உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம்
1995ஆம் ஆண்டு, பாரீசில் நடைபெற்ற யுனெசுகோ அமைப்பின் 28வது மாநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் நாள் உலக புத்தக தினம் கொண்டாட முடிவெடுத்து அறிவித்தது. அனைத்து நாட்டு மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் போன்றவற்றின் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களிடையே சுமுகமான உறவை நிலைநாட்டவும், புரிதலை ஏற்படுத்துவதற்கும் புத்தகம் ஒரு சிறந்த கருவி என்பதைக் கருத்தில்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி உலகின் 100 நாடுகளுக்கும் மேலாக புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
1990 களில் அறிவொளி இயக்கத்தினர் ஊர் தோறும் புத்தகங்களை மிதிவண்டியிலும், தள்ளு வண்டியிலும் வைத்து தெரு முனைகள்தோறும் நின்று விற்று வந்திருக்கிறார்கள். இன்றும் புத்தக தினங்களில் இவர்களின் சேவை தொடர்ந்துகொண்டிருப்பதாகவே அறியமுடிகிறது.
உலகப்புகழ் பெற்ற ‘டான் குவிக்சாட்’ நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ்,ஜூலியஸ் சீசர், ஒத்தெலோ, மெக்பெத் போன்ற உலக மகாக்காவியங்கள் படைத்த வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா போன்றோர் மறைந்த தினம் இன்று. ஷேக்ஸ்பியர் , விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட பிரபலமான உலக எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் ஏப்ரல் 23 அமைந்திருப்பது சிறப்பு.
“ஒரு நல்ல வாசகன் மூலமாகவே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்பெறுகிறது” என்கிறார் ஜார்ஜ் பெர்னாட்ஷா. அந்த வகையில் நல்ல வாசகர்கள் அனைவரும் இன்று கொண்டாடப்படவேண்டியவர்கள்.
“ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது”, என்பது பைபிள் வாசகம். இதையே மாவீரன் நெப்போலியன், “புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்” என்று கூறியுள்ளார். மனதில் நற்சிந்தைகள் மலரவும், பண்பாடும், கலாச்சாரமும், பாரம்பரியங்களும் பாதுகாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த உலக புத்தக தினம் வழியமைக்கிறது!
அட்சய திருதியையில் தங்கம் வாங்க முட்டி மோதும் மக்கள் உலக புத்தக தினத்தில் ஒரு புத்தகமாவது வாங்கவேண்டும் என்ற கோட்பாடையும் உள்ளத்தில் கொண்டால் போதும் இந்த உலக புத்தக தினம் நம் நாட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவிடும் என்பது திண்ணம்!