செண்பக ஜெகதீசன்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவுந்
தீரா இடும்பை தரும்.
(திருக்குறள் -510: தெரிந்து தெளிதல்)               

புதுக் கவிதையில்…

ஆட்சியில் மன்னன்
ஆராய்ந்திடாது ஒருவரைத்
தெரிந்தெடுப்பதும்,
தெரிந்தெடுத்த ஒருவர்மீது

ஐயம் கொள்வதும்,
அல்லலை

அதிகமாகவே கொண்டுவரும்…! 

குறும்பாவில்…

ஆராயாமல் ஒருவரைத் தெரிந்தெடுப்பதும்,
தெரிந்தெடுத்தவர் மீது சந்தேகப்படுவதும்,
தீங்கைத்தான் தரும் தொடர்ந்து…! 

மரபுக் கவிதையில்…

நல்லதாய் ஆட்சி நடைபெறவே
     -நற்றுணை பெற்றிட மன்னனவன்,
வல்லவர் ஒருவரைத் தெளியுமுன்னே

     -விபரம் முற்றிலும் அறியவேண்டும்,
எல்லாம் அறியாத் தேற்றிடுதலும்

      -எடுத்தவர் மீதி லையுறுதலும்,
தொல்லைதான் தருமே என்றென்றும்

       -தீரா யிடர்தான் அரசினுக்கே…!

 லிமரைக்கூ… 

ஆராய்ந்து தெரிந்தெடுத்தலை விட்டு,
தெரிந்தெடுத்தபின் ஒருவர் மீது ஐயுறுதல்

தொல்லையரசுக்கு அல்லல்பல பட்டு…! 

கிராமிய பாணியில்…

தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்
ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்…
அரசாச்சி நல்லாயிருக்க
அதுக்குத் தொணயானவர
நல்லா
ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்… 

ஆராஞ்சி தெரிஞ்செடுக்காமலும்,
ஆராஞ்சி தெரிஞ்செடுத்தபின்னே

அவரமேல சந்தேகப்பட்டாலும்,
அதுதீரா தும்பந்தான்தரும்

அந்த அரசாச்சிக்கே… 

அதால,
தெரிஞ்செடுக்கணும் தெரிஞ்செடுக்கணும்

ஆராஞ்சிதான் தெரிஞ்செடுக்கணும்…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *