பார்வையற்றோரின் தற்போதைய அவல நிலை..

0

பவள சங்கரி

ஆறடி தூரத்திலிருந்து கைவிரல்களின் எண்ணிக்கையை சரியாகக் கனிக்கமுடிந்தால் அவர்கள் கண்பார்வை உள்ளவர்களாம். மூன்றடி தூரத்திலிருந்து கனிக்க முடியாவிட்டால்தான் அவர்கள் பார்வையற்றவர்களாம். 1926இலிருந்த இந்த நிலையை மாற்றி புது உத்தரவால் சுமாராக 40 இலட்சம் மக்கள் பார்வை உள்ளவர்கள் பட்டியலில் இணைந்துவிடுவதால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறப்பு சலுகைகள் மறுக்கப்பட்டுவிடுகின்றன. முந்தைய கணக்கெடுப்பின்படி நமது இந்தியாவில் 1 கோடி 20 இலட்சம் பேர் பார்வையற்றவர்கள். ஆனால் தற்போதைய திருத்தத்தின்படி இவர்கள் 80 இலட்சமாகக் குறைக்கப்பட்டுவிட்டனர். உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி 2020க்குள் பார்வையற்றவர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்ற திட்டத்தை இப்படி ஒரு ஆகாவழி திட்டத்தின் மூலம் குறைத்துவிட்டனர்! ஆனால் இதன் உண்மையான நோக்கம் இதுவல்ல. சரியான சிகிச்சை, சத்துணவு வழங்கல் போன்ற நல்ல நடவடிக்கைகள் மூலமே இந்த குறைகளை அகற்றவேண்டியதுதான் உலக சுகாதார மையத்தின் குறிக்கோள். ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்காக இப்படி ஒரு குறுக்கு வழியை நடைமுறைப்படுத்துவது நியாயமா? இதனால் கண் பார்வையோடு, தங்களுக்குக் கிடைக்கும் சிறப்புச் சலுகைகளையும் இழக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளவர்கள் இந்த 40 இலட்சம் மக்கள் என்பது வேதனைக்குரிய செய்தி.

உலகில் கண் பார்வையற்றோர், மொத்த சனத்தொகையில் 1% பேர். இந்த நிலையைக் குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் இதை 0.8% ஆகக் குறைக்க முடிவு செய்து, அனைத்து நாடுகளிலுள்ள அரசுகளுக்கும் இதைப் பரிந்துரை செய்துள்ளது. நமது அரசு மிக புத்திசாலித்தனமாக ஒரு சிறு அறிவிப்பின் மூலமாகவே இதை நிறைவேற்றிவிட்டதுதான் ஆச்சரியமான செய்தி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *