இனி என்னைப் புதிய உயிராக்கி… (2)

– மீனாட்சி பாலகணேஷ்

நீரில் மிதக்கும் அன்னப்பறவையெனத் தரையில் வழுக்கியபடி வந்து நின்றது ஒரு வெள்ளை நிற ‘மெர்ஸிடிஸ்’ கார். டிரைவர் மாத்யூ தன் சீட்டை விட்டிறங்கி ஓடிவந்து பின் கதவைத் திறந்து பிடித்தார். ஓரு அழகிய ஃபாஷன் மாடலினுடையதைப் போன்ற கால்கள் தென்பட்டன. சணலினால் அழகாகப் பின்னிய வார்கள் கொண்ட குதிகால் உயர்ந்த இத்தாலியன் காலணிகள் வெண்புறா போன்ற பாதங்களைக் கவ்வியிருந்தன. அந்தப் பாதங்களின் அழகு நன்கு தெரிய வேண்டுமென்பதற்காகவே கணுக்கால் மட்டுமே வரும் ஒருவிதமான பான்ட்டை அணிந்திருந்தாள் அக்கால்களுக்குரிய பெண்மணி. நாகரிகத்தின் உச்சிக் கொம்பில் நிற்பவளாகத் தென்பட்ட அந்த நடுத்தர வயது மாது ஒரு செயற்கை முறுவலுடன் வண்டியிலிருந்து இறங்கியவள், “தாங்க்யூ மாத்யூ,” என்றபடி தன் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு  ‘பாப்’ செய்யப்பட்ட தலைமுடியை ஒருமுறை உலுக்கிக் கொண்டவள், ‘டக் டக்’கென ஒரு ஜாதிக் குதிரையின் லயத்தோடும் மிடுக்கோடும் நிமிர்ந்த நன்னடையிட்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தாள்.

          “குட்மார்னிங் மேடம்,” பரபரத்த ரிசப்ஷனிஸ்டின் தேனொழுகல்.

          இவளை எதிர்பார்த்தே வந்தது போல் வந்து நின்ற girl‘லிஃப்டி’ல் இருந்து வெளிப்பட்ட பர்சனல் செக்ரெட்டரி  ப்ரியா, மாத்யூ தந்த ‘ப்ரீஃப்கேஸை’ வாங்கிக் கொண்டு, தன் பாஸுக்கு காலை வணக்கம் கூறினாள். இப்போது இருவரையும் தன்னுள் அடக்கிக் கொண்ட ‘லிஃப்ட்’ அந்தக் ‘கார்ப்பரேட்’ மாளிகையின் மூன்றாவது தளத்துக்கு விரைந்தது.

          ‘மெத்’தென்ற கம்பளம் விரித்த பார்வையாளர்களின் ‘லவுஞ்சை’த் தாண்டி,  அழகான மர வேலைப்பாடு செய்யப்பட்டு ‘டாக்டர் ஷீலா ராபர்ட்ஸ், எம்.டி.’ என்ற போர்டு போட்ட அறைக்குள் நுழைந்தாள் ஷீலா என்ற அந்த மாது. ஏசியின் குளுமையில் ‘மெத்’தென்ற நாற்காலியில் அமர்ந்தவள், தனது ‘ரா சில்க்’ சட்டையின் மேல் பித்தானைத் தளர்த்திக் கொண்டு, நாசுக்காக விசிறிக் கொண்டாள்.

          தன் எஜமானியின் விருப்பு வெறுப்புகள், சமயத்துக்கேற்ற மனநிலையை சாமர்த்தியமாக ஊகித்தறியும் ப்ரியா, அறையின் கோடியிலிருந்த ‘ஃப்ரிஜ்ஜை’த் திறந்து, “எது வேண்டும்?” என வினவ, ஷீலா, ” நான் ஒரு லிம்காவுடன் நாளைத் தொடங்குகிறேன்,’ என்று ஆங்கிலத்தில் விடையிறுத்தபடி, கண்களை இரு நிமிடங்கள் மூடிக் கொண்டு அந்த நாளின் ‘அப்பாயின்ட்மென்ட்’களைப் பற்றி யோசித்தாள்.

          பத்தரை மணிக்கு சீனியர் ஆபீசர்களுடன் ஒரு டிஸ்கஷன். முக்கியமாக ‘குவாலிடி கன்ட்ரோல்’ பற்றிச் சில புகார்கள் வர ஆரம்பித்திருந்தன. அதை நினைத்ததுமே எரிச்சல் ‘கும்’மென்று மூண்டது. ‘மரமண்டை’ என்று ராதாகிருஷ்ணனை மனதிற்குள் திட்டிக் கொண்டாள். பன்னிரண்டரை மணிக்கு ‘க்ளீவ்லாண்டி’ல் இருந்து வந்திருக்கும் கெமிக்கல் எஞ்சினியர்களுடன்  ‘தாஜ்’ ஹோட்டலில் மதிய உணவு. இரண்டரை மணிக்கு அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸருடன் அந்த வருடத்திய போனஸ், சம்பள உயர்வு, பிரமோஷன்கள் பற்றிய டிஸ்கஷன்- பின்பு நாலரை மணிக்கு………’ எனப் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று.

          தலையை வலிப்பது போல இருந்தது. ‘உய்ங்க்’ என்ற வண்டின் ரீங்காரம் போல் சிறியதாக ஆரம்பித்து வலுக்க ஆரம்பித்தது. நேற்றைய இரவின் மிச்சங்கள் இன்னும் அடிமனதில் கனன்று, கசந்து கொண்டிருந்தன.

          ‘லிம்கா’வுடன் வந்து நின்ற ப்ரியா, ஷீலாவின் மூடிய கண்களையும் தன்னையறியாமல் விரல்கள் நெற்றிப் பொட்டை அழுத்தியதையும் பார்த்தவள், ஷீலாவின் கையைப் பற்றி அதில் லிம்கா பாட்டிலைத் திணித்தாள். “தலையை வலிக்கிறதா? ராத்திரி தூக்கமில்லையா ஷீலா?” என்றபடி அவள் பின்புறமாக நின்று கொண்டு உரிமையுடன் நெற்றிப் பொட்டை இதமாக நீவி விடலானாள்.

          ப்ரியா மிகச் சூடிகையான பெண். மற்றவர் முன்னிலையில் எஜமானி- அந்தரங்கக் காரியதரிசி என்ற இடைவெளிக்கு மதிப்புக் கொடுத்து நடப்பவள். ஷீலாவின் உற்ற தோழி; அவளுடைய அந்தரங்கங்களை அறிந்து அறிவுரை கூறவும், கடிந்து கொள்ளவும், ஆறுதல் பகரவும் ஏற்ற ஆருயிர்த் தோழி. இல்லாவிடில் ஷீலா போன்ற ஒரு பெண்ணிடம் வேலை செய்து குப்பை கொட்ட முடியுமா?

          அமைதியான ஐந்து நிமிடங்களின் பின், “போதும் ப்ரியா, தாங்க்ஸ்,” என்றாள் ஷீலா. “நாலரை மணிக்கு ப்யூட்டி பார்லர் அப்பாயின்ட்மென்ட்டையும் எப்படியாவது புகுத்தி விடேன், தலையில் ஆயில் மஸாஜ் பண்ணிக் கொண்டால் நன்றாக இருக்கும் போல இருக்கு,” என முனகினாள்.

          “ஓகே. ஆயிற்று. நீங்கள் உங்கள் நாளைத் தொடங்கத் தயாரா?,” ப்ரியா.

          “சரிடி, ஒரு பத்து நிமிஷம் கூடக் கொடு,” செல்லமாகக் கடிந்து கொண்ட ஷீலா, தன் கைப்பையைத் திறந்து ஏதோவொரு மாத்திரையை வாயிலிட்டுக் கொண்டாள். வானிடி கேஸை எடுத்துக் கொண்டு தனது பிரத்தியேக உபயோகத்துக்காக உள்ளடங்கி, எம். டி. யின் ஆபீஸின் கோடியில்  ரசனையுடன் அழகுபடுத்தப்பட்டிருந்த டாய்லெட்டை நோக்கி நடந்தாள். பாத அணிகளை உதறி விட்டு வெறும் கால்கள் கார்ப்பெட்டின் மென்மையில் புதையப் புதைய நடந்தாள்.

          ப்ரியா ப்யூட்டி பார்லருக்கு போன் செய்து கொண்டிருந்தாள். ரிசீவரை வைத்தவள் பாத்ரூம் கதவை மூடிக் கொள்ளும் ஷீலாவைப் பார்த்தாள். மனத்தின் ஒரு மூலையில் லேசாக வலித்தது. ஓரு நீண்ட பெருமூச்சுடன் ‘பைல்கள்’ அடங்கிய காபினட்டைத் திறந்து டைரக்டரின் அன்றைய ‘மீட்டிங்’குகளுக்கான பேப்பர்களை எடுத்து அடுக்கலானாள்.

          “ஐ ஆம் ரெடி,” ‘க்ளிக்’ என்று பாத்ரூம் தாள் திறந்ததைத் தொடர்ந்து ஷீலாவின் குரல் அறிவித்தது. சரேலென்று தலையைத் திருப்பி அவளை நோக்கிய ப்ரியா என்றும் போலவே இன்றும் ஆச்சரியப்பட மறக்கவில்லை. மென்மையான வாசனைத் திரவியத்தின் மணம் ஷீலாவுக்கே, அவள் நளினத்துக்கும் கம்பீரத்துக்கும் பொருத்தமாகக் கமழ்ந்தது.  சற்று நேரத்திற்கு முன்பு வரை களைப்பின் சுவடுகள் பதிந்து, சிவந்த கண்களுடன் காட்சியளித்த முகமா இது? அகன்ற விழிகளை அரவணைத்த ‘ஐ லைனர்’, ஆழமான பிங்க் நிற உதட்டுப் பூச்சு அணிந்து துடிக்கும் கோவையிதழ்கள், அலையலையாக ஒயிலாகத் தோளில் உறவாடும் பட்டிழை போன்ற கூந்தல், சவால் விடும் சிறுத்தைப் புலியின் கம்பீரம்…

          ‘இது என் ஷீலா- இனிய தோழி,’ ப்ரியாவின் உள்ளம் பெருமிதத்தில் விம்மியது.

          “என்ன ப்ரியா? என்ன சிந்தனை?” என்று ஷீலா இருமுறை திரும்பக் கேட்ட பிறகே, ப்ரியாவுக்குத் தன்னிலைக்குத் திரும்ப முடிந்தது.

          “நேசிக்கப்பட வேண்டிய ராக்ஷஸி,” என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி, இன்டர்காம் லைனை எடுத்து சீனியர் ப்ரொடக்ஷன் மானேஜர் ராதாகிருஷ்ணனையும் அவனுடைய அசிஸ்டண்டாகப் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த பாஸ்கர், லாபரட்டரி சீஃப் ராஜாராமையும் எம்.டி. யின் ஆபீசிற்கு வரக் கூறிவிட்டு, ஷார்ட் ஹாண்ட் புத்தகம், பென்சில் சகிதம் எம்.டி. யின் வலதுபுறம் சற்றுத் தள்ளிப் போட்டிருந்த காரியதரிசியின் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

          டாக்டர் ஷீலா ராபர்ட்ஸ், எம். டி., எஸ். வி. கெமிக்கல்ஸ் தன்னுடைய ‘இன்னும் ஒரு நாளை’ இவ்வாறு தொடங்கினாள்.

  (தொடரும்)

                                           

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *