத்தி “நீ மற்ற தேர்வுகளைச் சிறப்பாக எழுது. அதற்குப் பின் பார்க்கலாம் ” என்று தேறுதல் கூறி அனுப்ப அவன் மற்ற தேர்வுகளை சிறப்பாக எழுத, தேர்வின் அறிவுப்புகளுக்குப் பின் நடந்த  தனித்தேர்வில், கணிதத் தேர்வில் மீண்டும் எழுதி நூறு விழுக்காடு மார்க்குகள் பெற, அவனுடைய தேர்வுமுடிவை தனியாக முன்னிலைப் படுத்தி வெளியிட அவன் அதன் காரணமாக IIT யில் சேர்ந்து படித்தான்.

கற்றலில் சிறப்பாக இருந்தாலும் சில நேரங்களில் மாணவர்களுக்கு நோய் வாய்ப்படுவதாலோ, அல்லது குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாகவோ பாதிப்புகள் ஏற்படும் பொழுது அதற்க்கு குடும்பத்தைச் சார்ந்தவர்களும் கல்வி நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் உதவியாக இருந்து வழிநடத்திச் செல்லுதல் அவசியமாகின்றது.

அதே போல மிகச்சிறப்பாக பள்ளியிலே பத்தாம் படித்துக்கொண்டிருந்த மாணவனின் மதிப்பெண்களும் கல்வியைப் பற்றிய கவனமும் தொடர்ந்து பாதிக்கப் பட்டதை கண்டு கவலைகொண்ட பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த பொழுது, தாயை இழந்து நின்ற அந்த மாணவனின் தந்தை இரண்டு மாதங்களுக்கு முன் மறு திருமணம் செய்து கொண்டு புதிய உறவு வீடுதேடி வந்திருக்கும் நிலையில் அந்த நிர்பந்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மாணவனின் மனம் “திக்குத் தெரியாத காட்டில் ” இருப்பது போன்று உணர்ந்து நிலை மறந்தது.

இதுபோன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நித்தம் வீட்டிலேயே குடிக்கின்ற தந்தை, சூதாட்டங்களில் சம்பளங்களை இழந்து ஊர் முழுவதும் கடன் வாங்கிய பெற்றோர்கள், எப்பொழுதும் மற்ற குடும்பத்தினாரோடு தங்களை போட்டியிட்டு தேவைக்கு அதிகமான வாழ்க்கைகளோடு போராடும் குடும்பங்கள், பொய்மை மற்றும் லஞ்சம் போன்ற தவறான செயல்களில் ஈடுபடும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், வன்முறையாலேயே தங்களுடைய சோதனைகளுக்கும் வெற்றிப்பாதைகளுக்கும் வழிதேடும் பெரியவர்கள் உள்ள இல்லங்கள் போன்றவற்றில் கற்றலுக்கான ஏதுவான சூழ்நிலைகள் இருக்க மிகக் குறைவான வாய்ப்புகளே உண்டு.

சரியாகப் படிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்காத தந்தை தன் மகனிடம் “உன்னை இந்த வருஷம் பாஸ் பண்ண வைக்க யார் யார் காலிலேயெல்லாம் விழுந்தேன் தெரியுமா” என்று தன் மகனுக்குத் தன்னுடைய அதிகாரப் போக்கையும் செல்வச் சிறப்பையும் முன்னுதாரணம் காட்டும் பொழுது அந்த மாணவனின் வாழ்க்கைத் தோல்விக்கான அடிக்கல்கள் நாட்டப் படுகின்றன. அதே போன்று “இந்தப் பள்ளியிலே பொதுவாக உன்னுடைய மதிப்பெண்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. எல்லாம் நான் செலவழித்த பணம் பேசியதாக்கும்” என்று தற்பெருமை செய்து கொள்ளும் தந்தை சில நேங்களில் உண்மை விளம்பியாக இருந்தாலும் கூட அது அந்த மாணவனின் சிந்தனைச் சிறப்புக்கு ஒரு தடங்கலாக நிச்சயமாக இருக்க வாய்ப்புண்டு

எவ்வாறு “இளமையில் வறுமை கொடிது ” என்ற கருத்துக்கேற்ப, வறுமை கல்வியின் முன்னேற்றத்திற்கும் வளமைக்கும்  ஒரு தடைக்கல்லாக இருக்க வாய்ப்பிருக்கின்றதோ, அதே நேரத்தில் அந்த வறுமையே பெற்றோர்களின் நல்லெண்ணங்களாலும், தியாகங்களினாலும், நல்வழி காட்டுதலாலும் குழந்தைகளை வெற்றிப் படிகளில் ஏற்றிவிட உதவியாகவும் இருந்திருக்கின்றன. தெருவெளிச்சத்தில் படித்து நீதிபதிகளாகவும், சட்ட வல்லுனர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், மேதைகளாகவும் உயர்ந்து சாதனை படைத்த மாணவர்களின் சரித்திரங்கள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. இந்த சரித்திர மேடைகளில் நாம் பெற்றோர்களின் மற்றும் வீட்டு உறவினர்களின் முக்கிய பங்கையும் ஆக்கபூர்வமான செயல்களையும் காண முடிகின்றது. “இல்லாமையை இல்லாமல்” செய்ய அவர்கள் எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குடையவை!

அதே போல் நல்ல செல்வச் சூழ்நிலைகளில் வளர்ந்து தகாத வீட்டுச்சூழ்நிலைகளினால் வாழ்க்கையில் நற்பண்புகளை இழந்து தோல்வியைத் தழுவிய மாணவர்களைக் கண்டு நாம் துயரமும் அடைகின்றோம். சில நேரங்களில் பெற்றோர்கள் “நான் சம்பாதிப்பதெல்லாம் அவனுக்காகத் தானே , சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே ” என்ற மேதாவித்தனமான போக்கை மேற்கொள்ளும் பொழுது அந்த மாணவச் செல்வங்களின் தேவைகள் தினசரி வளர்ந்து கொண்டே செல்ல , ஒரு நேரத்தில் தேவைக்கு “இல்லாமையால்” வாடும் அவர்கள் தவறான வழிகளை மேற்கொண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் கெட்ட பெயரை வாங்கித்தருவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். சிறுவர்களிடம் தங்கள் தேவைகளை அறிந்து கொள்வதற்கும், அதை கட்டுப்படுத்திக்கொள்ளவும், சமநிலைப்படுத்திக் கொள்ளவும் பயிற்சி அளித்தல் மிக அவசியமானது. வளமான சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தவறல்ல. ஆனால் “விரலுக்கேற்ற வீக்கம்” என்ற பழமொழிக்கேற்ப “வயதுக்குத் தகுந்த அனுபவங்களை ” கொடுக்கும் பொழுது அவர்கள் மனநிலை சிறப்பாகி கற்றலின் சிறப்பும் அத்தோடு வெளிப்படுகின்றது.

குழந்தைகளை நல்வழிப் படுத்துதற்க்கான சிறப்புப் பயிற்சிகள் பெற்றோர்களுக்கு அளிக்கப்படவேண்டும். பள்ளிகளும் நிறுவனங்களும் இதை முன்னிலைப்படுத்திச் செய்தால் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *