Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

நலம் .. நலமறிய ஆவல் – (43)

நிர்மலா ராகவன்

வாழ்க்கை வாழ்வதற்கே 

நலம்-2

இருபத்து ஐந்து வயதில்

`வாழ்க்கை கடினமானது! (Life is hard!)’.

ஏதோ மந்திரம்போல் இந்த வாக்கியத்தை என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்த சில மாணவ மாணவிகள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்கும் எந்த வயதில்தான் கஷ்டமில்லை? அதை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துகொண்டால் நாம் நிரந்தரமான சோகத்துடன் நடந்து, பார்ப்பவர்களையும் மகிழ்ச்சி இழக்கச் செய்யவேண்டாமே!

மேல்படிப்புப் படிக்க வந்திருந்த அந்த இளைஞர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்குப் பஞ்சமில்லை. படிக்க, ஆராய்ச்சி செய்ய நிறைய நேரம் தேவைப்பட்டதால் கேளிக்கைகளுக்கு அவகாசம் போதவில்லை. அவ்வளவுதான். அதையே அவர்களால் தாங்க முடியவில்லை.

தாமதமாக வரும் பலன்கள்

ஓய்வு என்பது நிலத்திற்கு மட்டுமல்ல, மனிதனுக்கும் அவசியம்தான். ஆனால், இளமைக்காலத்தில் கடுமையாக உழைத்தால், வாழ்வின் பெரும்பகுதியைப் பிறர் மதிக்க வாழலாம். இதை அம்மாணவர்கள் நினைக்கத் தவறியதால் அப்படி அலுத்துக்கொள்வதே ஒரு கலாசாரமாக ஆகிப்போயிற்று.

நாற்பத்து ஐந்து வயதில்

`காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது!’
`இனிமேல் என்ன இருக்கிறது! உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற இன்னும் பதினைந்தே வருடங்கள்தாம் இருக்கின்றன!’

எப்போதோ வரப்போகும் மரணத்தை இப்போதிலிருந்து எதிர்பார்த்தே விரக்தி அடைந்துவிடுகிறார்கள் சிலர். எதிலும் பற்றற்று வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?

கதை

முப்பந்தைந்து வயதுப் பெண்மணி ஒருத்திக்கு நான் வண்ண வண்ண பட்டைகள் வைத்த கைக்கடிகாரத்தைப் பரிசளித்தபோது, `ஒரு வயசுக்கப்புறம் அலங்காரத்திலே கவனம் செலுத்தக்கூடாது!’ என்றாள் உறுதியாக. ஆனாலும், அவளைவிட வயதுமுதிர்ந்த பெண்கள் நன்கு அலங்கரித்துக்கொண்டால் பொறாமையுடன் வெறிப்பாள். தானே தனக்கொரு வேலி போட்டுக்கொண்டு, பிறரை நோவது ஏன்?

`பிறர் ஏதானும் சொல்லிவிடுவார்களே!’ என்று பயந்து, எல்லாரும் ஏற்கும் விதத்தில் நடப்பவர்களுக்கு வாழ்க்கையினால் திருப்தியோ, மகிழ்ச்சியோ இருப்பதில்லை.
`எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும். ஏனென்றால், நான் எல்லாருடனும் ஒத்துப்போவேன்!’ என்ற பெருமைதான் மிச்சம்.

எல்லாரும் நடிகர்கள்தாம்

பலர் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எதிரிலிருப்பவர்களுக்குச் சரியாக நடிக்க வேண்டியிருக்கிறது. பிறருக்காக நடிக்க வேண்டியிருக்கும்போதுதான் மன அழுத்தம், உற்சாகமின்மை எல்லாம் வருகிறது.

வேறு சிலரோ எதிலும், எவரிலும் தப்பு கண்டுபிடித்தே தம்மை உயர்த்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

கதை

எங்கள் வீட்டுக்கு அயல்நாட்டிலிருந்து இரு குழந்தைகள் தம் பெற்றோருடன் வருகை புரிந்திருந்தார்கள். நீண்ட பயணம், குழந்தைகள் ஓய்ந்துபோய், சுரத்தில்லாமல் இருக்குமே என்று யோசித்து, அவர்களுக்கு ஏற்ற கலர் பென்சில், விளையாட்டுக் கார் என்று வாங்கி அவர்களை எதிர்கொண்டபோது, `நம்மை இவர்களுக்குப் பிடிக்கிறது!’ என்று புரிந்துகொண்டார்கள். குழந்தைகளாகவே இருந்தார்கள். அந்த கலகலப்பு எல்லாரையும் தொற்றிக்கொண்டது.

`போன மாதம்தான் பார்த்தேன். மூன்று வயதாகியும், அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், அம்மா மடியிலேயே உட்கார்ந்திருந்தானே!’ என்று இன்னொரு உறவினர் பெண்மணி ஆச்சரியப்பட்டாள்.

`ரொம்ப சமர்த்தாயிருக்கணும்!’ என்று தாய் எச்சரித்து அழைத்து வந்திருப்பாள். அல்லது, பிறர் வெளிப்படையாகவே எடைபோடுவார்கள். எதைச் சொன்னால், செய்தால், பிறர் ஏற்காது இழித்துரைப்பார்கள் என்று புரியாதபோது, மௌனமாகிவிடுவது இயல்பு.

எந்த வயதிலும் பிரச்னைதான்

நாற்பது வயதினருக்கு ஒரு விதப் பிரச்னை என்றால், அறுபது, எழுபது வயதில் வேறு விதமான சமூக எதிர்பார்ப்புகள்.

தரமான தமிழ்ப்படங்களைத் திரையில் பார்க்க எனக்குப் பிடிக்கும். ஒரு முறை, படம் ஆரம்பிக்குமுன் தியேட்டரிலிருந்த கடையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இளைஞன் ஒருவன் என முகத்தருகே குனிந்து, `உனக்கெல்லாம் சினிமா ஒரு கேடா!’ என்ற அர்த்தம் வெளிப்பட, எகத்தாளத்துடன் என்னைப் பார்த்தான்.

நானும் தலையை லேசாக நிமிர்த்தி, ஒரு கேலிச்சிரிப்புடன் பார்வையாலேயே அவனை எதிர்கொண்டேன்: `நான் என்ன செய்தால் உனக்கென்ன? நீயா காசு குடுத்து டிக்கட் வாங்கித் தரப்போறே? உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ!’

அவன் அதிர்ந்துபோய், அப்பால் விரைந்தான். அவனுடைய தாய் பாவம்!

நம்மை அச்சுறுத்தவோ, நம்மை நாமே தாழ்மையாக நினைக்க வைக்கவோ பிறர் முயலும்போது, அவர்கள் முயற்சி தோல்வி அடையும்படி நாம் உறுதியாக இருக்கவேண்டும். சுவற்றில் அடிக்கப்பட்ட பந்துபோல் அந்த பயமும், அவமானமும் அவர்களையே போய் சேர்ந்துவிடும்.

வீண்கவலை ஏன்?

இப்போது ஏதாவது கவலையா உங்களுக்கு?
போன தடவை எதற்காகக் கவலைப்பட்டீர்கள் என்று நினைவிருக்கிறதா?

அக்கவலை எத்தனை நாள் நீடித்தது, அதனால் உங்கள் உடல் நலன் எப்படியெல்லாம் பாதிப்படைந்தது என்று யோசித்துப்பார்த்தால், சிறிய விஷயத்திற்கெல்லாம் கவலைப்படுவது அநாவசியம் என்று தோன்றிப்போகும்.

பள்ளிக்கூட, கல்லூரி பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன், முடிவு வெளியாகுமுன், அதற்குப் பிறகு, என்று எல்லா தருணங்களிலும் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் மதிப்பெண்கள் என்னமோ மாறிவிடப்போவதில்லை. இதை யார் யோசிக்கிறார்கள்?

நன்றாகப் படித்துவிட்டு, `நான் எப்படி எழுதப்போகிறேனோ! என்று எதற்காக கவலை?

பதின்ம வயதில் என் தோழி ஒருத்தி தலை வாரிக்கொள்ளாமல், சோகமே உருவாகக் காட்சியளிப்பாள், சில சமயங்களில்.

`உனக்கென்ன வந்தது?’ என்று நான் சிரிப்புடன் கேட்டபோது, `கஷ்டப்பட்டு பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்!’ என்று பதில் வந்தது.

நானோ, அந்தமாதிரி சமயங்களில்தான் இன்னும் அதிகமாக அலங்காரம் செய்துகொண்டு, என்னையே உற்சாகப்படுத்திக்கொள்வேன்.

அபூர்வமாக ஒரு மாணவி கவலைப்படாமல், அமைதியே உருவாக இருந்தால், அவளுக்காக பிறர் கவலைப்படுவார்கள்! இன்னும் அதிகமாகப் பயப்படுவார்கள்.

நாக்கை வெளியில் தொங்க போட்டுக்கொண்டு, நாய்கள் செய்வதுபோல, `ஹா, ஹா’ என்று ஓசை எழுப்பினால், நாம் சிரிக்கிறோம் என்றெண்ணி, மூளை உற்சாகமாகிவிடுமாம். உடல் வலிகூட இம்முறையால் மறைந்துவிடும்.

இதற்கு மாறாக, நாம் சோர்வாக காட்சி அளித்தால்தான் பிறர் நம்மைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள் என்றெண்ணினால், உடலுடன் மூளையும் அயர்ந்துவிடுமே! இப்படிச் செய்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுபோல் ஆகிவிடாதா?

புன்னகையின் பலம்

கோபமாகச் சண்டை போடுவதைவிட புன்முறுவலுடன் கூடிய கருணை பலன் வாய்ந்தது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

கதை

பெங்களூரிலிருந்து அதிகாலையில் விமானவழி பம்பாய் சென்று, அங்கிருந்து அஜந்தா குகைகளைப் பார்க்க ஔரங்காபாத்துக்கு ரயில் பிடிக்க ஏற்பாடுகள் செய்துவிட்டோம்.

விமான தளத்தில், `சிறிது தாமதம்!’ என்று உணர்ச்சியற்ற குரலில் அறிவித்து, முதலில் காலை உணவு கொடுத்தவர்கள், பகலுணவும் கொடுத்து, அதன்பின் `விமானத்தில் கோளாறு! அதனால் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது!’ என்று அறிவித்தார்கள்.

பயணத்துக்கான பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ஒரே அமர்க்களம்.
கெஞ்சிப் பார்க்கலாமோ என்ற நப்பாசையுடன், கவுண்டரில் அமர்ந்திருந்த இளம்பெண்ணை நெருங்கினேன்.

அனேகமாக எல்லாப் பயணிகளும், `எங்களுக்கு எவ்வளவு கஷ்டம், தெரியுமா?’ என்று தங்களால் இயன்றவரை குரலை உயர்த்தி, அவளைத் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தார்கள்.

அவள் ஒரேயடியாக மிரண்டு போனாள்.

விமானக்கோளாறு என்றால், இதில் அவள் தவறு என்ன?

அவளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது. “I don’t envy you!” (உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இல்லை) என்றேன். லேசாகச் சிரித்தேன். ஒருவர் சிரித்தால், எதிரிலிருப்பவர்களும் சிரிக்க முயல்வார்களே! ஏதோ, நம்மாலான உதவி!

அவள் கண்ணில் ஒளி — ஒருவராவது நம் கஷ்டத்தைப் புரிந்துகொண்டார்களே என்று. அவளும் புன்னகைத்தாள். எங்கே, எதற்காகப் போகிறேன், எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்தாள்.

நான் கேளாமலேயே, வேறு ஒரு பெண்ணிடம் போய், “உன் விமானத்தில் ஆன்ட்டிக்கு இடம் கொடேன்!” என்றாள் கெஞ்சலாக.

எகானமி கிளாஸ் டிக்கட் வாங்கியிருந்த நான் அன்று பிசினஸ் கிளாசில் சொகுசாகப் பயணம் செய்ய வேண்டும் என்றிருந்திருக்கிறது! இதைத்தான் ஒரு கதவு மூடினால் இன்னொன்று திறக்கும் என்கிறார்களோ?

தொடருவோம்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க