தேவைகள் ஆசையாகும் போது
சக்தி சக்திதாசன்.
தேவைகளைத் தேடி அவசர வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம். இந்தத் தேவைகள் சமூகத்திற்குச் சமூகம், கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் வித்தியாசப் படுகின்றது. இந்த வித்தியாசத்தை விபரமாகக் காட்டும் கண்ணாடி புலம் பெயர் நாட்டுச் சூழல், இது காட்டும் காட்சிகள் முக்கியமானவை.
ஏனென்கிறீர்களா ?
நாம் பல வகையான சமூகங்களுக்கு மத்தியில் எமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். வித்தியாசமான பல கலாச்சாரங்களை, வித்தியாசமான பல நடைமுறைகளைக் கொண்ட சமுதாய அங்கத்தினர்களுடன், அயலவர்களாக வாழும், ஒன்றாகப் பணிபுரியும், ஏன் ஒரு சில இடங்களிலே வாழ்க்கைத் துணைகளாகக் கூட கலாச்சார வித்தியாசம் கொண்டவர்களைக் கொள்ளக் கூடிய ஒரு சூழலிலே வாழுகின்றோம்.
ஈழத்தைத் தாய் மண்ணாகக் கொண்டவன், மிகவும் இள வயதினிலேயே தாய்நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்தவன் எனும் கண்ணாடிக் கூடாக நான் தேவைகள் என்னவென்பதைத் தேடிப் பார்க்கிறேன். வாழ்க்கையின் நடுப்பகுதி எனும் அந்த ஐம்பதின் அடியைத் தொட்டுக் கொண்டு, வசதியான வாழ்க்கை எனும் ஒரு வட்டத்தினுள் நின்று கொண்டு வாழ்க்கையின் தேவைகளைப் பற்றி ஓர் ஆராய்ச்சி தேவையா ? என்பது கூட ஒரு நியாயமான கேள்வியே.
ஆனால் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். இன்னும் வாழ்வின் அடிப்படை ஆசாபாசங்களுக்குள் உழன்று கொண்டிருப்பவன்தான். பொறாமை, கோபம், ஆனந்தம், அறியாமை எனும் இந்த சுழற் சக்கரங்களுக்குள் சிக்கிச் சாறாகப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கின்றவன் தான். வாழ்க்கையில் நடந்த பாதையில் தடுக்கிய கற்களின் உறுத்தல் மனதில் கேள்வியாக எழும்போது அதை யதார்த்தமாகப் பகிர்வது, பதிவது பாறைகளில் பட்டுத் திரும்பும் எதிரொலி போன்றதொரு நிகழ்வே !.
நான் சிறுவனாக இருந்த காலத்திலே எனது பெற்றோரின் தேவைகள் வித்தியாசமான வடிவங்களைக் கொண்டிருந்தன. இது அனேகமாக சமூகத்தில் ஏறத்தாழ ஒரே இடத்தில் இருக்கும் மற்றைய பெற்றோரின் தேவைகளை விட்டுப் பெரிய அளவில் மாறுபட்டிருந்தன என்று சொல்ல மாட்டேன். ஆனால் வாழ்க்கையின் நியதிகள், வாழ்க்கைக்கு எது அன்றி, எவை அவசியம், எவை ஆடம்பரம் என்ற வித்தியாசத்திற்குப் போதுமான அளவில் வெளிச்சம் கொடுக்கப்படவில்லை என்பேன்.
மற்றைய பெற்றோரின் வாழ்வில் ஆடம்பரங்கள் என்று பட்டவை, என் பெற்றோருக்கு தமது குழந்தைகளின் தேவை என்று பட்டிருக்கலாம். இதன் ஆரம்பம் அளவு கடந்த பாசமாகக் கூட இருந்திருக்கலாம், ஆனால் அது எனக்கு வாழ்வின் தேவைகளையும், ஆடம்பரங்களையும் வித்தியாசப்படுத்தத் தவறியதால் வாழ்க்கையில் எது சிக்கனம், எது தேவையற்ற ஆடம்பரச் செலவு எனும் பாகுபாடு அத்தியாவசியமான சமயத்திலே தெரியாமல் போய் விட்டது என்று சொல்லுவேன்.
இதை நான் இங்கே கூற விளைந்ததன் நோக்கம், தேவைகள் ஆசையாக பரிணமிக்கும் வேளையின் அடிப்படை எங்கிருந்து தோன்றுகிறது என்பது எனது வாழ்வின் அனுபவங்களை அலசியதால் எழுந்தது என்பதனைச் சுட்டிக் காட்டவே.
வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் என்று பார்த்தால் எந்த நாட்டிலேயும், எந்த சமூகத்தினிடையேயும் காணப்படும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, மனை இவைகள் என்று கண்ணை மூடிக் கொண்டே கூறி விடலாம் எனலாம். ஆனால் இவைதான் ஒரு மனிதனின் தேவைகள் என்று ஏற்றுக் கொண்டு இருந்து விட்டிருந்தால் பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் கண்டு பிடிக்கப் படாமலே போய் விட்டிருந்திருக்கலாம்.
ஆசைகள் இல்லா மனம் அமைதியான நதியைப் போன்றது, ஆனால் அந்த நதி ஆழமற்றதாகவும், என்றுமே அமைதியானதாகவும் இருந்து விட்டால், படகின் தேவை இருந்திருக்காதே, அந்தக் கண்டுபிடிப்பு இல்லாமலே போயிருந்திருக்குமே !
ஒரு மனிதனின் தேவை பெருகப் பெருக அவனது வாழ்க்கையின் தரம் உயர்வதாக எண்ணிக் கொள்கிறான், அப்போதுதான் தேவைகளுக்கும், ஆசைக்கும் உள்ள வேலி அற்றுப் போகிறது. அர்த்தமுள்ள, அளவான ஆசைகள் இருக்கும் ஒரு மனது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதொன்றே. அப்படியில்லாவிட்டால், இளஞர்கள் மனதில் இலட்சியம் தோன்ற வழியில்லாமல் போய் விடாதா?. இலட்சியங்கள் இல்லா இளைஞர் சமுதாயம், பட்டப்பகலில் எரியும் விளக்கைப் போன்று உபயோகமற்றதாகப் போய் விடும் அபாயம் இருக்கிறதே!
ஆனால் சில மனங்கள் இந்த அர்த்தமுள்ள ஆசைகள் எனும் நிலையைத் தாண்டி பேராசை எனும் பெருங்கடலினுள் விழும் போதுதான், நீதிக்கும், அநீதிக்கும் நடக்கும் போரில் நிம்மதி தன் உயிரைப் பறிகொடுக்கிறது.
புலம்பெயர் நாட்டினிலே நாம் உதாரணத்திற்கு இரண்டு சமூகத்தை எடுத்துக் கொள்வோம். இங்கிலாந்து நாட்டின் மண்ணுக்கே சொந்தமான ஆங்கிலேயக் குடும்பத்தையும், ஈழத்திலிருந்து இங்கிலாந்து நாட்டிற்கு புலம் பெயர்ந்து பல வருடங்களாக வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்க்குடும்பத்தின் தேவைகள், ஆங்கிலேயக் குடும்பத்திற்கு ஆசையாக, ஏன் பேராசையாகக் கூடத் தெரியலாம். ஆனால் அந்த ஆங்கிலேயக் குடும்பம் வாழும் முறை, தமிழ்க் குடும்பத்திற்கு ஒரு பொறுப்பற்ற தன்மையாகத் தெரியலாம்.
ஏனென்று ஓர் கேள்வி எழுவது இயற்கையே !
நாம் ஈழத்தில் வாழ்ந்த சூழல், எம்மைப் பின்னிப் பிணைந்திருக்கும் கலாச்சாரம் ஒரு சேமிப்புக் கலாச்சாரமே! அன்றைய ஈழத்திலே அன்றி இந்தியாவிலே வாழ்க்கைக் காப்புறுதி எனும் ஒரு பாதுகாப்பு வலை இருக்கவில்லை. அத்தோடி ஹாஸ்பிட்டல்கள், கல்வி என்பன இலவசமாக இருந்தாலும் அரசாங்கம் மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு வரையறை இருந்தது.
அதாவது, சந்தர்ப்ப சூழலினால் தனது வேலையை இழந்த ஒருவனுக்கு அரசாங்கத்தின் மூலம் உதவிப்பணம் கிடைப்பது என்பது ஒரு சிலருக்குக் கிடைக்கக் கூடிய சலுகையாகவே இருந்தது. இதன் காரணமாக, தமது பிற்கால வாழ்க்கைக்கும், தமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் தம்மால் மட்டுமே அளிக்க முடியும் எனும் நிலையிலிருந்த, எமது நாட்டுப் பெற்றோர்கள், தமது செலவைக் கட்டுப்படுத்தி, தமது மகிழ்ச்சியை அடகு வைத்து தமது எதிர்காலத்திற்குச் சேமிப்பது எனும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். இதற்கு விதிவிலக்காக சிலர் இருந்திருப்பார்கள்.
அந்தக் கலாச்சாரத்தின் பின்னணியோடு புலம் பெயர்ந்த நாங்கள், அதே கலாச்சாரத் தாக்கத்தை புலம் பெயர்ந்த நாடுகளிலும் கடைப்பிடிக்கத் தொடங்கினோம். அதாவது எமது வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் எனும் ஆசையை அடகு வைத்து விட்டு, எமது சந்ததியின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் தேட முற்பட்டோம்.
ஆனால் அதே சமயம், அயலவரான ஆங்கிலேயக் குடும்பமோ வேறு விதமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்டிருந்தது. தமது எதிர்கால உத்தரவாதமாக வாழ்க்கைக் காப்புறுதி எடுப்பது சகலரின் வழக்கமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் வேலையற்றோருக்கு அரசாங்கம் உதவி புரிந்தது, குழந்தைகளின் தேவைகளுக்கும் அரசாங்கம் உதவியது. எனவே அவர்கள் இன்று என்ற ஒன்றுக்காக வாழத் தொடங்கினார்கள். நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளும் என்று நம்பினார்கள். இருப்பதையெல்லாம் தம்மீது செலவழிப்பதிலே குறியாக இருந்தார்கள் . இதற்கும் கூட விதிவிலக்குகள் உண்டு.
அதுவே இவர்களின் தேவை அவர்களுக்கு பேராசையாகவும்,அவர்களின் வாழ்க்கை முறை இவர்களுக்கு பொறுப்பற்ற தன்மையாகவும் தெரியக் காரணமாயிற்று. ஆனால் இங்கே இரண்டு கலாச்சாரத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு சந்ததி உண்டு. அதுதான் என்னைப் போன்றோரின் எதிர்காலச் சந்ததி.
நாம் இங்கு வாழும் போது, எமது வாழ்வை எம்மைப் போன்றோரோடு சேர்ந்து வாழப் பழகிக் கொண்டோம். ஆனால் எமது சந்ததியின் நிலை சிறிது தர்மசங்கடமானது. வீட்டிலே எமது கலாச்சாரப் போதனை, பின்பு பாடசாலைகளிலே ஆங்கில மாணவர்களுடன் சேர்ந்து கல்வி பயிலும் போது, நாட்டின் பெரும்பான்மையான ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தோடு ஒட்டிய வகையில் கல்வி பயிலுவது. இந்தக் குழப்பம் பலருக்கு தேவைகளையும், ஆசைகளையும் கலக்கிச் சாம்பாராக்கி விடுகிறது. இதைக் கையாளுவது, இடியப்பச் சிக்கலை விடுவிப்பது போன்ற வகையில் கையாளப்பட வேண்டும்.
எனக்கு எப்படி தேவைகளுக்கும், ஆசைகளுக்கும் வித்தியாசம் விளங்கப் படுத்தப் படாமல் போயிற்றோ, அதைப் போல அல்லாமல் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெளிவாக்கும் முறையில் புலம்பெயர்ந்த பெற்றோர்களோ? அன்றித் தாய்நாடுகளில் வாழும் பெற்றோர்களோ தமது வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இனி வரும் தலைமுறை, அதாவது எனது மகனின் காலத்தில் சில சமயம் அவர்களது குழப்பங்கள் தெளிவடையலாம். ஆனால் எந்தவொரு மனிதனுக்கும் தனது ஆணிவேரின் மூலம் தெரிந்திருக்க வேண்டும்.
தேவைகள் அர்த்தமுள்ள ஆசைகளாக மாறலாம், ஆனால் அடைய முடியாப் பேராசைகளாக மாறக் கூடாது.
இது ஒரு சாதாரண மனிதனின் யதார்த்தக் கண்ணோட்டமே!
சக்தி சக்திதாசன்
எந்தவொரு மனிதனுக்கும் தனது ஆணிவேரின் மூலம் தெரிந்திருக்க வேண்டும் – VERY NICE VARIGAL.
‘ஆனால் எமது சந்ததியின் நிலை சிறிது தர்மசங்கடமானது. ‘
~ இது கூர்ந்து கவனிக்கவேண்டிய விஷய்ம். சில நாட்களுக்கு முன் பள்ளி செல்லும் மழலை ஒருவன் வந்திருந்தார்..வீட்டில் தமிழ் மட்டுமே என்பதை தடபுடலாகச் சொன்னார். பள்ளியில் ஆங்கிலம். ஆனால் பாருங்கள். புலன் பெயர்ந்து வந்தவர்களை அந்த நாடு , அவர்கள் பெரிய சமுதாயத்தில் இணைய செய்யும் வசதிகளை புறக்கணிப்ப்து சரியல்ல. இங்கிலாந்து பள்ளிகளில், தீபாவளி. பாடபுத்தகங்களில் ராமனும், ரஹீமும். நூலகத்தில் தமிழில் நல்வரவு. Be a Roman in Rome. Long time back, I wrote a piece in the Hindu called, In Defence of the British Tinge. அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.