இன்னம்பூரான்
ஜூன் 25, 2017

ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் முதல் பகுதி:

“தனிமனிதன் இன்புறவேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்கவேண்டும். சமுதாயம் பழங்காலத்துத் தேர் போன்றது. அதை எல்லோரும் இழுக்கவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு இன்பம் உற, சிலர் இழுத்துச் செல்கின்ற தேர் அன்று இது. ஒவ்வொருவரும் தன் கடமையைக் குறைவில்லாமல் செய்ய, ஒவ்வொருவரும் தமக்கு உரிய பங்கைப் பெறுமாறு, அமைந்திருப்பதே நல்ல சமுதாயம் ஆகும்.”

-இது சுதேசமித்திரன் இதழில் பேராசிரியர் மு.வரதராசன் ஏப்ரல் 1957இல் எழுதியது.

unnamed

…அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள்…அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்…வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. இராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன. அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும்.

[ஏப்ரல் 25. பேராசிரியர் மு.வரதராசனாரின் (1912-1974) பிறந்த தினம். அவர் நினைவில், தெ. ஞானசுந்தரம் தினமணியில் 2012-இல் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்: இதை கொடுத்து அருளியது, பசுபதிவுகள்: http://s-pasupathy.blogspot.in/2016/04/]

சிந்தனையை கிளரும் மேற்படி அறிவுரையை நடைமுறைக்குக் கொணர, தமிழ்நாட்டு சமுதாயம் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லமுடியாது. ஏனெனில், இதற்கு எதிர்வினையாகத்தான், அரசியலும், பிரதிநிதித்துவமும், பெரிய சமுதாயமும், பல சமூகங்களும் நடந்து கொண்டன. சினிமாத்தனம் நிறைந்த பண்பில் நடிப்பு சுதேசித்தனம் மலிந்திருந்தது. இந்த அறுபது வருடங்களில் திராவிடக்கட்சிகள் தான் தேர்தல் மூலமாக ஆட்சியை பெற்று, பின்னர் பல காலகட்டங்களில், தேர்தலை ஒரு நாடகமாக ஆடி, அதிலும் சகுனியாட்டம் ஆடி, அரசு மேலாண்மையை சீர்குலைத்தன. பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரை பிரதிநிதித்துவம், சுயநலனுக்கு மட்டும் தொண்டு செய்தது. லஞ்சம் வாங்குவது ஒரு தொத்து வியாதியாக மக்களை பற்றிக்கொண்டது. இதற்கு நடுவில் சில வேடிக்கைகளும் இடம் பெறுகின்றன. காரசாரமான கடுஞ்சொல் வீசி, ஆத்திகத்தின் மீது, பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தெளித்த நாத்திக தொல்லைக்காட்சிகளில் ராப்பகலாக சாமி, சம்பிரதாயம், கும்பிடு, ஐயருக்குக் காணிக்கை உயிரை வாங்குகின்றன. காசு வர்ரது. அதான். பெரியாருக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு மண் சோறு உண்கின்றனர், தீ மிதிக்கின்றனர், மொட்டை போடுகிறார்கள், குங்குமதிலகர்கள், எல்லா திராவிடகட்சிகளிலும்.

எனக்கு என்ன அச்சம் என்றால், மு.வ, அவர்களின் தேரை உடைக்கும் இவர்கள், அதை விறகாகக் கொளுத்தி, சிக்கன் பிரியாணி செய்து, அதை அன்னதானம் செய்து கூட்டம் கூட்டி, வருங்கால சந்ததியையும் மூளைச்சலவை செய்து விடுவார்களோ என்ற அச்சம்.

தாமதம் செய்யாமல், நாம் அவரவருக்கு முடிந்தவரை மு.வ. அவர்களின் அறிவுரையை நடைமுறைக்குக் கொணர முயல்வோமாக. படித்தால் மட்டும் போதாது. அவரவர் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

-#-
சித்திரத்துக்கு நன்றி:
https://siliconshelf.files.wordpress.com/2012/06/mu_-varadarajan.jpeg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *