காட்சி ஒன்று கருத்து வேறு!

-மேகலா இராமமூர்த்தி

கண்ணெதிரே தோன்றுகின்ற ஒரு காட்சி காண்பவரின் மனநிலைக்கேற்ப வெவ்வேறு வகையான உணர்வினை அவர்களுக்கு அளிக்கக்கூடும்.

சான்றாக ஓரிரு காட்சிகள்!

மிதிலை நகருக்குள் நுழைகின்றான் இராமன். மதில் மீதிருக்கும் அந்நகரின் கொடிகள் காற்றில் படபடத்து அசைகின்றன. அக்காட்சியானது, ”செந்தாமரையில் வீற்றிருக்கும் ’செந்திரு’ அம்மலரினின்று நீங்கிச் சனகன் மகள் சானகியாய் மிதிலையில் தோன்றி உனக்காகக் காத்திருக்கிறாள்; வழி பார்த்திருக்கிறாள். இராமா! காலந்தாழ்த்தாது அக்காரிகையைக் கைப்பிடிக்க விரைந்து வா!” என்றழைப்பதுபோல் இருக்கின்றது என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

 அறு மலரின் நீங்கி
யான் செய் மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர் கமலச் செங் கண்
ஐயனை
 ஒல்லை வா என்று
   அழைப்பது போன்றது அம்மா(பாலகாண்டம்: மிதிலைக் காட்சிப் படலம்: 480)

இராமன் மிதிலையில் நுழைவதைத் தொடர்ந்து மங்கல நிகழ்வான மணம் இராமனுக்கும் சீதைக்கும் நிகழவேண்டும் எனும் ஊழ் இருந்ததால், மிதிலையின் கொடிகள் மகிழ்ச்சியோடு அண்ணலை நகருக்குள் வரவேற்கின்றன.

மற்றோர் இடத்திலும் மதிலின் கொடிகள் அசைந்தன. ஆனால் அவற்றின் அசைவோ, நகருக்குள் நுழைய இருந்தவர்களை, ”வேண்டாம்!” என்று தடுப்பதாய் அமைந்திருந்தது.

எங்கே என்கிறீர்களா?

நான்மாடக் கூடலாகிய மதுரையில்தான்!

யாரை அவை தடுக்கின்றன அவ்வாறு?

செவ்வேளையொத்த அழகனான கோவலனையும், தெய்வக் கற்பினளாகிய கண்ணகியையும்தான்!

வையையைக் கடந்து மதுரை மாநகரை ஒட்டிய புறஞ்சேரியில் நுழைகின்றனர் கோவலன், கண்ணகி, அவர்களை வழிநடத்திவரும் கவுந்தியடிகள் மூவரும். பகைவரைப் போரிலே வென்று பறக்கவிடப்பட்ட மதுரை மாநகரின் வெற்றிக்கொடிகள் மதிலின் மேலிருந்தபடி அவர்களைப் பார்த்து, ”அன்பர்களே! இம்மதுரை நகருக்குள் நீங்கள் வராதீர்கள்!” என்று மறிப்பதுபோல் அசைகின்றன என்கிறார் கவிவேந்தரான இளங்கோ.

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென்
பனபோல் மறித்துக்கை காட்டப்… (சிலப்: மதுரைக்காண்டம்- புறஞ்சேரியிறுத்த காதை)

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் நுழைந்ததனாலன்றோ அவர்களின் வல்வினை தன் வேலையைக் காட்டியது. கோவலனின் உயிரைக் குடித்துக் கள்ளமற்ற கண்ணகியை மீளாத்துயரில் வாட்டியது. இங்கே அமங்கல நிகழ்வினைத் தடுக்கக் கொடிகள், ”வாரல்!” என்று மறித்துக் கை காட்டுகின்றன.

மதிற்கொடி வழியே மலர்க்கொடியாள் கண்ணகியின் வாழ்வில் நிகழவிருக்கும் அவலத்தைக் குறிப்பால் உணர்த்திய இளங்கோவின் உத்தி கம்பரைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் தன் காப்பியத்திலும், அடுத்து நிகழவிருப்பதைக் குறிப்பால் உணர்த்த, அதே உத்தியை அவரும் கையாண்டிருக்கிறார் என்று கருதுவதில் பிழையில்லை. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அல்லவா?

இதோ இன்னொரு காட்சி நம் பார்வைக்கு!

வான்மீதிலே பால்போல் வலம்வருகின்றது வெண்ணிலா!

குழந்தைக்கு அமுதூட்டுகின்ற அன்னைக்கு அதுFull-Moon குழந்தையோடு விளையாட உகந்த பொருளாய்க் காட்சியளிக்கின்றது. ஆகவே, அம்புலியைக் ”குழந்தையோடு விளையாட வா!” என்று அன்பொழுக அழைக்கிறாள் அவள். பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ’அம்புலிப் பருவம்’ குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!

அதே நிலவைக் காணுகின்ற ஒரு காதலன், அதனைத் தன் காதலியின் சோதரியாய் எண்ணி, ”என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே…நீ இளையவளா? மூத்தவளா?” என்று வினவுவதாகப் பாட்டெழுதியுள்ளார் பட்டுக்கோட்டையார்.

காமத்துப்பாலில் காதற்கவிஞர் வள்ளுவர் படைத்த காதலனோ, “மலர்போன்ற அழகிய கண்களையுடைய என் காதலியின் முகத்தை நீ ஒத்திருக்க விரும்பினால் (நாணமின்றி) பலரும்காண வானில் தோன்றாதே!” என்று கவின்நிலவிடம் அன்புக்கட்டளையிடுகின்றான்.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. (குறள்: 1119)

பொதுவுடைமைச் சிந்தனையாளரான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து ஒளிமுகத்தைக் காட்டும் நிலாவை நோக்குகின்றார். அதன் தோற்றம், வானச்சோலையில் பூத்த தனிப்பூவோ, சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ என்று அவரை ஐயுற வைக்கின்றது.

தன் பார்வையைச் சற்றே வானிலிருந்து விலக்கி வீதியில் பதிக்கிறார் அவர். நசித்த வாழ்வு தந்த பரிசாய்ப் பசித்த வயிற்றோடு ஓர் ஏழை அப்போது வீதியில் செல்வதைக் காண்கிறார். ஒட்டிய வயிறும் கட்டிய கந்தையும் அவன் கோலத்தை அலங்கோலமாக்கியிருந்தன. அதனைக் கண்டு இரங்குகின்றது அவர் உள்ளம். பெருமூச்செறிந்தபடி மீண்டும் தன் பார்வையை வான்மீது வீசுகின்றார். இப்போது அதே நிலவு பல புதிய சிந்தனைகளை அவருள் கிளர்ந்தெழச் செய்கிறது.

ஆம், முன்பு பாற்குடமாய்க் காட்சிதந்த முழுமதி இப்போது அழிபசி தீர்க்கும் வெண்சோறாய் மாறித் தோன்றுகின்றது அவருக்கு!

எழுதுகோல் எடுத்தார்; அழகிய சொன்மாலை தொடுத்தார்!

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
நிலாவென்று காட்டுகின்றாய்  ஒளிமு கத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ!
…………………………………………………………..
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ! (புரட்சிக்கவி)

வானில் நிலவு உலவுவதும், காற்றில் கொடிகள் அசைவதும் இயற்கை நிகழ்வுகள். ஆனால் அவற்றைக் கண்ணுறும் புலவர்பெருமக்களோ அந்த அசைவைத் தம் மன இசைவுக்கு ஏற்றவகையில் கற்பனையூட்டிக் கற்போரைக் கவர்ந்துவிடுகின்றனர்.

இவ்வாறு இயற்கையின்மீது கவிகள் விதவிதமாய்க் கற்பனை வண்ணந் தீட்டலாம்; அவற்றைப் புதிய கோணங்களில் காட்டலாம். அஃது அவர்களின் படைப்புரிமை! இதனைத் தற்குறிப்பேற்றம் என்று குறிக்கிறது நம் தமிழ்.

தம் சொல்லாற்றலாலும், கற்பனைத் திறத்தாலும் சாதாரண நிகழ்வை அமரத்தன்மை உடையதாய் மாற்றும் சொல்லேருழவரின் ஆற்றலுக்கு இணையேது!

 

 

Leave a Reply

Your email address will not be published.