சித்திரை மகளே வாராயோ
சித்திரை மகளை கரவொலி எழுப்பி
சப்தமாய் நாமும் வரவேற்போம்
நித்திரையில் கூட புத்துயிர் பெற்று
நிம்மதி காண வரவேற்போம்
காலையில் அன்று கனிமுகம் விழித்து
காண்போமே வருடம் முழுதும் சுபிட்சம்
கன்னிச் சித்திரை மகளாமே
ஹேவிளம்பி அவளை வரவேற்போம்
தமிழ் மாதங்களில் முதலும் இவளே
தாய்த் தமிழாலே போற்றுவோம் இவளை
சித்திரை நிலவுக்கும் சிறப்புண்டாம்
சித்ரா பௌர்ணமி நன்னாளிலே
கள்ளழகர் தான் ஆற்றில் இறங்கி
சித்திரை விழாவைச் சிறப்பித்தாரே
மாங்கல்ய பலன் தான் அடைந்தனளே
மீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்முடனே
மாங்கனி எறிதல் விழாவும் தானே
மாட்சிமை கண்டதே சித்திரையில்
இத்தனை பெருமை ஒருசேரப் பெற்ற
சித்திரை மகளே வாராயோ
இன்பமே எல்லார்க்கும் அள்ளி வழங்கிட
இன்முகத்துடனே வாராயோ!
– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.