குறளின் கதிர்களாய்…(172)
செண்பக ஜெகதீசன்
அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.
-திருக்குறள் -165(அழுக்காறாமை)
புதுக் கவிதையில்…
பகையென தனியே
வேண்டாம்,
பொறாமை குணம் கொண்டவர்க்கு..
அதுவே பகையாகி
அழித்திடும் அவரை…!
குறும்பாவில்…
பொறாமை குணம் கொண்டோர்
பகையென ஏதுமின்றி,
அதுவே பகையாகி அழிவர்…!
மரபுக் கவிதையில்…
மனதில் பொறாமை கொண்டவரை
முழுதாய் அழித்தே ஒழித்திடத்தான்
தனியே பகையென ஒன்றுவேண்டாம்,
தாங்காப் பகையிது ஒன்றுபோதும்,
கனலாய்த் தீங்கது செய்திடவே
கொடிய பகைவர் தவறிடினும்,
மனதி லுள்ள பொறாமையதே
மாறாப் பகையாய் அழித்திடுமே…!
லிமரைக்கூ..
பொறாமை என்பது பகை,
கொண்டவரை அழிக்குமது பகைவரின்றியே,
பகைவேறிலை அதற்கு மிகை…!
கிராமிய பாணியில்…
கொள்ளாத கொள்ளாத
பொறாம கொள்ளாத,
ஆயிரமிருந்தாலும் அடுத்தவர்மீது
பொறாம கொள்ளாத..
பொறாமகொண்டவர அழிச்சிடத்தான்
எதிரி தனியே வரவேண்டாம்,
அந்தப் பொறாமதானே
எதிரியாயிருந்து அவன
எல்லாஞ்சேத்து அழிச்சிடுமே..
அதால
கொள்ளாத கொள்ளாத
பொறாம கொள்ளாத,
ஆயிரமிருந்தாலும் அடுத்தவர்மீது
பொறாம கொள்ளாத…!
-செண்பக ஜெகதீசன்…